’சூப்பர் டீலக்ஸ்’ படத்தை கிழிகிழி என கிழிக்கும் திருநங்கையர்!

நடிகர் விஜய் சேதுபதி’ நடித்திருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்குத் திருநங்கைகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு:

# # #

’சூப்பர் டீலக்ஸ்’ – புரிதலின்மையின் உச்சம்.

எனக்கான கோபம்… அதிர்ச்சி… நேற்று தியேட்டரில் நானும், சோலுவும் கூனி குறுகிப் போனோம்.

திரு.விஜய் சேதுபதி அவர்கள் புடவை கட்டிக்கொண்டால் மட்டுமே திருநங்கையர் ஆகிவிட மாட்டார். நீங்கள் அவர் மூலம் என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள் என்பது முக்கியம்.

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா… தயவு செய்து திருநங்கையரை குறித்து புரிந்துகொண்டு படம் எடுங்கள்.

தமிழ் திரைஉலகம் இன்னும் திருநங்கையரை புரிந்துகொள்ள வேண்டும் என்பதை தான் உங்கள் படம் உணர்த்துகிறது.

பொதுச் சமூகத்தில் பெரும்பான்மை அணியும் முகமூடிகளை அணிந்து திரியாமல், தன் உணர்விற்கு மதிப்பளித்து மிக நேர்மையாக தன் முடிவில் உறுதியாய் நின்று பெண்ணாகிப் போறவள் திருநங்கை. ஒரு பெண்ணை தன் சகோதரியாக மட்டுமே பார்ப்பவள்.

ஆனால் இதில் மாணிக்கம் (சில்பா) திருமணமாகி, குடும்பம் நடத்தி, குழந்தை…. சே… உங்கள் சினிமா வெற்றிக்கு, கைதட்டலுக்கு வழக்கம் போலவே எங்களை பலிகாடா ஆக்கி விட்டீர்களே… தியாகராஜன் குமாரராஜா…

இப்போது தான் சமூகம் திருநங்கையரை கொஞ்சம் புரிந்துகொள்ள துவங்கியிருக்கு. அதற்கும் மண்….

இது பெரிய வார்த்தை தான். ஆனால் எங்கள் கோபத்தை எப்படி வெளிப்படுத்த என்று தெரியல.

PRIYA BABU

# # #

கோபம்… ஆத்திரம்…

உங்கள் மொழியிலே சொல்லணும்னா, உங்க சினிமா கைதட்டல் வாங்கணும்ற “காஜிக்கு”  எங்கள் (திருநங்கையர்) உணர்வுகளை  பலி கொடுத்துவிட்டீர்கள்.

சினிமா உங்கள் கையிலிருக்கு என்ற ஆணவத்தில் / மமதையில் எவர் உணர்வையும் புண்படுத்த்த் துணிந்து விட்டீர்கள்.

திருநங்கையர் குறித்து என்ன தெரியும் உங்களுக்கு? தான் பெண்ணாகிப் போக வேண்டி பாழாய் போன உங்கள் பொதுச் சமூகத்தின் அத்தனை வசவுகளையும், ஒதுக்குதலையும் பொருட்படுத்தாது வாழும் பிறவிகள்.

திரு.விஜய்சேதுபதி அற்புதமான நடிகர் தான். ஆனால் எந்த புரிதலில் படம் எடுத்தீர்கள் திரு.தியாகராஜன் குமாரராஜா அவர்களே…

PRIYA BABU

# # #

முதலில் இந்தப் படத்தில் சொல்லப்படுகிற லாஜிக்கே சரியில்லை. எப்படிப் பெண்களுக்கு பூப்பெய்தல் ஒரு வயசுல ஏற்படுதோ… அப்படித்தான் ஆணாக இருந்து திருநங்கையாக மாறுபவர்களுக்கும் இயல்பிலேயே அவங்களுடைய உடலில் மாற்றத்தை உணர முடியும். அப்படியே இல்லைன்னாலும் அப்படி மாறுபவர்களுக்குப் பெண்கள் மீது ஈர்ப்பு இருக்காது. குழந்தை பிறந்ததுக்கு அப்புறமாகத்தான் அவங்களுடைய உடலில் மாற்றம் ஏற்படுதுன்னாலும் அவையெல்லாமே ஒரே நாளில் ஏற்படுறது இல்லை.

அந்தப் படத்தோட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்குத் திருநங்கைகள் பற்றி துளிகூட புரிதல் இல்லை. முட்டாள்தனமான இயக்குநராகத்தான் எனக்கு அவர் தெரிகிறார். கிராமத்தில் இருக்கிறவங்ககிட்டகூட நான் திருநங்கைன்னு சொன்னா, அடுத்த நொடி அவங்க என்னை உட்கார வைச்சு மரியாதையா பேசுறாங்க. நீயும் பொம்பளை தானேம்மான்னு என்கூட உரையாடுறாங்க. இன்னைக்கு இந்தப் படம் அப்படி உரையாடுறவங்களை தடுத்து இன்னும் 30 வருடங்களுக்குப் பின்நோக்கி அழைச்சுட்டுப் போகுது. இதற்காகத்தான் நாங்க திரும்பத் திரும்ப சென்சார் போர்டில் திருநங்கைகளையும் இணைச்சிக்கோங்கன்னு கோரிக்கை வைக்கிறோம். விலங்குகள் இந்தப் படத்தில் துன்புறுத்தப்படவில்லைன்னு சொல்றவங்களுக்கு… திருநங்கைகளும் மனிதர்கள்தான்னு ஏன் புரியலை? திருநங்கைகளை துன்புறுத்துறீங்களா இல்லையான்னு பார்க்க சென்சார் போர்டில் திருநங்கைகளை வைங்க. அப்படி இல்லைன்னா இனிமேல் இதே மாதிரி படங்களை வெளியிடுற தியேட்டரில் வன்முறையைக் கையாள வேண்டியதுதான்.

ரோட்டில் நான் நடந்து போகும்போது என் இடுப்பை ஒருத்தன் கிள்ளினாலோ, இழிவாகப் பேசினாலோ அவனை நான் செருப்பால் அடிப்பேன். என்னைக் கேவலமா சித்திரிச்சு படம் எடுத்திருக்கிற இயக்குநரையும், அதில் நடிச்ச நடிகரையும் என்ன செய்யலாம்னு சொல்லுங்க! ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் ஒன்பதுன்னு எங்களைக் குறிப்பிட்டிருக்காங்கன்னு அதைக் கண்டிச்சு எங்க கருத்துகளை தெரிவிச்சதும் அந்த இயக்குநர், அந்தப் படத்தில் ஒன்பது என்கிற வார்த்தையை உடனடியாக நீக்கினார். இப்போ இவங்க அப்படி நீக்கணும்னா அந்தப் படத்தையே நீக்க வேண்டியதாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு மோசமா திருநங்கைகளை சித்திரிச்சிருக்காங்க. நான் தெரியாமத்தான் கேட்குறேன்… மறுபடி மறுபடி ‘உஸ், அலி’ போன்ற வார்த்தைகளுக்கு ஏன் உயிர் கொடுக்குறீங்க..

‘திருநங்கை’ன்னு எங்களுக்கு ஒரு பெயர் இருக்கு. இதுக்கு இடையில் எங்களை இழிவுபடுத்தக்கூடிய வார்த்தைகளைத் தேடித் தேடி அதற்கு ஏன் உயிர் கொடுக்குறாங்க. உங்களுடைய ஆணாதிக்க வக்கிர புத்தியில் இந்த மாதிரியாகச் சித்திரிக்கிறதனால்தான் இன்னும் பொள்ளாச்சி சம்பவம் போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படுகிறது.

இந்தப் படம் அந்த அளவுக்கு நல்ல மெசேஜ்லாம் கொடுக்கலை. இது முழுக்க, முழுக்க திருநர் சமூகத்தை அவமதிக்கிற படமாகத்தான் இருக்கிறது. விஜய் சேதுபதி என்கிற நட்சத்திர நடிகர் இது போன்ற கேவலமான கதாபாத்திரத்தில் நடிப்பார்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை. எங்க சமூகம் அடுத்தடுத்த கட்டத்துக்கு போய்ட்டு இருக்கும்போது எங்களைப் பின்நோக்கித் தள்ளுறது எவ்வளவு பெரிய குற்றம்னு அவங்களுக்குத் தெரியுமா! அந்தப் படத்தில் போலீஸ்காரங்க பேசுற விஷயமாக இருக்கட்டும்.. அல்லது அங்கே நடக்கிற சம்பவங்களாக இருக்கட்டும்… எல்லாமே யதார்த்தமான ஒன்றாகவே இருக்கட்டும். ஆனா, இந்தக் காலகட்டம்னு ஒன்று இருக்கு. கலை மக்களுக்கானது. இன்றைய காலகட்டத்தில் திருநர் என்கிற சமூகம் அவங்களுடைய அடிப்படை உரிமைக்காகப் போராடிட்டு இருக்கிறாங்க. அப்படி இருக்கிறவங்களை நீங்க கை கொடுத்து தூக்கி விடலைன்னாலும் பரவாயில்லை. எட்டி உதைச்சு மறுபடி பின்னாடி தள்ளாதீங்க.. எங்களுக்கு நல்லது பண்றோம் என்கிற சிந்தனையில் எங்களை இன்னும் ஒடுக்காதீங்க!

கிரேஸ் பானு