நடிகர் விஜய் முன்னிலையில் திமுக அரசை பாராட்டி பேசிய ஆற்காடு நவாப் முகமது அலி!
ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது என்று ஆற்காடு நவாப் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் இவ்விழாவில் கலந்துகொண்டார். சிறப்பு அழைப்பளராக இவ்விழாவிற்கு வந்திருந்த ஆற்காடு நவாப் முகமது அலி, விஜய் முன்னிலையில் பேசியதாவது:-
”வணக்கம். நான் முஸ்லிம் மதத்தைப் பின்பற்றுகிறேன். ஆனால் எனது மகன் பெயர் ஜீசஸ். மூத்த மகன் பெயர் ஆப்ரகாம். நாங்களும் மேன்மை தாங்கிய இயேசு கிறிஸ்து, அன்னை மேரி மீது நம்பிக்கை வைத்து இருக்கிறோம். அப்படி இல்லையெனில் நாங்கள் முஸ்லிமே அல்ல. நான் இயேசு கிறிஸ்துவை நம்பவில்லை எனில் நான் முஸ்லிமே கிடையாது. நான் இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைக்க வேண்டும்; அது தான் என்னை உண்மையான முஸ்லிம் ஆக்குகிறது.
ஒற்றுமைக்கு சிறந்த முன்னுதாரணமான மாநிலமாகவும், அமைதியான மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்குகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்கிறது” என்றார்.
த.வெ.க. தலைவர் விஜய் தொடர்ந்து தி.மு.க. அரசை விமர்சனம் செய்து வரும் நிலையில், அவர் முன்னிலையிலேயே ஆற்காடு நவாப் முகமது அலி இப்படி பேசியிருப்பது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
