அருவி – விமர்சனம்

மலையடிவார கிராமத்தில் அப்பாவின் செல்லப்பிள்ளையாக வளர்கிறாள் அருவி (அதிதி பாலன்). அப்பாவின் பணியிட மாற்றம் காரணமாக சென்னைக்கு இடம்பெயரும் அதிதிக்கு தொடக்கத்தில் நகர வாழ்க்கை பிடிக்காமல் போகிறது. பின்னர் வளரிளம் பருவத்தில் நகர வாழ்வு தரும் சின்னச் சின்ன சந்தோஷங்களில் திளைக்கிறார். திடீரென அவரது வாழ்வில் ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்கிறது. குடும்பத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறார். சென்ற இடங்களில் எல்லாம் சுரண்டப்படுகிறார். தோழியான திருநங்கையுடன் வசிக்கிறார். தனக்கு நேர்ந்த பெருங்கொடுமைக்கு நீதி கேட்க முடிவு செய்கிறார். எளிய மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வதாக கூறும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிக்குச் செல்கிறார். அங்கு நீதி கிடைத்ததா? உண்மையில் அவருக்கு என்ன பிரச்சினை? தொலைக்காட்சி நிலையத்தில் என்ன நடந்தது? இறுதியில் அருவிக்கு என்ன ஆயிற்று? என்பதே மீதி கதை!

குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் சோகம், குலுங்கிச் சிரிக்கவைக்கும் நகைச்சுவை என இரண்டுக்கும் நடுவே தடுமாறாமல் பயணிக்கிறது கதை. கலகலப்பைச் சேர்க்கும் உந்துதலால், படம் பேசும் பிரச்சினையின் தீவிரத்தன்மை நீர்த்துவிடாத வகையில் திரைக்கதையை அமைத்து அறிமுகப் படத்திலேயே நிமிர்ந்து நிற்கிறார் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன். வெகுஜன சினிமா தொடத் தயங்கிய களத்தை துணிச்சலாகத் தொட்டு, நேர்த்தியான படமாக்கல் மூலம் திரையில் முத்திரை பதிக்கிறார். கதை, திரைக்கதை ஆகியவற்றோடு இயக்குநரின் திரைமொழியும் அபாரமாக உள்ளது. அருவியின் குழந்தை, இளமைப் பருவங்கள் பாடல்கள் வழியாக சொல்லப்பட்ட விதம் புதுமை.

தோற்றம், உடல்மொழி, முகபாவம், வசன உச்சரிப்பு என முதல் படத்திலேயே முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார் அதிதி. ஒரு கணம் குதூகலமாக, மறுகணம் துயரமாக, இன்னொரு கணம் ரவுத்திரமாக, அடுத்த கணம் நடைபிணமாக என நேர்த்தியான நடிப்பால் ‘அட’ போட வைக்கிறார். ‘இது பணம் படைத்தவனுக்கான உலகம்’ என்பதை நீண்ட வசனத்தால் அவர் தோலுரிக்கும் காட்சி அபாரம்.

இதற்கிடையில், தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், ரேட்டிங்குக்காக என்னவெல்லாம் செய்கின்றனர் என்பதை தோலுரிப்பதோடு, சில நட்சத்திரங்கள் உட்பட தமிழ் சினிமாவையும் ஒரு பிடி பிடிக்கிறது. இறுதிக் காட்சியில் அனைவரும் அன்பால் இணைக்கப்பட்டு மனிதர்களாகும் இடத்தில் படம் புதிய உயரத்தை எட்டுகிறது.

படத்தில் நிகழ்ச்சி நடுவராக வரும் லட்சுமி கோபாலசுவாமி தவிர அனைவருமே அறிமுக நடிகர்கள் அல்லது ஒருசில படங்களில் தலைகாட்டியவர்கள். ஆனால், அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அதிதியின் தோழியாக வரும் அஞ்சலி வரதன், திருநங்கை எமிலியாகவே மாறியிருக்கிறார். திருநங்கைகள் எதிர்கொள்ளும் சங்கடத்தைச் சொல்லும்போதும், கரிசனத்தை கண்ணீர் வழியே கடத்தும்போதும், தோழிக்காக கதறும்போதும் சிலிர்க்க வைக்கிறார். அரசியல்வாதியாக மதன்குமார் சக்கரவர்த்தி, ஆன்மிக ஆலோசகராக கார்த்திகேயன், ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ நிகழ்ச்சி இயக்குநராக கவிதா பாரதி, அதிதியை காதலிக்கத் தொடங்கும் நிகழ்ச்சியின் துணை இயக்குநராக பிரதீப் ஆண்டனி. ஆபீஸ் பாயாக வரும் சிறுவன், வாட்ச்மேன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

பிந்துமாலினி, வேதாந்த் பரத்வாஜ் இசையில் பாடல்கள் இனிமை. காட்சிகள் மீதான கவனத்தை சிதைக்காமல் இருக்கும் பின்னணி இசை அழகு.குட்டிரேவதி, அருண்பிரபு புருஷோத்தமனின் பாடல் வரிகள் அர்த்தச் செறிவுடன் உள்ளன. ஷெல்லி காஸ்ட் ஒளிப்பதிவில் காட்சிகள் நிஜத்துக்கு நெருக்கமாகப் பதிவாகியுள்ளன. நான்லீனியர் திரைக்கதையில் சஸ்பென்ஸை தக்கவைக்க துணைபுரிகிறது ரேமண்ட் டெரிக் கிராஸ்டாவின் படத்தொகுப்பு.

அதேநேரம், படத்தில் குறைகளும் இல்லாமல் இல்லை. அதிதி ஒற்றைப் பெண்ணாக துப்பாக்கி முனையில் ரியாலிட்டி நிகழ்ச்சி படப்பிடிப்பு தளத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, சம்பந்தப்பட்ட மூவருக்கும் எந்த ‘ஆபத்தும்’ இல்லை என அவருக்கு முன்கூட்டியே தெரிவது, சினிமா பாணியில் ஒட்டுமொத்த ஆட்களும் கடைசியில் அவரைத் தேடிவருவது போன்ற காட்சிகள் நம்பும்படி இல்லை. வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள் புகை, மது போன்ற பழக்கங்களுக்கு ஆளாவார்கள் என காட்டுவது அருவி பேசும் கருத்தியலுக்கே எதிரானது. கடைசி 15 நிமிடக் காட்சிகள் திடீரென்று திணிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.

அன்பு, மன்னிப்பு ஆகிய இரண்டின் மூலம், எத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமும் புன்னகையை ஏற்படுத்த முடியும் என்ற விழிப்புணர்வை சிறப்பாக பொழிந்திருக்கிறது ‘அருவி’.

Courtesy: Tamil.thehindu.com