ஐபிஎல் (இந்தியன் பீனல் லா) – விமர்சனம்

நடிப்பு: கிஷோர், டிடிஎஃப் வாசன், அபிராமி, குஷிதா கல்லப்பு, ஆடுகளம் நரேன், திலீபன், ஜான் விஜய், போஸ் வெங்கட், ஹரீஷ் பெராடி, சிங்கம்புலி, ஜனனி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: கருணாநிதி

ஒளிப்பதிவு: எஸ்.பிச்சுமணி

படத்தொகுப்பு: பிரகாஷ் மாப்பு

இசை: அஷ்வின் வினாயகமூர்த்தி

ஸ்டண்ட்: தினேஷ் சுப்பராயன்

கலை: வெங்கல் ரவி

நடனம்: ராஜேஷ் கிறிஸ்டி, நோபிள் ஜெஸிகேய்

தயாரிப்பு: ’ராதா பிலிம் இண்டர்நேஷனல்’ ஜி.ஆர்.மதன் கிருஷ்ணன்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

பிரபல யூடியூபரும், பொது சாலைகளில் படுபயங்கரமாக பைக் ஓட்டி, ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டு, அடிக்கடி சர்ச்சையில் சிக்கி, கைதானவருமான ‘பைக் ரைடர்’ டிடிஎஃப் வாசன், முதன்முதலாக நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் என்பதாலும், கொடநாடு கொலை – கொள்ளை விவகாரம் மற்றும் ஆங்காங்கே நடந்திருக்கும் லாக்கப் மரண சம்பவங்கள் ஆகியவற்றால் ஊக்கம் பெற்று உருவான திரைப்படம் என்று கூறப்படுவதாலும், ‘ஐபிஎல் (இந்தியன் பீனல் லா)’ திரைப்படம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்பார்ப்பை இந்த திரைப்படம் பூர்த்தி செய்கிறதா? பார்ப்போம்…

ஒரு டிராவல் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்க்கும் குணசேகரன் (கிஷோர்), தனது மனைவி வசந்தி (அபிராமி), தங்கை கனிமொழி (குஷிதா கல்லப்பு), மகள் (ஜனனி) சகிதம் அமைதியான நடுத்தர வர்க்கக் குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவர் தன்னுடன் பணிபுரியும் டிரைவர் ஒருவருக்கு உதவப்போய், வேலையை விட்டு நீக்கப்படுகிறார். இதனால் மனமுடைந்து நிற்கும் கணவர் குணசேகரனுக்காக வசந்தி தன் நகைகளை விற்று, கையிருப்பு ரொக்கத்தையும் சேர்த்துப் போட்டு, சொந்தமாக கார் வாங்கி, குணசேகரனை அதன் உரிமையாளர் ஆக்கி, சொந்த டாக்ஸியின் டிரைவர் ஆக்குகிறார்.

ஒருநாள் டெலிவரி பாயான நாயகன் அன்பு (டிடிஎஃப் வாசன்) பைக்கில் போகும்போது, குணசேகரன் குறுக்கே வர, அவரை கெட்ட வார்த்தையால் திட்டிவிட்டு சென்றுவிடுகிறார் அன்பு. அந்த டென்ஷனில் குணசேகரன் சாலையைக் கடக்கும்போது, ஒரு பைக் மீது தவறுதலாக மோத, அந்த பைக் அவர் கால்மேல் ஏற, விபத்துக்கு உள்ளாகிறார். இதில் அவருக்கு கால் முறிவு ஏற்படுகிறது. ஊன்றுகோல் இல்லாமல் நடமாட முடியாது என்ற நிலையில், டாக்ஸி ஓட்ட முடியாது என்பதால், தன் காரை இன்னொரு டிராவல் நிறுவனத்திடம் வாடகைக்குக் கொடுக்கிறார்.

தனது அவல நிலைக்குக் காரணம், தன்னை கெட்ட வார்த்தையில் திட்டிய டெலிவரி பாய் அன்பு தான் என்று கருதும் குணசேகரன், அன்பு மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இந்த நிலையில், அன்பு தன் தங்கை கனிமொழியின் காதலர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார். “அவனை மறந்துவிடு” என்று தங்கையிடம் கறாராகச் சொல்லி விடுகிறார்.

இதனிடையே, த.கு.க என்ற அரசியல் கட்சியின் தலைவர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதே கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் திருப்பதிசாமி (ஆடுகளம் நரேன்), கட்சித் தலைவரின் பண்ணை வீட்டில் உள்ள முக்கிய ஆவணங்களைத் திருடி கொண்டு வருமாறு ஆட்களை அனுப்புகிறார். அதன் விளைவாக சில கொலைகளும் நடக்கின்றன.

இந்நிலையில், மதுரையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் (போஸ் வெங்கட்), தான் லஞ்சம் வாங்கியதை ராஜேஷ் என்ற இளைஞர் வீடியோ எடுத்துவிட்டார் என்று நினைத்து, ராஜேஷை லாக்கப்பில் அடைத்து, மிருகத்தனமாகத் தாக்க, அவர் பரிதாபமாக இறந்துவிடுகிறார். தான் சம்பந்தபட்ட வீடியோவை அழிப்பதற்காக அவரது செல்போனை எடுத்துத் துளாவும் முத்துக்கருப்பன், அதில் முதலமைச்சர் சம்பந்தப்பட்ட ஓர் அதிபயங்கர வீடியோ இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார், அந்த வீடியோவை வைத்து, ராஜேஷின் லாக்கப் மரண விவகாரத்திலிருந்து அவர் தப்பிக்கப் பார்க்கிறார்…

இதனால் ராஜேஷின் லாக்கப் மரணத்தை மறைக்க, காவல்துறை அதிகாரிகளும், அரசியல் பெரும்புள்ளிகளும் சதித்திட்டம் தீட்டுகின்றனர். இதன்படி, சென்னையில் இருக்கும் அப்பாவியான குணசேகரனை பலிகடாவாக்கி கைது செய்கின்றனர்.

குணசேகரன் இந்த விவகாரத்தில் மோசடியாக எப்படி சிக்க வைக்கப்பட்டார்? தனது காதலியின் அண்ணனான அவரை இந்த அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்து நாயகன் அன்பு எப்படி காப்பாற்றுகிறார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ஐபிஎல் (இந்தியன் பீனல் லா)’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் டெலிவரி பாய் அன்புவாக டிடிஎஃப் வாசன் நடித்திருக்கிறார். அவர் அறிமுக நாயகன் என்பதாலோ என்னவோ, படத்தில் அவருக்கு மிகைப்படுத்தப்பட்ட மாஸ் அறிமுகம் எதுவும் இல்லை. முதல் பாதி முழுவதும் அமைதியாகவே வலம் வருகிறார். எமோஷனல் காட்சிகளிலும், வசன உச்சரிப்பிலும் நடிக்க சற்று திணறினாலும், கிளைமாக்ஸில் வரும் பைக் ஸ்டண்ட் காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார்.

டாக்ஸி டிரைவர் குணசேகரனாக கிஷோர் நடித்திருக்கிறார். உண்மையில், கிஷோர் தான் இந்த முழுப்படத்தையும் தன் நடிப்பால் தாங்கிப் பிடித்திருக்கிறார். கால் உடைந்த நிலையில் அவர் வெளிப்படுத்தும் வலியும், காவல் நிலையத்தில் அடிவாங்கும் காட்சிகளும், பார்வையாளர்களின் அனுதாபத்தை அள்ளுகின்றன. அதிகாரத்தை எதிர்த்து அவர் பேசும் வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன.

குணசேகரனின் மனைவி வசந்தியாக வரும் அபிராமி, தங்கை கனிமொழியாக வரும் குஷிதா கல்லப்பு, மகளாக வரும் ஜனனி, வசந்தியின் அண்ணனாக வரும் சிங்கம்புலி, முதலமைச்சர் திருப்பதிசாமியாக வரும் ஆடுகளம் நரேன், லாக்கப் மரணத்துக்குக் காரணமான இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பனாக வரும் போஸ் வெங்கட், நல்ல போலீஸ் அதிகாரி தட்சணாமூர்த்தியாக வரும் திலீபன், வில்லத்தனம் செய்யும் போலீஸ் அதிகாரி பிரிஜிவ் மேனனாக வரும் ஹரீஷ் பெராடி, கேவலமான ஸ்பெஷல் ஸ்குவாடு அதிகாரியாக வரும் ஜான் விஜய் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் கருணாநிதி. சமகால அரசியல் நிகழ்வுகள் சிலவற்றை நினைவுபடுத்தும் விதத்தில் கதையை உருவாக்கியதற்காகவும், நல்ல போலீஸ் அதிகாரிக்குப் பெயர் தட்சணாமூர்த்தி, கெட்ட போலீஸ் அதிகாரிக்குப் பெயர் முத்துக்கருப்பன் என்பது போல், தனது அரசியல் சார்பை படம் முழுவதும் ஆங்காங்கே காட்டியிருப்பதற்காகவும், படம் முடிந்தபின் லாக்கப் சித்ரவதையால் நிஜத்தில் இறந்தவர்களைக் காட்டியதற்காகவும் இயக்குநரை பாராட்டலாம்.

எனினும், படத்தில் பல லாஜிக் மீறல்கள். மதுரையில் லாக்கப் மரணம் ஆனதை மறைக்க சென்னையில் உள்ள ஒருவரை ஏன் குற்றவாளியாக்க முயற்சிக்க வேண்டும்? நாயகன் சாதாரண டெலிவரி பாயாகத் தான் அறிமுகமாகிறார். ஆனால் இரண்டாம் பாதி முழுவதும் அவர் காரிலேயே பயணிக்கிறார். அது ஏன், எப்படி என்று விளக்கவில்லை. இதுபோல ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். ஒரு நல்ல கதைக்கருவை கையில் எடுத்திருந்தாலும் திரைக்கதையிலும், மேக்கிங்கிலும் நிறைய சொதப்பல்கள். இக்குறைகளை இயக்குநர் களைந்திருந்தால், படத்தை இன்னும் நன்றாக ரசித்திருக்கலாம்.

’ஐபிஎல் (இந்தியன் பீனல் லா)’ – அரசியல் குறியீடுகளுக்காகப் பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 2.75/5