பிரேசிலில் தோழர் லூலா வெற்றி: சோசலிச நம்பிக்கை மீண்டும் எழுச்சி பெற்றது!

பிடல், ராவுல், சாவேஸ், மொரால்சின் உற்ற தோழன், இலத்தீன் அமெரிக்க இடதுசாரிகளின் மகத்தான மக்கள் போராளி தோழர் லூலா வரலாற்று வெற்றியை பெற்றார்.

பிரேசிலில் வலதுசாரி ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டு, இடதுசாரி ஆட்சி மீண்டும் மலர்ந்துள்ளது.

பிரேசில் நாட்டின் அதிபர் தேர்தலில் அதிபராக லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா வெற்றி பெற்றுள்ளார்.

உலகின் நான்காவது மிகப்பெரிய நாடான பிரேசிலில் கடந்த 2-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்டனர். இருந்தபோதிலும், தற்போதைய அதிபர் தீவிர வலதுசாரி போல்சனரோவுக்கும், இடதுசாரியான லூலாவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இதனிடையே, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோவுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்து வந்தன. ஆனால், அங்கு உண்மையான கள நிலவரம் வேறு மாதிரி இருப்பதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வந்தனர். குறிப்பாக, தற்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ கொரோனா சூழலை கையாண்ட விதமும், அமேசான் மழைக்காடுகள் அழிப்பு கொள்கையும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், எதிர்ப்பலைகளையும் உருவாக்கி இருந்தது.

இந்நிலையில், அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முதல் எண்ணப்பட்டு வந்தன. இதில் தொடக்க சுற்றுகளில் அதிபர் போல்சனரோவே முன்னணியில் இருந்துள்ளார். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் இடதுசாரி தலைவர் லூயிஸ் இனாசியோ லூலா முன்னிலை வகித்தார். இந்த சூழலில், 50.9 சதவீத வாக்குகளை பெற்று அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா வெற்றி பெற்றதாக பிரேசில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்நாட்டு நடைமுறைப்படி 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளை யார் பெறுகிறார்களோ, அவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதன்படி, லூயிஸ் இனாசியோ பிரேசில் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

பிரேசிலில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லூயிஸ் இனாசியோ லூலா டா (77), தீவிர கம்யூனிஸ கொள்கையை கொண்டவர் என்பதால் அவரின் வெற்றியை நாம் ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். ஏற்கனவே 2003 முதல் 2010-ம் ஆண்டு வரை பிரேசில் நாட்டின் அதிபராக பதவி வகித்தார். இவரது ஆட்சியில் பொதுதுறை பலப்படுத்துவது, தனியார் மூலதனத்தை கட்டுக்குள் கொண்டு வருதல், சர்வதேச மூலதனத்தை நுட்பாக எதிர்கொள்ளுதல் போன்ற பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக, பிரேசில் பொருளாதாரம் மிகவும் வலுவானதாக மாறியது.

இருந்தபோதிலும், அடுத்து நடைபெற்ற அதிபர் தேர்தலில் வலதுசாரி பொய்பிரச்சாரம் நேட்டோ சதி, சிஐஏ மூலம் ஸ்பான்ஸ்சர்ஸ் கலவரங்கள் தூண்டபட்டதால் அவர் தோல்வி அடைய நேர்ந்தது. மேலும், அதிபராக பதவியில் இருந்தபோது ஒரு கட்டுமான நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அவர் மீது பொய்யான குற்றச்சாட்டு ஊடகங்கள் மூலம் ஊதி பெரிதாக்கப்பட்டது.

சிறையில் ஒன்றரை ஆண்டுகளை கழித்த அவர், தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை பொய் என நிரூபித்து லூலா விடுதலை ஆனார். இதன் தொடர்ச்சியாக, அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தற்போது பெரும் வெற்றி பெற்றார். இது அவரது ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல, உலக இடதுசாரிகளுக்கும் ஜனநாயகவாதிகளுக்கும், முற்போக்காளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.

NIRUBAN GANESAN