கீழ்த்தரமாக வன்மம் பேசும் தனது ரசிகர்களால் மன உளைச்சல்: அஜித் அறிக்கை!

“விஜய் ரசிகர்கள்”, “அஜித் ரசிகர்கள்” என்ற பெயர்களில் சமீப நாட்களாக சமூகவலைத்தளத்தில் தகாத முறையில் சண்டையிட்டுக் கொள்வதும், திட்டுவதும் அதிகமாகி வருகிறது. இதற்கு எதிராக சில நாட்களுக்கு முன் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

தற்போது அஜித்தும் தனது வழக்கறிஞர் மூலம் சட்டப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

0a1e

25 ஆண்டுகளாக திரைத்துறையில் நீடித்து வரும் எனது கட்சிகாரர் அஜித்குமார், நேர்மையான முறையில் வரி செலுத்துபவர். சமூகத்துக்கு தனிப்பட்ட முறையில் உதவுபவர் மற்றும் இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்படும் ஒரு குடிமகன் ஆவார்.

எனது கட்சிக்காரர் எந்த அரசியல் இயக்கத்தையும் (பிராந்திய மற்றும் தேசிய கட்சிகள் உட்பட) சார்ந்தவர் இல்லை. தனது சுய சிந்தனைப்படி ஜனநாயக முறையில் வாக்களிப்பவர். தனது ஜனநாயக நம்பிக்கையையும், சிந்தனையையும் தனது ரசிகர்கள் இடையேயும், பொதுமக்கள் இடையேயும் எப்பொழுதும் திணித்ததும் இல்லை. எனது கட்சிக்காரர் எந்த வணிக சின்னத்தையும், பொருளையும், நிறுவனத்தையும், அமைப்பையும், சங்கத்தையும் சார்ந்து அதன் விளம்பர தூதராக, நேரடியாகவோ, மறைமுகமாகவோ தற்போது செயல்படுவதில்லை.

எனது கட்சிக்காரர் தனது வளர்ச்சிக்கு ஊக்க துணையாக இருந்த உண்மையான ரசிகர்கள், தன்னை பின்பற்றுபவர்கள், திரை பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், தனக்கு அங்கீகரிக்கபட்ட ரசிகர் மன்றம் என்று ஒன்று இல்லை என்று தெளிவுபடுத்துகிறார்.

எனது கட்சிகாரருக்கு, அதிகாரப்பூர்வ வலைப்பக்கமோ, கைப்பிடியோ (Handle) எந்த ஒரு சமூக வலைத்தளத்திலும், குறிப்பாக ஃபேஸ்புக், ட்விட்டர், ஸ்னாப் சாட், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் இல்லை என்பதை தெரிவிக்கிறார். ஆயினும் சில தனிப்பட்ட அங்கீகாரம் இல்லாத சுய அதிகாரம் எடுத்துக் கொண்ட சில நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள், தங்களுடைய அரசியல் மற்றும் சமூக ரீதியான கருத்துகளை எனது கட்சிக்காரரின் கருத்தாக பிரகடனப்படுத்தி வருகிறார்கள். இதற்கு அவர்கள் எனது கட்சிக்காரரின் பெயரையும் புகைப்படத்தையும் அவரின் அனுமதியில்லாமல், அங்கீகாரமில்லாமல் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் எனது கட்சிக்காரர் சார்ந்த திரைத்துறையையும், பத்திரிகையாளர்களையும், விமர்சகர்களையும், பல தனி நபர்களையும், பொது மக்களையும் கூட தகாத முறையில் வன்மம் பேசி சமூக வலைதளங்களில் கீழ்த்தரமாக தாக்கி வருவது எனது கட்சிக்காரருக்கு கடும் மன உளைச்சலை தருகிறது. இப்படிப்பட்ட நபர்களை கண்டுபிடித்து களை எடுக்கும் அதே நேரத்தில், இவர்களது செயல்களால் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் என் கட்சிக்காரர் தன் மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறார்.

மேற்கூறிய இந்த காரணத்துக்காக வெளியிடப்படும் இந்த அறிவிப்பு கூறுவது என்னவென்றால்:

எனது கட்சிக்காரர் எந்த ஒரு தனி நபரையோ, குழுவையோ, அமைப்பையோ அல்லது சமூக வலைப்பக்கத்தையோ அங்கீகரிக்கவில்லை மற்றும் தனது பெயரையோ, புகைப்படத்தையோ தன் அனுமதியில்லாமல் உபயோகிப்பதையோ தன் சார்பில் சமூக, அரசியல் மற்றும் தன் சார்பாக தனிப்பட்ட கருத்தையோ வெளியிட அனுமதிக்கவில்லை என்பதை அறிக.

தற்போது அவர் எந்த ஒரு வணிக சின்னத்திற்கும், பொருளுக்கும், நிறுவனத்துக்கும், அமைப்புக்கும் விளம்பரதூதர் இல்லை.

இவ்வாறு அஜித் தனது வழக்கறிஞர் மூலம் வெளியிட்டுள்ள சட்டப்பூர்வமான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.