பிக்பாஸ் நிகழ்ச்சியும், மன வக்கிரங்கள் பற்றிய அமெரிக்க ஆராய்ச்சியும்!

பிக் பாஸ் –

கமலுடனான பரணியின் உரையாடலுக்குப் பின், 1971-ல் அமெரிக்காவில் நடைபெற்ற மனித மனவக்கிரங்களை பற்றிய ஒரு ஆராய்ச்சி நினைவுக்கு வந்தது..

ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் நடைபெற்ற மிகப் புகழ் பெற்ற அந்த ஆராய்ச்சி ‘Stanford Prison Experiment’. 15 நாள் வரை நடப்பதாக இருந்த ஆராய்ச்சி, நான்கே நாளில் பல்வேறு பிரச்சனைகளுடன், பலருக்கு பைத்தியம் பிடிக்க, முடிவுக்கு வந்தது. அந்த ஆராய்ச்சிக்கும் பிக்பாஸ்க்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது….

1) குறிப்பிட்ட நாள் வரை பங்கேற்பாளர்கள் வெளி உலகை பார்க்க முடியாது.

2) கலந்து கொண்ட அனைவரின் நடவடிக்கைகளும் கேமரா மூலமாக கண்காணிக்கப்படும்.

3) பங்கேற்பாளர்களுக்கென டாஸ்க்குகள் வழங்கப்படும். வெற்றி பெறுபவர்களுக்கு சின்ன சின்ன பரிசுகள், பாராட்டுகள் வழங்கப்படும்.

4) கலந்து கொண்டோருக்கென சிறப்பு ஒழுக்க விதிகள் இருந்தன. சரியாக பின்பற்றுபவர்களுக்கு பாராட்டும் பரிசும் கிடைத்தது.

5) முதலில் குழுக்களாக பிரிக்கப்பட்டு குழு மனப்பான்மை வளர்க்கப்பட்டது. குழுவாக முதலில் பிரிந்தார்கள். அதன்பின் தனி நபருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் தனித் தனியாக திரிந்தார்கள்.

பிக்பாஸை அதிகமாக பார்த்ததில்லை. ஆனால் கவனித்த வரையில் ஒவ்வொரு நாளும் சில டாஸ்க்குகள் வழங்கி வெற்றி பெற்றவருக்கு பரிசுகள் வழங்குகிறார்கள். ஆரம்பத்தில் மிக வேடிக்கையாக நடக்கும் இந்த விசயம் உண்மையில் மனதுக்குள் சக போட்டியாளரின் மேல் கடும் பொறாமையை விளைவிக்கும். அந்த பரிசு உப்பு பெறாதது தான். ஆனால் வெற்றி கொடுக்கும் போதை அதை கவனிக்க விடாது. ஆர்த்தி அஜீத் பாடலில் வென்ற ஒருவரிடம் வெறுப்பை காட்டிக் கொண்டிருந்ததை பார்த்தேன்.

ஸ்டான்போர்ட் ஆராய்ச்சியில் இதே போன்ற டாஸ்க்குகள் அல்லது ஒழுக்க விதிகள் வழங்கப்பட்டன. யார் சரியாக நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும். உதாராணமாக நல்ல உணவு. ஆரம்பத்தில் உணவு எல்லாம் ஒரு மேட்டரா என்றவாறு அணுகியவர்கள், ஒருவன் மட்டும் நல்ல உணவு சாப்பிட நாமெல்லாம் கிடைத்ததை உண்பதா என்று வெறி கொண்டு அலைந்தனர்.

உணவு மனிதனின் மிக மிக மிக அடிப்படைத் தேவை அல்லவா?? அதில் தான் அவனுடைய அத்தனை வக்கிரமும் வெளிப்படும். இங்கேகூட முட்டை பிரச்சனை, சாக்லேட் மில்க் பிரச்சனை என்று உணவு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஆரம்பித்தது. உணவே கிடைக்காதபோது ‘பசி பத்தும் செய்யும்’. ஆனால் அடிப்படை உணவு கிடைக்க ஆரம்பித்தால் அடுத்து ‘ருசி பத்தும் செய்யும்’.

ஹிட்லரோட சித்ரவதை கூடங்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க. வகை வகையா சிந்திச்சு மனிதர்களை கொன்று குவித்த இடங்கள். (Auschwitz Death Camps)

நூற்றுக்கணக்கான மனிதர்களை மொத்தமா கூண்டில் அடைச்சு உள்ளே காற்று போகாம சீல் செய்வது. குழந்தைகள் காலை பிடித்து தலையை சுவற்றில் அடிப்பது. 16 சதுர அடி உள்ள இடத்துல 4 மனிதர்களை நிற்க வைத்து பூட்டி விடுவது. நிற்க மட்டுமே முடியும். அந்த நிலையிலேயே சாப்பாடு கூட இல்லாம மலம், ஜலம் கழிச்சு நாறி போய் ஒவ்வொருத்தரா மரணிக்க விடுவது. என ரசித்து கொலை செய்தார்கள்.

இதில், சக மனிதர்களை, பக்கத்து வீட்டுக்காரகளை கொன்று குவித்தது அதிகார போதை மற்றும் மனிதர்களிடம் தோன்றிய இன வேறுபாடுகள். இனம் என்று இல்லை. ஜாதி, மதம், பணம், இனம், நிறம், படிப்பு, பாலுறுப்பு, பதவி என எந்த வேறுபாடும், கடுமையான வெறுப்பினை வழங்கத்தான் செய்யும்.

ஆக, உணவு போன்ற அடிப்படை தேவையில் கை வைத்தாயிற்று, மனிதர்களுக்குள் பாகுபாட்டினை விதைத்தாயிற்று, அத்தோடு ஒருவருக்கு அதிகாரத்தை வழங்கி, மற்றவர்களுக்கு தலைவர் ஆகும் வழியிருக்கிறது என்ற வாய்ப்பை வழங்கி அதிகார போட்டிக்கு வழி செய்தாயிற்று. இனி வெறுப்பையும் காழ்ப்பையும் பேஷாக அறுவடை செய்யலாம் தானே… !

அதிகாரம் ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்பதை தெரிந்து கொள்ள ‘Stanford Prison Experiment’ டாகுமண்டரி அல்லது படத்தை பாருங்கள். 4 நாளில் இழுத்து மூடிய, பிக் பாஸுக்கெல்லாம் தாத்தா ரியாலிட்டி ஷோ அது.

எந்த மனிதனும் சக மனிதனிடம் இருந்து எந்த வகையிலும் தாழ்ந்தவனாக இருக்க முடியாது. ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணநலனும் தேவையும் மாறுகிறது. ஒரே வீட்டில் வாழும் நிஜ குடும்பங்களுக்கே பஞ்சாயத்து ஓய்வதில்லை. இந்த ஃபேக் குடும்பங்கள் பாடு என்ன ஆவது.

ஆனா ஒண்ணு… இவ்வளவு கேமராக்களுக்கு மத்தியிலேயே இவ்வளவு பஞ்சாயத்து ஓடுதே… ஏதோ ஒரு காரணத்தால் நிஜமான ஜெயிலுக்கு போக வேண்டி வந்தால்…. ??!!

நேசித்தே வாழ்வோம்.

 SARAV URS