அயலி – விமர்சனம்

நடிப்பு: அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மாதவன், லிங்கா, சிங்கம்புலி, லவ்லின், காயத்ரி, டிஎஸ்ஆர், தாரா,  லட்சுமி பிரியா, ஸ்ம்ருதி வெங்கட், பகவதி பெருமாள், பிரகதீஸ்வரன் மற்றும் பலர்

இயக்கம்: முத்துக்குமார்

ஒளிப்பதிவு: ராம்ஜி

படத்தொகுப்பு: கணேஷ் சிவா

இசை: ரேவா

தயாரிப்பு: ‘எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ்’ எஸ்.குஷ்மாவதி

ஸ்ட்ரீமிங் தளம்: ஜீ 5

பத்திரிகை தொடர்பு: சதீஷ், சிவா (டீம் எய்ம்)

பருவமெய்திய பெண்களுக்கு மாதந்தோறும் இயல்பாக வந்துபோகும் ‘மாதவிடாய்’ என்பதை ‘தீட்டு’ என கொச்சைப்படுத்தி, அதை வைத்தே பெண்களுக்கு எதிராக நிறைய கட்டுப்பாடுகளை விதித்து, அவர்களை மூடர்களாகவும் அடிமைகளாகவும் ஆக்கி வைத்திருக்கிறது இந்திய சமூகம். இன்றும் தொடரும் இந்த மிக முக்கியமான பிரச்சனையைக் கையிலெடுத்து, சிறந்த கதையாக்கி, எட்டு எபிசோடுகள் கொண்ட ‘அயலி’ என்ற இணையத் தொடராக படைத்திருக்கிறார் இயக்குனர் முத்துக்குமார்.

0a1e

’அயலி’ என்ற பெண் தெய்வத்தின் பெயரால், கிராமத்துப் பெண்கள், அவர்களது ‘மாதவிடாய்’ காரணமாக அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்; அவர்களது அடிமைத் தளையைத் தகர்த்தெறியப் போராடுகிறாள் ஒரு சிறுமி என்பது தான் ‘அயலி’ இணையத் தொடரின் ஒருவரிக்கதை.

புதுக்கோட்டை மாவட்டம் வீரபண்ணை கிராமத்தில், 1990-ல் நிகழ்வதாக இக்கதை கட்டமைக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் சிறுமிகள் பருவமடைந்தவுடன் (அதாவது, முதலாவது மாதவிடாய் வந்தவுடன்) அவர்களது பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, காலாகாலத்தில் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டும். மேலும், பருவம் எய்திய பெண்கள் அந்த ஊரின் காவல் தெய்வமான ‘அயலி’யின் கோயிலுக்குள் செல்லக் கூடாது. இக்கட்டுப்பாடுகளை மீறினால் அயலி தெய்வத்தின் கோபத்துக்கும் சாபத்துக்கும் மொத்த ஊர்மக்களும் ஆளாக நேரிடும் என்பது அக்கிராம மக்களின் நம்பிக்கை. இந்த அச்சம் காரணமாக மேற்கண்ட கட்டுப்பாடுகளை அந்த மக்கள் கண்டிப்புடன் கடைப்பிடித்து வருகிறார்கள். இதனால், எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்புக்கு மேல் படித்த பெண்கள் ஒருவர் கூட அங்கு இல்லை. மேலும், குழந்தை திருமணத்தின் பாதிப்புகள் அவர்களை வாட்டி வதைக்கின்றன.

இந்நிலையில், டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறாள், இக்கதையின் நாயகியான எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தமிழ் செல்வி (அபி நட்சத்திரா). ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் மூட பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் தகர்த்து, மேற்படிப்பு படித்து, டாக்டராக வேண்டும் என்ற இலக்கை அடைந்தே தீருவது என உறுதிகொள்கிறாள். தான் பருவம் எய்தியது வெளியே தெரிந்தால் தன் பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், தான் பருவமடைந்ததை தனது தாயிடம்கூட சொல்லாமல் மறைத்து விடுகிறாள்.

அப்படி எத்தனை நாட்கள் தான் மறைக்க முடியும்? தாய்க்கு எப்படி தெரிய வருகிறது? அதன்பின் என்ன நடக்கிறது? தமிழ்ச்செல்வியின் டாக்டர் கனவு என்ன ஆனது? அயலி தெய்வத்தை காரணம் காட்டி அவ்வூர் பெண்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் எப்படி தவிடுபொடியானது? என்பது ‘அயலி’ தொடரின் மீதிக்கதை.

0a1f

பள்ளி மாணவி தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபி நட்சத்திரா, அவரது அம்மா குருவம்மாளாக நடித்திருக்கும் அனுமோல் ஆகிய இருவரும் போட்டி போட்டு சிறப்பாக நடித்து, தொடர் விறுவிறுப்பாக நகர உதவுகிறார்கள்.

தலைமை ஆசிரியையாக வரும் காயத்ரி மிகவும் பக்குவப்பட்டவராகவும், உதவி தலைமை ஆசிரியராக வரும் டிஎஸ்ஆர் அரைவேக்காட்டுத் தனமானவராகவும் திரையில் தோன்றி முரண்பட்ட மனநிலைகளை பிரதிபலிக்கிறார்கள்.

தமிழ்ச்செல்வியின் அப்பா தவசியாக வரும் அருவிமதன், வில்லன் சக்திவேலாக வரும் லிங்கா, சக்திவேலின் அப்பா திருப்பதியாக வரும் சிங்கம்புலி, அவ்வூர் வழக்கப்படி சிறுவயதில் திருமணம் செய்து சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கும் மைதிலியாக வரும் லவ்லின், ஒரேகாட்சியில் வந்தாலும் மிடுக்கான போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் லட்சுமி பிரியா சந்திரமவுலி உள்ளிட்ட அனைவரும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை – அதன் கனம், குணம் மாறாமல் – வழங்கியிருக்கிறார்கள்.

வெள்ளித் திரைக்கான படைப்பிலிருந்து ஓ.டி.டி தளத்துக்கான படைப்பு எப்படியெல்லாம் வேறுபட்டிருக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து, அதற்கொரு முன்மாதிரியாக இத்தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குனர் முத்துக்குமார். அவருக்கு நமது பாராட்டுகள். சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளையும், மூட பழக்க வழக்கங்களையும் சுவாரஸ்யமாக ரசிக்கும்படி தோலுரித்துக் காட்டி, தெய்வ நம்பிக்கை உள்ளவர்களும் ஏற்றுக்கொள்ளும்படியான தீர்வைச் சொல்லி, தானொரு ’மாஸ் இயக்குனருக்கான மெட்டீரியல்’ என்பதை நிரூபித்திருக்கிறார்.

ரேவாவின் இசையில் பாடல்கள் அருமை. அவற்றை கதையோட்டத்தை கெடுக்காத வகையில் சேர்த்திருப்பது நன்று. காட்சிகளுக்கும், கருத்துகளுக்கும் பின்னணி இசை வலு சேர்க்கிறது.

கிராம மக்களின் 1990 காலகட்ட வாழ்வியலை ராம்ஜியின் ஒளிப்பதிவு அற்புதமாக பதிவு செய்திருக்கிறது.

‘அயலி’ – கருத்தாழம் மிக்க பொழுதுபோக்குத் தொடர்!