தேர்தல் ஆணையம் “சீன்” போடுவது தொடர்கிறது!

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அதிமுகவும், திமுகவும் போட்டி போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்திருக்கின்றன. இது தொடர்பாக பல நூறு புகார்கள் கொடுத்தும் கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம், ஏதோ அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய தொகுதிகளில் மட்டும் வாக்காளர்களுக்கு பண விநியோகம் செய்யப்பட்டதாக கூறிக்கொண்டு, அங்கு 16ஆம் தேதி நடைபெற வேண்டிய வாக்குப்பதிவை மே 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கோடீஸ்வரர்களுக்கான சூதாட்டமாக மாறிவிட்ட இன்றைய கேடுகெட்ட தேர்தல் முறை மீது நடுநிலையாளர்கள் நம்பிக்கை இழந்துவருவதை உணர்ந்த தேர்தல் ஆணையம், தேர்தலை நேர்மையாக நடத்தியதாக “சீன்” போடுவதற்காக, அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் மட்டும் தேர்தலை ஒத்திவைத்திருக்கிறது என்று அப்போதே விமர்சனம் எழுந்தது. அங்கு எந்தெந்த வேட்பாளர்களுக்காக பணம் பட்டுவாடா செய்யப்பட்டதோ அந்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் இதுவரை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

இந்நிலையில் அரவக்குறிச்சி தொகுதி பாமக வேட்பாளர் எம்.பாஸ்கரன், தஞ்சாவூர் தொகுதி பாஜக வேட்பாளர் எம்.எஸ்.ராமலிங்கம், திருச்சியைச் சேர்ந்த விவசாயி அய்யாகண்ணு, சுய ஆட்சி இயக்கத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், பாஜகவைச் சேர்ந்த தனசேகரன் ஆகியோர் தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்தனர்.

பணப்பட்டுவாடா புகார் இருப்பதால் 23ஆம் தேதி தேர்தலை நடத்த தடை விதிக்கவும், தேர்தல் தேதியை ஒத்திவைக்கவும் உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் கல்யாணசுந்தரம், டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், “அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலை 3 வாரங்கள் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கிடையே, அங்குள்ள நிலைமை குறித்து தேர்தல் ஆணையம் ஆராயும். மேலும், அந்த இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆலோசனையைக் கேட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

இப்படி நீதிமன்றத்தில் தெரிவித்த சில மணி நேரத்துக்குள்ளாகவே, வேட்பாளர்களை கலந்து ஆலோசிக்காமலே, “தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஜுன் 13ஆம் தேதி நடத்தப்படும்” என்று தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லகானி திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். “வாக்கு எண்ணப்படும் தேதி பிறகு அறிவிக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“சீன்” போடுவது என முடிவெடுத்தபின், அடுத்தடுத்து “சீன்” போட்டுக்கொண்டே போகத்தானே முடியும்…? கொலை செய்யப்பட்டுவிட்ட ஜனநாயகத்துக்கு உயிர் கொடுக்கவா முடியும்…?