லதாவின் சங்கல்பமும் ரஜினிகாந்தின் கவலையும்! – அருணன்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், தயா பவுண்டேஷனி்ன் நிறுவனருமான லதா ரஜினிகாந்த் “சங்கல்பம்” எனும் திட்டத்தை துவக்கியுள்ளார். அந்த விழாவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தபோது கூறியது:

“இன்றைய செல்போன் யுகத்தில் நம் பாரத நாட்டின் சம்பிரதாயம், கலாச்சாரம், அதன் அருமை பெருமைகள் பற்றி எல்லாம் தெரியாமல் இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றனர்”.

இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசி என்ன பயன்? அந்த அருமை பெருமைகள் என்னவென்று பட்டியலிட வேண்டாமோ? அவர் பட்டியலிட்டது தியானம், யோகாதான்! ஏன் அத்தோடு நிறுத்திக் கொண்டார், வேறு ஏதும் இல்லையா? அந்த தியானம், யோகம் மட்டும் எப்படி பாரத சம்பிரதாயத்தின் முழுமையைக்
குறிக்கும்?

அதுபோல, மேற்கத்தியக் கலாச்சாரம் என்றால் என்ன, அதன் கூறுகள் எவை என்று பட்டியலிட வேண்டாமோ? செய்யவில்லை. மாறாக மேற்கத்தியர்களை தியானம்-யோகா ஈர்க்கிறது என்று கூறி, அதையும் இதற்குள் சுருக்கியிருக்கிறார்.

வேடிக்கை என்னவென்றால், இந்த வாழ்த்தையே அவர் காணொளி மூலம் செய்திருக்கிறார்! அதுவே மேற்கத்தியரின் கண்டுபிப்பு; அதற்குக் காரணம் மேற்கத்தியக் கலாச்சாரம் அன்றோ

மேற்கத்திய உலகின் அதிமுக்கியமான கலாச்சாரக் கண்டுபிடிப்பு சினிமா. அதன் மூலம் பணம், பிரபல்யம், செல்வாக்கை சம்பாதித்தவர் ரஜினி. இவர் வேதனைப்படுகிறார்- மேற்கத்தியக் கலாச்சாரம் நோக்கிச் செல்லலாமா என்று!

சனாதனவாதிகளின் இன்றைய பெரும் கவலை மேற்கத்திய உலகின் ஜனநாயகச் சிந்தனைகள் தங்களது சனாதன கட்டுப்பெட்டித்தனத்தைக் குலைத்துவிடுமோ என்பதுதான். குறிப்பாக சாதியம், ஆணாதிக்கம், சமஸ்கிருதமயம்,
புராண நம்பிக்கைகள் போன்றவை மங்கி விடுமோ என்ற பயம்தான். இதை வெளிப்படையாகச் சொல்லாமல் சம்பிரதாயம், கலாச்சாரம் என்று பூசி மெழுகுகிறார்கள்.

மேற்கத்திய கலாச்சாரத்தில் தீங்குகள் உள்ளன என்போர் பாரத கலாச்சாரத்தில் தீங்கே இல்லை என்கிறார்கள். எந்தவொன்றிலும் நல்லது கெட்டது இருக்கும், அதில் நல்லதை ஏற்போம் என்பதற்குப் பதிலாக மேற்கை நிராகரி, கிழக்கை அப்படியே ஏற்றுக்கொள் என்பது என்ன நியாயம்? இதன் பொருள் பிராமணியத்தை,
அதாவது அவர்கள் கூறும் சனாதன தர்மத்தை மீறக்கூடாது என்பதுதான்.

துவக்க விழாவில் “சனாதன தர்மத்திற்கு மிகப்பெரும் சேவை செய்தவர்களை” அழைத்திருப்பதாக லதா ரஜினிகாந்த் கூறினார். அதாவது எல்லாம் சனாதனிகள், கூடவே சங்கி அர்ஜுன் சம்பத்

சங்கல்பம் எனும் அந்த உறுதிமொழி, சனாதன தர்மத்தைக் காக்கவே என்பது நிச்சயமானது. அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சங்கல்பம்-தீர்மானம்- ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒருவர் பட்டியலிட்டார்: “சனாதன தர்மத்திற்கு ஆதாரமான
வேதங்களைக் காப்பாற்ற வேண்டும்; அவற்றை வேத பாடசாலை மூலம் மட்டுமே காப்பாற்ற முடியும். கோயிலைச் சுற்றியே நமது வாழ்வு இருக்க வேண்டும். அங்குள்ள அர்ச்சகர்களுக்கு உதவி செய்ய வேண்டும். கோமாதாவைக் காக்க வேண்டும். பசுவின் பின்பாகத்தில் மகாலட்சுமி வசிக்கிறாள். கோசாலைகளை
ஒருங்கிணைக்க வேண்டும். உபன்யாசங்கள், கதாகாலட்சேபங்கள், ஹரிகதை போன்றவற்றை ஆதரிக்க வேண்டும்.”.

வேத பாடசாலை பற்றிப் பேசியவர் அதில் அனைத்து சாதியினரும் மாணவராக வேண்டும் என்று பேசவில்லை. அர்ச்சகர்கள் பற்றி பேசியவர் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று பேசவில்லை. பசுவைப் பற்றிப் பேசியவர் எருமையைப் பற்றிப் பேசவில்லை. பிறப்பில் பேதம் பார்ப்பதும், அதைக் கலைகள் மூலம் பரப்புவதும் சனாதன தர்மம் என்பதைச் சொல்லாமல்
சொன்னார்.

அதே விழாவில் இன்னாெருவர் பேசினார்: “சங்கல்பம் என்பது சனாதன தர்மத்திற்கு நிழல் தரும். சினிமாவில் இந்துக்களை இழிவாகச் சித்தரிக்கும் காட்சிகளை அனுமதிக்க கூடாது. இதையொரு சங்கல்பமாக ஏற்க வேண்டும். சனாதன தர்மம் என்றால் வேத பாடசாலை. அங்கே பயிலும் பிள்ளைகளுக்கு
நமது பெண்களைக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும்”.

இந்துக்களை எந்த சினிமாவில் இழிவாகக் காட்டினார்கள்? சாதியத்தை, ஆணாதிக்கத்தை, சமஸ்கிருதமயத்தை விமர்சித்து சினிமாவில் காண்பித்தால் அதை இந்துக்களை இழிவுபடுத்துவது என்கிறார்கள்! அதையே எதிரொலித்தார் அந்த சனாதனி.

சங் பரிவாரத்தின் செயல்திட்டங்கள் சிலவற்றைத் தமிழ்நாட்டிலும் கொண்டு வருவதே அம்மையாரின் சங்கல்பமாகத் தெரிகிறது! கோசாலைகளை ஒருங்கிணைப்பதாக மேடையிலேயே அறிவிக்கவும் செய்தார் அவர். அதன் துவக்கவிழா வீடியோ கிடைக்கிறது. அதைப் பார்ப்போர், கேட்போர் இந்த
முடிவிற்கே வருவார்கள்.

ரஜினிகாந்தை அரசியலில் இழுத்துவிட்டு ஆதாயம் அடைவதே ஆர்எஸ்எஸ்சின் திட்டமாக இருந்தது. அவரது உடல்நிலை உள்ளிட்ட சில காரணங்களால் அது முடியாமல்போன நிலையில் இப்படி கலாச்சாரத் துறையில் அவரது மனைவியை
இறக்கியிருக்கிறார்கள் போலும்! அதற்கு ரஜினியின் ஆதரவு உண்டு என்றும் காட்டியிருக்கிறார்கள்.

ரஜினி ரசிகர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவரது நடிப்பை ரசிக்கலாமே தவிர அவரது குடும்பம் சனாதன அதர்மத்திற்குத் துணை போவதை ரசிக்கக் கூடாது. காரணம் அது நமது பிள்ளைகளை சமூகரீதியாக ஒடுக்கி வைப்பது, அவர்களது எதிர்காலத்தைச் சுட்டுப் பொசுக்குவது.

-அருணன்