“மக்களும் மகேசனும் நினைத்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்”: லெஜெண்ட் சரவணன் பகீர்!

‘தி லெஜண்ட்’ படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகம் ஆனவர் தொழிலதிபர் அருள் சரவணன் என்கிற லெஜண்ட் சரவணன். முதலில் விளம்பர படங்களில் நடித்த லெஜண்ட் சரவணன், பின்னர் வெள்ளித்திரையில் ஹீரோவானார். அவர் நடிப்பில் வெளிவந்த ‘தி லெஜண்ட்’ திரைப்படம் சுமார் 600 திரையரங்குகளில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் கலை ரசனை உள்ளவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள ‘நூர் பிரைடல் ஸ்டுடியோ’ நிறுவனத்தை லெஜண்ட் சரவணன் திறந்து வைத்தார். நடிகர்கள் ரோபோ சங்கர், அப்புக்குட்டி, நிறுவன உரிமையாளர் நூர்முகமது உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் லெஜண்ட் சரவணன் பேசும்போது, “கடுமையாக உழைப்பவர்களை நேசிப்பவன் நான். கோவையில் கலை ரசனை உள்ளவர்களுக்காக ‘நூர் பிரைடல் ஸ்டுடியோ’ நிறுவனத்தை நூர்முகமது தொடங்கியுள்ளார். அவருடைய கடினமான உழைப்பு பாராட்டத்தக்கது. எனக்கு பல்வேறு நிகழ்வுகளுக்கு அழைப்புகள் இருந்தாலும் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு நான் செல்வதில்லை. கலைத் துறையில் உள்ளவர்களுக்கு மேக்கப் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. அதை முழுமையாக நேசித்து சேவை செய்து வருகிறார் நூர்முகமது. கோவை மக்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இந்த நிகழ்வில் லெஜெண்ட் சரவணன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ”சினிமாவில் வந்தபிறகு, கதாநாயகர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை அரசியல் தான்; உங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன” என்றும், ”அரசியலுக்கு வர விருப்பம் உள்ளதா” என்றும் செய்தியாளர்கள் கேட்டனர்.

இக்கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “மக்களும், மகேசனும் நினைத்தால் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்” என்று தெரிவித்தார்.

அவரது அடுத்த படம் குறித்த கேள்விக்கு, அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், அதற்குண்டான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கி விட்டதாகவும் கூறினார்

மேலும் பேசிய லெஜெண்ட் சரவணன், “சென்னையை போலவே கோயம்புத்தூரும் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. அதை கண்கூடாக பார்க்க முடிகிறது. கடுமையாக உழைப்பவர்களை எனக்கு எப்போதும் பிடிக்கும். அப்பேற்பட்ட ஒருத்தர் தான் பிரைடல் ஸ்டுடியோ நூரின் நிறுவனர் நூர் முகமது. அவர் மிகவும் அன்பான மனிதர். அவரது அன்பிற்கு கட்டுப்பட்டு தான் இங்கு வந்தேன்” என்று கூறினார்.

நடிகர் நடிகைகளை மிகவும் அழகாக திரையில் காட்டுவதில் ஒப்பனை கலைஞர்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு என்றும், நூர் முகமது மிகவும் திறமையான கலைஞர் என்றும் லெஜெண்ட் சரவணன் கூறினார்.

தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

Read previous post:
0a1d
உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஏன்?: திமுக விளக்கம்

உதயநிதி ஸ்டாலினின் கட்சிப் பணி, மக்கள் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், முதல்வர் தன்னுடைய அமைச்சரவையில் அவரை இணைத்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பை வழங்க இருப்பதாக திமுக விளக்கம்

Close