“நீட் தேர்வு விவகாரம்: “கூட்டாட்சி குறித்து கேள்வி எழுப்ப நேரிடும்!” – பாரதிராஜா

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், நீட் தேர்வு எழுதக் காத்திருக்கும் தமிழக மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களில் பலர், அவ்வளவாக படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களால் வெளிமாநிலங்களில் தேர்வு மையத்தை எப்படிக் கண்டுபிடித்துச் செல்ல முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மையங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால், உடனடியாக வெளிமாநிலங்களுக்குச் செல்ல எப்படி டிக்கெட் புக் செய்ய முடியும் என்பன போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இது குறித்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையை சேர்ந்த இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது:

நீட் தேர்வு முறையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நீட் தேர்வினை மே 6-ம் தேதி நடத்தியே ஆகவேண்டும் என்ற நிலையில், எங்களது பிள்ளைகள் இந்தத் தேர்வினை ராஜஸ்தான், கேரளா, அஸ்ஸாம் ஆகிய வெளிமாநிலங்களில் சென்று எழுத வேண்டும் எனக் கடைசி நிமிடத்தில் அறிவித்திருக்கிறார்கள். தமிழ் பிள்ளைகள் தமிழ்நாட்டில் தேர்வு எழுத விடப்படாதது ஏன் என்று தெரியவில்லை. எங்கள் மாணவர்கள் தேர்ந்தவர்கள். நடுத்தட்டு, அடித்தட்டு மாணவர்கள்  இப்படி வேறு மாநிலங்களுக்குச் செல்ல குறைந்தபட்சம் தாயோ, தந்தையோ ஒருவருடன் செல்ல போக்குவரத்து செலவு, அங்கே தங்கும் செலவு இப்படிப் பல சிக்கல் இருக்கிறது.

மாணவனின் பொருளாதார அடிப்படையைத் தெரிந்து கொள்ளாமல், அவனை ஒதுக்கணும், ஓரங்கட்டணும் என்ற எண்ணத்துடனேயே இந்த மாதிரி ஒரு திட்டம் கொண்டு வந்துள்ளதா அரசு என்று தெரியவில்லை. இந்த மாணவர்களைப் போகாதீர்கள் என்று தடுக்க முடியும். வெளி மாநில மாணவர்களைக் இங்கு வராதீர்கள் என்று தடுத்து நிறுத்த முடியும். ஆனால், எங்கள் போராட்டத்தினால் தகுதியுடைய எங்கள்  மாணவர்கள் தங்கள் இடங்களை இழப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்த முறை அவர்கள் நீட் தேர்வு எழுதி வரட்டும். இந்தத் தேர்வுக்கு நாம் போகவில்லையென்றால் நஷ்டம் நமக்குத்தான். நம் மாணவன் இடத்தில் வேறு மாநிலத்தவன் உட்காரக் கூடும்.

அதனால், மற்ற மாநிலங்களுக்குச் சென்று வரும் எங்களது மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என அரசை வலியுறுத்த முதலவர் அல்லது சுகாராத்துதுறை அமைச்சரைச் சந்திக்கவுள்ளோம். அரசு அளிக்கும் ஆயிரம் ரூபாய்  சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் காப்பிகூட குடிக்கக்கூட போதாது. வசதியில்லாத மாணவர்கள் இந்தத் தேர்வினை எழுதச் சென்று வரும்வரையில் தேவைப்படும் முழு பொருளாதார உதவியையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும். நீட் தேர்வை இந்தத் தடவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தால்  இதை முழுமையாக ஆதரிக்கின்றோம் என்று அர்த்தமில்லை. இதற்குப்பிறகு  நீட்டை எதிர்த்து கடுமையாக போராடி நீட் தேர்வினை ரத்து செய்வோம்.

இப்போது நடக்கும் நீட் தேர்வு முடிவுகள் தமிழக மாணவர்களுக்கு பாதகமாக விபரீதமாக இருந்தால், இறையாண்மை, கூட்டாட்சி குறித்து கேள்வி எழுப்ப நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.