‘குற்றப்பரம்பரை’ கோவிந்தா! பாலா, பாரதிராஜா வேறு படங்களை இயக்குகிறார்கள்!

‘தாரை தப்பட்டை’ படத்துக்குப் பின் வேல ராமமூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’ கதையை படமாக எடுக்க இயக்குனர் பாலா திட்டமிட்டிருந்தார். விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா ஆகியோரை வைத்து இப்படத்தை இயக்கப் போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து அப்படத்துக்கான முதற்கட்ட பணிகளையும் கவனித்து வந்தார்.

உடனே இயக்குனர் பாரதிராஜா, ரொம்ப காலமாக சொல்லிவந்த ரத்னகுமாரின் ‘குற்றப்பரம்பரை’ கதையை படமாக்கப் போவதாக அறிவித்தார். அத்துடன் அக்கதையின் முக்கிய களமான பெருங்காமநல்லூருக்கே போய் அவசர அவசரமாக படபூஜை நடத்தினார்.

இதனையடுத்து, ‘குற்றப் பரம்பரை’ கதை தொடர்பாக பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது. நாளொரு குற்றச்சாட்டும், பொழுதொரு எதிர்குற்றச்சாட்டுமாக விவகாரம் சந்தி சிரித்தது.

இந்நிலையில், ‘குற்றப்பரம்பரை’ கதையை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, புதுமுகங்களை வைத்து வேறொரு படத்தை இயக்க பாலா திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை குறுகிய காலத்தில் எடுத்து முடிக்க பாலா திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுபோல், ‘குற்றப் பரம்பரை’ படத்துக்கு முந்திக்கொண்டு பூஜை போட்ட பாரதிராஜாவும், அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, ‘அலைகள் ஓய்வதில்லை’ இரண்டாம் பாகத்தை இயக்க கிளம்பிவிட்டார். இதன் ஹீரோவாக இயக்குனர் வசந்தின் மகன் ரித்விக் வருணும், ஹீரோயினாக நடிகர் லிவிங்ஸ்டன் மகளும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்களாம். இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறதாம்.

அப்படியென்றால்….?

இரண்டு ‘குற்றப்பரம்பரை’களும் கோவிந்தா…!?!