“நானே பார்க்க பயப்படும் நான் நடித்த பேய் படம் ‘அவள்’!” – ஆண்ட்ரியா

வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து சித்தார்த் தன் எடாகி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்திருக்கும் படம் ‘அவள்’. மிலிந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஜெர்மியா, அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை இயக்குனர் மிலிந்த் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் நாயகன் சித்தார்த். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

a8

இந்நிகழ்வில், மிகவும் பயமுறுத்தக்கூடிய இப்படத்தின் ட்ரெய்லரும், சித்தார்த் – ஆண்ட்ரியா முத்தங்கள் நிறைந்த காதல் பாடல் காட்சியும் திரையிட்டு காட்டப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய நாயகன் சித்தார்த், “நானும், இயக்குனர் மிலிந்தும் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனர்களாக ஒன்றாக வேலை பார்த்தோம். எங்கள் நட்பு 17 வருடங்களை தாண்டியது. ஒரு உண்மைக் கதையை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை எழுதியிருக்கிறோம். நல்ல ஒரு ஹாரர் படத்தை எடுத்து மக்களை  பயமுறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் கனவு. அதை இந்த படத்தின் மூலம்  செய்திருக்கிறோம். இந்த படத்துக்குப் பின் இயக்குனர் மிலிந்த் பேசப்படுவார். படத்தின் நாயகி ஆண்ட்ரியா நன்றாக தமிழ் பேசக்கூடிய நடிகை. அவர் படத்தின் மிகப்பெரிய தூண். ‘ரங்தே பசந்தி’ படத்துக்குப் பிறகு 12 வருடங்கள் கழித்து இந்த படத்தில் அதுல் குல்கர்னியும், நானும் இணைந்து நடித்திருக்கிறோம். ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் வேலை செய்த டீம் இதிலும் பணியாற்றி இருக்கிறது. இப்படி ஒரு பெரிய பட்ஜெட் ஹாரர் படத்தை நாங்கள் எடுத்திருப்பது எங்களுக்கு பெருமையான விஷயம். வரும் நவம்பர் 3ஆம் தேதி உங்களை மிரட்ட வருகிறாள் அவள்” என்றார்.

இயக்குனர் மிலிந்த் பேசுகையில், “ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து நாலரை வருடங்களாக நானும், சித்தார்த்தும் இணைந்து இந்த படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறோம். இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்தால் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்” என்றார்.

நாயகி ஆண்ட்ரியா ஜெர்மியா பேசுகையில், “எனக்கு மட்டும் எப்படி நல்ல, வித்தியாசமான படங்கள் அமைகிறது என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. என் கேரியரில்  ‘தரமணி’யை தொடர்ந்து ‘அவள்’ படமும் ஒரு சிறந்த படமாக இருக்கும். இந்த படம் ரொம்பவே பயமுறுத்தும். அதனால் நிச்சயமாக இந்த படத்தை நான் பார்க்க மாட்டேன்” என்றார்.

நடிகர் அதுல் குல்கர்னி பேசுகையில், “சென்னை எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். ஏனென்றால் இந்த சென்னை தான் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. உலகநாயகன் கமல் அவர்கள் தான் ‘ஹேராம்’ படத்தில் என்னை ஒரு நடிகனாக அறிமுகப்படுத்தினார். ‘ரங்தே பசந்தி’ படத்துக்குப் பின் 12 வருடங்கள் கழித்து சித்தார்த்துடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி. எப்போதுமே நல்ல சினிமா நல்ல ஒரு குழுவால் தான் உருவாகிறது. பாலிவுட் எப்போதும் தமிழ் சினிமாவை உற்று கவனித்துக்கொண்டே தான் இருக்கிறது. தொழில்நுட்பம், இசை போன்றவற்றில் தமிழ் சினிமா எப்போதும் முன்னோக்கியே இருக்கிற்து. தமிழ, தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த ‘அவள்’ படம் வெளியாக இருக்கிறது. இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான ஹாரர் படமாக இருக்கும்” என்றார்.

இசையமைப்பாளர் கிரீஷ் கோபாலகிருஷ்ணன் பேசுகையில்,. 2012ல் ‘மெரினா’, 2014ல் ‘விடியும் முன்’ படங்களுக்கு இசையமைத்தேன். எனக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்வேன்  என்பதால் தான் மிக குறைந்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறேன். சித்தார்த், மிலிந்த் இருவரும் என்னை ஹாரர் படத்தில் வேலை செய்ய விருப்பமா? எனக் கேட்டு இந்த படத்துக்குள் என்னை கொண்டு வந்தார்கள். கடந்த ஒரு வருடம் இந்த படத்தில் வேலை செய்தது மிகப்பெரிய அனுபவம்” என்றார்.

ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குனர் சிவஷங்கர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.