தமிழ் மெயின்ஸ்ட்ரீம் சினிமாஉலகில் நிகழ்ந்திருக்கும் எட்டாவது அதிசயம் ’பராசக்தி’!
இரண்டு விஷயங்ளைச் சொல்லிவிட வேண்டும். சுதா கொங்கராவிடமிருந்து பராசக்தி போன்ற இப்படியான ஒரு படத்தை நான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படம் வெற்றிபெறும்: பெறவேண்டும். தமிழக அரசு இப்படத்திற்கு வரிவிலக்கு அளித்து பள்ளி மாணவர்களுக்கு இப்படத்தைப் போட்டுக் காட்ட வேண்டும்.
நீக்கப்பட்ட காட்சிகள், வசனங்கள் எவையும் படத்தின் அரசியல் செய்தியை நீர்த்துப் போகச் செய்துவிடவில்லை.
தமிழர்கள் பிறமொழி வெறுப்பாளர்கள் அல்ல. அவர்கள் இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்கள். தமது தாய்மொழியை உணர்ச்சிவசமாக நேசிப்பவர்கள். இதுவே இந்தி எதிர்ப்பு அரசியலின் அடிப்படை. இது படத்தில் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் அரசின் சித்திரவதைகள், ராணுவத் தலையீடு, திராவிட மொழிகளின் ஒருமைப்பாடு, வங்கம் உள்ளிட்ட சமகாலத் தலைமுறையினரின் தாய்மொழியுணர்வு படத்தில் வெளிப்பட்டிருப்பது கூடுதல் மகிழ்ச்சி.
சுதாவின் பராசக்தி ஆடல், பாடல், நாயகன், நாயகி, வில்லன், நட்பு, தோழமை, சண்டைக் காட்சிகள் என அனைத்தும் கலந்த ஒரு மெயின்ஸ்ட்ரீம் படம். இதில் ஐம்பதுகள்-எழுபதுகளின் துல்லியமான நிகழ்வுகளை, வரலாற்றுத் தொடர்ச்சியைக் காண அவசியமில்லை.
பெரும் திரை மூலதனத்தைக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தவரிடமிருந்து, அந்த இயக்கத்தின் 75-வது ஆண்டு கொண்டாடப்படும் இந்தத் தருணம் வரை தமிழக வரலாற்றின் மிக முக்கியமான பெரியார் உள்ளிட்ட ஆளுமைகள், இந்தி எதிர்ப்பு போன்ற மிக முக்கியமான நிகழ்வுகள் குறித்து உருப்படியான ஆவணப்படமோ அல்லது முழுநீளக் கதைப்படமோ இல்லாத வெற்றிடத்தில் முகிழ்த்திருக்கும் உணர்ச்சிவசமான படம் சுதாவின் பராசக்தி.
வலதுசாரித் தமிழ்த்தேசியவாதிகள், நெடுங்காலம் தமிழகத்தில் அன்றாடத்தில் தமிழ் படித்துப் பேசி வாழும் தெலுங்கு வம்சாவளியினரான தமிழர்கள் குறித்த வெறுப்பைக் கட்டமைக்கும் சூழலில் பராசக்தியின் நாயகி தமிழுணர்வு கொண்ட தெலுங்குப் பெண்ணாக இருப்பது ஆக்கபூர்வமான பாத்திரப் படைப்பு.
சுதாவின் திரைப்பட வாழ்விலும் தமிழ் மெயின்ஸ்ட்ரீம் சினிமா உலகிலும் நிகழ்ந்திருக்கும் எட்டாவது அதிசயம் பராசக்தி.
-YAMUNA RAJENDRAN
