“ஓவியாவை சினேகன் மீண்டும் மீண்டும் அணைக்க முயன்றது சற்று வித்தியாசமாக பட்டது!”

25.07.2017 – பிக் பாஸ்: 25.07.2017

***

அரசாங்க மருத்துவமனையின் பொதுவார்டுகளில் உள்ள நோயாளிகளைப் போல படுக்கைகளில் சாய்ந்துகொண்டு, பொழுது பூராவும் வம்பு பேசிக் கொண்டிருந்த போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் வைத்தார் ஆப்பு. வேலையில் ஈடுபட வைத்ததால் வம்பு பேசுதல் குறைவது ஒருபக்கம், அதனால் இணக்கமும் ஏற்படும்.

ஆனால் நிகழ்ச்சியின் வடிவமைப்பின்படி சண்டை நிகழ்ந்து கொண்டேயிருந்தால் தானே டிஆர்பி ஏறும்? ஒருவேளை அதிகமான பணிகளினால் வேறு புதிய பிரச்சனை ஏற்படட்டும் என்று கோள்மூட்டி பிக் பாஸ் நினைக்கிறாரோ?

வேலை செய்யச் சொன்னது சரி. ஆனால் சைக்கிள் மிதித்தால் தான் சுச்சா போக முடியும் என்கிற விதியெல்லாம் அதீதமானது.

மற்றவர்கள் இதை ஜாலியாக ஏற்றுக்கொண்ட போது, அதுவரை பெரும்பாலும் வாயில்லாத பூச்சியாக இருந்து வந்த வையாபுரி கடுமையாக எதிர்த்தது சரியான விஷயம். ‘அப்பா’ காரெக்ட்டராகவே மாறி விட்டார்.

இருப்பிற்காக அதிகாரத்திடம் பணிவது வேறு வழியில்லாத சூழலில் சரிதான். ஆனால் அதற்கும் ஓர் எல்லை இருக்கிறது. சுயமரியாதை ரொம்பவும் கீழிறிங்கும்போது எதிர்த்து குரல் கொடுப்பதே சரி. பின்னர் வையாபுரியின் கோரிக்கை ஏற்கப்பட்டது. கேபிள் சங்கர் சொல்வது போல ‘கேட்டால் கிடைக்கும்’

***

ஜூலியிடம் சுமூகமாக ஓவியா தொடர்ந்து முயற்சிக்கிறார். பாராட்டு. ஆனால் அது நேர விரயம். ஏனெனில் ஜூலியின் மெயின் சுவிட்ச், காயத்ரியிடம் இருக்கிறது. குடும்ப மற்றும் அலுவலக அரசியலில் கூட இது முக்கியமானது. எந்தப் பூட்டுக்கு எந்தச் சாவி என்று அறிந்திருப்பது மிக முக்கியம். எப்போது திறக்க வேண்டும் என்பதும்.

***

கடந்த நாளின் எல்லாக் கசப்புக்களையும் கழற்றிவிட்டு ‘ஒவ்வொரு நாளையும் புதிதாக துவங்க வேண்டும்’ என்கிற ஓவியாவின் பாலிசி கூல்.

மற்றவர்கள் தங்களின் சுயத்தோடு இயல்பாக இருக்கிறார்கள். எனவே மாட்டிக் கொள்கிறார்கள். ஆனால் ஓவியா தன்னுணர்வோடு இருக்கிறார். எனவேதான் அவரால் மற்றவர்களைக் கவரும்படி இருக்க முடிகிறது. ஆனால் அது நடிப்பு தானே என்கிற அபிப்ராயம் எழுந்திருக்கிறது.

ஆம். இதுவொரு விளையாட்டு. உணர்ச்சிகளை தன்னுணர்வுடன் கையாளத் தெரியாவிட்டால் தோற்று விடுவீாகள். மனிதர்களுக்குள் உள்ள அடிப்படையான சில குணங்களால் அதை எளிதில் பின்பற்ற முடியாது என்பதே இந்த நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள் முன்வைத்திருக்கும் சவால்.

ஆனால் இந்த விளையாட்டின் மையத்தைப் புரிந்துகொண்ட ஓவியா மற்றும் கணேஷ்ராம் போன்றவர்களால் இந்த task-ஐ எளிதில் கையாள முடியும். அதை விட்டுவிட்டு வழக்கமான வாழ்க்கையைப் போல, அல்லது இங்கேயே நிரந்தரமாக இருப்பது போல, சீரியலில் வரும் மாமியார் – மருமகள் சண்டை போட்டால் சக்தி மட்டுமே விரயமாகும். இதை வேஷம் என்பது போல் புரிந்து கொள்வது அபத்தம். இதுவொரு strategy.

ஆனால் இன்னொரு கோணமும் இருக்கிறது. நீங்கள் என்னதான் திட்டமிட்டு உள்ளே வந்திருந்தாலும் அங்குள்ள உணர்ச்சிகளை, மோதலை நடைமுறையில் எதிர்கொள்வதற்கான யூகமும் வேண்டும்.

நம் வாழ்வின் நடைமுறை உதாரணத்தையே பார்ப்போம். ‘என்னதான் சீண்டப்பட்டாலும் நிதானமாக கையாள வேண்டும்’ என்று நன்றாகத் தயாராகிய பிறகே ஒரு பிரச்சினைக்குள் முன்கூட்டிய திட்டமிடலுடன் நாம் செல்வோம். ஆனால் அங்கு வெடிக்கும் ஒரு தீப்பொறி நம்முடைய ஒட்டுமொத்த நிதானத்தையும் எரித்து விடும்.

என்னதான் திட்டமிட்டு பிக்பாஸிற்குள் கலந்து கொண்டிருந்தாலும் இந்த நடைமுறை ஆபத்தைக் கடப்பது மிக கடினம். கணேஷூம் ஓவியாவும் ஏறத்தாழ இதை சரியாக கையாள்கிறார்கள். இதுவொரு task என்கிற புரிதல் அவர்களுக்கு இருக்கிறது. இது புரியாமல்தான் ‘திருடன்’ விளையாட்டில் சக்தி அபத்தமாக வீழ்ந்தார்.

நமக்கு காணக் கிடைக்காத காட்சிகளின் வழியாக நேரும் உளைச்சல்களையும் ஓவியா தாங்கிக் கொள்வது அவரது மனஉறுதியைக் காட்டுகிறது. அது இயலாத சமயங்களில், பேசுவதற்கான துணையை அவர் தேடுவது, அதற்காக ஏங்குவது இயல்பே. திட்டமிடலையும் தாண்டிய உணர்ச்சியிது.

***

நமீதாவின் ‘வில்லி’ பாத்திரத்தை ‘ரைசா’ கைப்பற்ற நினைக்கிறார் போல. ஒரு சாதாரண விஷயத்திற்கு அவர் ஓவியாவிடம் எரி்ச்சலைக் காட்டுவது அவருடைய அடக்கி வைத்திருந்த பொறாமையைக் காட்டுகிறது.

‘சாப்பிடும்போது பேசாதே’ என்பதற்குப் பதிலாக, ‘நான் மேக்கப் போடும்போது பேசாதீர்கள்’ என்றிருந்தால் ஓவியா மட்டுமல்ல, எவருமே அவரிடம் பெரும்பான்மையான நேரம் பேச முடியாதபடி போகும்.

‘ஓய்.. ஏய்” என்றெல்லாம் கூப்பிடாதீர்கள், எனக்குப் பிடிக்காது’ என்று ரைசா, சிநேகனிடம் தனிமையில் கூறியது சரியானது. குறிப்பாக பணியிடங்களில் பெண்கள் கறாராக பின்பற்ற வேண்டிய விஷயம் இது. தமக்குப் பிடிக்காத விஷயத்தை சகித்துக் கொண்டிருக்காமல் சம்பந்தப்பட்டவர்களிடம் நயமாகவோ, உறைக்கும்படியோ சொல்லி விடுவது நல்லது.

***

சிநேகன், பெண்களைத் தொடுவது பற்றி பல கொச்சையான கமெண்ட்டுகளை இணையத்தில் காண நேரும்போது அவை குறித்து எனக்கு எரிச்சலாகவும் வருத்தமாகவும் இருக்கும். தீயநோக்கம் இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் ஒரு பெண் வாந்தியெடுக்கும்போது கையை ஏந்துவதற்கு – அது நடிப்பாகவே இருந்தாலும் – நெகிழ்ச்சியான மனதுள்ளவராக இருக்க வேண்டும்.

ஆனால் நேற்று சிநேகன் ஓவியாவிடம் மன்னிப்பு கேட்கும் சாக்கில் மீண்டும் மீண்டும் அணைத்துக் கொள்ள முயன்றது மட்டும் சற்று வித்தியாசமாகப் பட்டது. ஓவியா அதை மிக நாகரிகமாக கடந்து சென்றார். ”ஜூலி’ என்கிற விகுதியை அவர் அவமானத்தின் அடையாளமாக கருதுவது ஆழமான நோக்கில் புரிந்துகொள்ள வேண்டியது.

**
காயத்ரி – ஓவியா இடையில் ‘பிக் பாஸ்’ தலையிட்டு பஞ்சாயத்து செய்தால் அது இந்த விளையாட்டின் அடிப்படைக்கு எதிரானது. இதன் பின்னால் வேறு காரணங்கள் இருக்கலாம். தன்னிச்சையாக இயங்குவதுதான் இந்த விளையாட்டின் அழகு.

இதற்கு முன்பு பரணி அத்தனை மனஉளைச்சலுடன் இருந்த போது ‘பிக் பாஸ்’ ஏன் தலையிடவில்லை?

***

முன்பெல்லாம் எவராவது பகலில் கண் அசந்தால் நாயொன்று குரைக்கும். இப்போது அந்த நாயின் ஒலியைக் காணவில்லை. தொண்டை சரியில்லையா, செத்துப் போய் விட்டதா, அல்லது காயத்ரி டீமின் ராவடிகளைக் கண்டு பயந்தோடி விட்டதா என்று தெரியவில்லை.

SURESH KANNAN