தீபத்தூணா, சர்வே கல்லா? – திருப்பரங்குன்றம் சர்ச்சையின் பின்னணி!
“திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சர்வே கல். அப்படிப்பட்ட ஆறு கற்கள் அங்கே உள்ளன. முந்தைய வழக்குகளில்கூட அங்கே அப்படியொரு தீபத்தூண் இருப்பது குறித்துப் பேசப்படவில்லை.”
டிசம்பர் 4 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த வாதத்தின்போது சிக்கந்தர் அவுலியா தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.மோகன் இவ்வாறு கூறினார்.
ஆனால், “மலையில் உள்ள தீபத்தூணில் விளக்கு ஏற்றுவது பண்டைய தமிழர்களின் பழக்கமாக இருந்துள்ளதாக” மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.
ஆனால், ‘மலையின் உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
சர்ச்சைக்கு இரு தரப்பும் கூறும் பதில் என்ன?
“கடந்த 2020ஆம் ஆண்டு மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் முயன்றனர். அவர்களை காவல்துறை கைது செய்தது. அங்கு கல் தூண் ஒன்றில் தீபம் ஏற்றுவதற்கு ஏதுவாக சுற்றிலும் கம்பங்களை நட்டு வைத்திருந்த புகைப்படமும் வெளியானது. இதன் பிறகே பிரச்னை தொடங்கியது” என்று கூறுகிறார், சிக்கந்தர் அவுலியா தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப்.
மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் கொடிமரம் என்ற இடம் உள்ளது. இந்தக் கொடி மரத்தின் அருகில் இந்து அமைப்பினரால் ‘தீபத்தூண்’ என அழைக்கப்படும் ஓர் அமைப்பு உள்ளது.
“தர்காவுக்கு சொந்தமான கொடி மரத்தில் உள்ள கொடியை அவிழ்க்க வேண்டும்” எனக் கூறி 2021ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி அமைப்பினர் மனு கொடுத்ததாகக் கூறும் அல்தாஃப், “தர்காவுக்கும் கொடி மரத்துக்கும் இடையில் உள்ள தூரத்தை ஆய்வு செய்வதற்காக திருமங்கலம் கோட்டாட்சியர் வந்தார்” என்கிறார்.
அப்போது, “இது சர்வே கல்” என்று அதிகாரிகள் கூறிய பிறகே தங்களுக்குத் தெரிய வந்ததாகக் கூறும் அல்தாஃப், “தர்கா தொடர்புடைய ஆவணங்களில் கொடி மரத்தின் அருகில் கல் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது” எனக் கூறுகிறார்.
இதை மறுத்துப் பேசும் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன், “நில அளவைக் கல் என்பது நான்கு புறமும் இருக்க வேண்டும். அந்தக் கல்லின் முடிவு எங்கே என அவர்கள் காட்ட வேண்டும். சர்வே கல் என்பது ஒரு அடிக்கும் குறைவாகவே நடப்படும். இது ஏழு அடிக்கு இருக்கிறது” என்கிறார்.
“மலை உச்சியில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆய்வு நடத்தி தீர்ப்பு வழங்கினார். கோவில் நிர்வாகமும் அதை தீபத்தூண் என்றே கூறுகிறது. அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக இவ்வாறு பேசுகின்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.
“இந்த ஆண்டு மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து தமிழர் கட்சியின் நிறுவனரான ராம ரவிக்குமார், கடந்த நவம்பர் மாதம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில், மலையின் உச்சியில் தீபம் ஏற்றுமாறு கோவில் நிர்வாகத்திற்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு காவல்துறை அனுமதி அளிக்காததால் இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்கா தரப்பின் ‘சர்வே கல்’ என்ற வாதம்
தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. அப்போது நடந்த வாதத்தில், “அங்கே இருப்பது சர்வே கல், தீபத்தூண் அல்ல. அது போன்ற 6 கற்கள் அங்கு உள்ளன” என்று தர்கா தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் எம்.ஆர்.வெங்கடேஷ், “கடந்த காலங்களில் தீபத்தூண் இருந்தது. தர்காவில் இருந்து 15 மீட்டருக்கு அப்பால் தீபம் ஏற்றலாம் என முந்தைய வழக்குகளில் கூறப்பட்டிருந்தது” எனக் கூறினார்.
ஆங்கிலேயர் காலத்தில் இருந்த பழக்க வழக்கங்களைப் பார்க்கக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், “தீபத்தூணில் விளக்கு ஏற்றுவது பண்டைய தமிழர்களின் வழக்கமாக இருந்தது” என வாதிட்டார்.
இதையடுத்து, ‘தீபத்தூண்’ மற்றும் ‘சர்வே கல்’ குறித்து சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன.
பொதுவாக, ‘சர்வே அடையாளக் கற்கள்’ அல்லது ‘தியோடலைட் ஸ்டோன்கள்’ என்பவை, ஆங்கிலேயர் காலத்தில் நில அளவை பணிகளின்போது அடையாளப்படுத்துவதற்காக நட்டு வைக்கப்பட்டவை என்று கூறுகிறார் மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்.
‘மதுரையில் 2 சர்வே பணிகள்’
இதைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசிய அ. முத்துக்கிருஷ்ணன், “ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியை வரைபடமாக மாற்றுவது சர்வே பணியின் முதல் நோக்கமாக இருந்தது. முதலில் நகரத்திலும் பிறகு கிராமப்புறங்களிலும் சர்வே பணிகளை மேற்கொண்டனர்” என்கிறார்.
சாலைகள், ரயில்வே திட்டங்கள், கால்வாய்கள் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களைத் திட்டமிடுவதற்கு இதுபோன்ற துல்லியமான வரைபடங்கள் ஆங்கிலேயர்களுக்கு அவசியமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
மதுரையில் 1891ஆம் ஆண்டு முதல் 1894ஆம் ஆண்டு வரை நில அளவைப் பணிகள் நடந்ததாகக் கூறும் அவர், “அடுத்து, 1905 முதல் 1926 வரை இரண்டாவது நில அளவைப் பணிகள் நடந்துள்ளதாகவும்” குறிப்பிட்டார்.
“இந்தியா முழுவதும் அறிவியல்பூர்வமாக மிகத் துல்லியமாக நில அளவை செய்வதற்கான முயற்சியில் இந்தக் கற்கள் முக்கியத் தரவுப் புள்ளிகளாகச் செயல்பட்டன” என்கிறார் அவர்.
உயரமான பகுதியில் ஒரு கல்லை வைத்துவிட்டு அங்கிருந்து அதன் தொலைவு வரை அளவை செய்ததாகக் கூறும் முத்துக்கிருஷ்ணன், “ஒரு புள்ளியில் இருந்து அடுத்த இடத்தை அளப்பார்கள். முக்கோண வடிவில் இவை வரையறுக்கப்பட்டன” எனவும் குறிப்பிட்டார்.
“அந்த வகையில், திருப்பரங்குன்றம் மலையில் இருப்பதிலேயே உயரமான ஓர் இடத்தில் சர்வே கல்லை ஆங்கிலேயர்கள் நட்டு வைத்தார்கள்” என்று முத்துக்கிருஷ்ணன் தெரிவித்தார்.
ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
“மலைக்குச் செல்லும் வழியில் தீபத்தூண் உள்ளது. அங்கு அனுமார் படத்துடன் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஆங்கிலேயர் காலத்தில் மலையின் உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சிப் பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது” எனக் கூறுகிறார் தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம்.
கல்வெட்டு ஆய்வாளர் செ.போசு எழுதிய ‘திருப்பரங்குன்றம்’ என்ற புத்தகத்தில் அந்த ‘தீபத்தூண்’ குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இந்தப் புத்தகத்தை 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.
‘புண்ணியவான்கள் விளக்கேற்றலாம்’
‘தீபத்தூண்’ என்ற தலைப்பில் செ.போசு எழுதியுள்ள பத்தியில், “மலையடிவாரத்தில் இருந்து மலைக்குச் சென்றால் பாதி வழியில் தீபத்தூண் ஒன்று இருப்பதைக் காணலாம். இந்தத் தூண் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. நாயக்கர் காலத்துக் கல்வெட்டும் தூணிலேயே எழுதப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.
“கல்வெட்டுக்கு மேலே அனுமன் ஒரு கையை ஓங்கிக் கொண்டு முகத்தை இடது பக்கம் திருப்பிக் கொண்டிருப்பது போன்ற சிற்பம் உள்ளது. இந்த தீபத்தூணில் புண்ணியவான்கள் அனைவரும் விளக்கேற்றலாம்” என்று அந்தக் கல்வெட்டு கூறுவதாக புத்தகத்தில் செ.போசு தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த தீபத்தூணில் கார்த்திகை தோறும் ஊரிலுள்ள மக்கள் விளக்கேற்றி வருவதாகவும்” அவர் நூலில் குறிப்பிட்டுள்ளார். இதில் எந்த இடத்திலும் “கொடி மரத்தின் அருகிலுள்ள தூண்” குறித்து செ.போசு தெரிவிக்கவில்லை.
அதோடு, மலையின் உச்சியில் இரு பாறைகளுக்கு இடையில் சமாதி ஒன்று உள்ளதாகவும் அதில் சிக்கந்தர் பாட்ஷா என்ற பக்கிரி அடக்கமாகி இருப்பதாகவும் நூலில் கூறியுள்ள செ.போசு, ‘நாட்டிலுள்ள முகம்மதியர்கள் இங்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Courtesy: BBC NEWS தமிழ்
