யெல்லோ – விமர்சனம்

நடிப்பு: பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், டெல்லி கணேஷ், சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், இயக்குநர் பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி, விக்னேஷ்வர், லோகி, அஜய் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஹரி மகாதேவன்

இணை எழுத்தாளர் / இணை இயக்குநர்: ஹரிஷ்மா சரவணன்

ஒளிப்பதிவு: அபி ஆத்விக்

படத்தொகுப்பு: ஸ்ரீவாட்சன்

பாடலிசை: கிளிஃபி கிரிஸ்

பின்னணி இசை: ஆனந்த் காசிநாத்

தயாரிப்பு: ’கோவை பிலிம் ஃபேக்டரி’ பிரசாந்த் ரங்கசாமி

பத்திரிகை தொடர்பு: பரணி அழகிரி

நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர் நாயகி ஆதிரை (பூர்ணிமா ரவி). சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் கடன்வசூல் பிரிவில் ’டெலி காலராக’ வேலை பார்க்கிறார். இவரது காதலர் சந்தோஷுக்கு (சாய் பிரசன்னா) பெரிய படிப்பு, பெரிய வேலை, கை நிறைய சம்பளம், இனிமையான வாழ்க்கை என்பது தான் கனவு. தனது காதலரான ஆதிரையையும் பிரைன்வாஷ் பண்ணி, அவரையும் இதே மனநிலைக்குக் கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் ஆதிரையின் அப்பா (டெல்லி கணேஷ்) திடீரென பக்கவாதம் வந்து, வீட்டிலேயே முடங்கிவிடுகிறார். அம்மா, தங்கை, அப்பா, இவர்களைக் கவனிக்கும் குடும்பச்சுமை மொத்தமும் ஆதிரையின் மீது விழுகிறது. இதனால் காதலர் சந்தோஷின் கனவு தகர்கிறது. ஆதிரையை பிரேக்கப் செய்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். இதனால் ஆதிரை மன அழுத்தத்துக்கும், விரக்திக்கும் ஆளாகிறார்.

இவற்றிலிருந்து விடுபட, வங்கி வேலைக்கு சில நாட்கள் விடுமுறை போட்டுவிட்டு, தனது பழைய உறவுகளையும், பழைய நண்பர்களையும் தேடிப் புறப்படுகிறார் ஆதிரை. முதலில் கேரளாவிலுள்ள கொச்சிக்குச் சென்று தனது தோழி ஜென்னியை (நமீதா கிருஷ்ணமூர்த்தி) சந்திக்கிறார். குட்டை உடை, கல்யாணம் வரை போகாது என்று தெரிந்தே படுக்கையைப் பகிர்ந்துகொள்ள ஒரு பாய் ஃபிரண்டு என கலாசார காவலர்களுக்கு அதிர்ச்சி தரும் ஒரு வாழ்க்கை முறையில் ஜென்னி வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது டூ-வீலரை வாங்கிக்கொண்டு, சொந்த ஊர் நோக்கிப் பயணப்படும் ஆதிரையுடன், அவரைப் போலவே காதல் தோல்வியில் டூ-வீலரில் சுற்றி அலையும் சாய் (வைபவ் முருகேசன்) இணைந்துகொள்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது? இப்பயணத்தில் இவர்கள் யாரையெல்லாம் சந்தித்தார்கள்? என்னவெல்லாம் கண்டடைந்தார்கள்? என்ற கேள்விகளுக்கான விடையை ரொம்ப ஃபிரஷ்ஷாக, சுவாரஸ்யமாக சொல்கிறது ‘யெல்லோ’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகி ஆதிரையாக பூர்ணிமா ரவி நடித்திருக்கிறார். யூ-டியூப் மற்றும் ’பிக்பாஸ் தமிழ்’ பிரபலமான இவர், ஏற்கெனவே ஓரிரு படங்களில் முகம் காட்டியிருந்தாலும், அவரது நடிப்பு வேட்கைக்கு சரியான, சவாலான வேடம் இந்த ‘யெல்லோ’வில் தான் அமைந்திருக்கிறது. இந்த வாய்ப்பை கச்சிதமாகப் பற்றிக்கொண்டு, காதல், சோகம், ஜாலி என அனைத்திலும் இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி, ஒற்றை முக்கிய ஆளாக இப்படத்தை தன் தோளில் சுமந்திருக்கிறார். வாழ்த்துகள் பூர்ணிமா ரவி.

நாயகியுடன் பயணிக்கும் சக பயணியாக சாய் என்ற கதாபாத்திரத்தில் வைபவ் முருகேசன் நடித்திருக்கிறார். அவரும் ரொம்ப யதார்த்தமாக நடித்து, தனது கதாபாத்திரத்துக்கு உயிரூட்டி, கவனிக்க வைக்கிறார்.

நாயகியின் அப்பாவாக வரும் டெல்லி கணேஷ், காதலர் சந்தோஷாக வரும் சாய் பிரசன்னா, தோழி ஜென்னியாக வரும் நமீதா கிருஷ்ணமூர்த்தி, கல்யாணியாக வரும் லீலா சாம்சன், மேரி பெர்னாண்டஸாக வரும் வினோதினி வைத்தியநாதன், மணி அண்ணாவாக வரும் இயக்குநர் பிரபு சாலமன், விக்னேஷாக வரும் விக்னேஷ்வர், முகுந்தாக வரும் லோகி, சில்வாவாக வரும் அஜய் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை ஹரி மகாதேவனும், ஹரிஷ்மா சரவணனும் சேர்ந்து எழுத, இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கியிருக்கிறார். படம் பார்க்கும் பார்வையாளர்கள் கரைந்துருகி ஏங்கும் விதத்தில் இப்பயணக் கதையை நேர்த்தியான படைப்பாக கொடுத்திருக்கிறார்கள். எளிமையான கதை என்றாலும், பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் அமைத்திருக்கும் திரைக்கதையும், காட்சிகளும் படத்தை ரசிக்க வைக்கின்றன. வசனங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன.

அருமையான லொக்கேஷன்களை அழகியலோடு காட்சிப்படுத்தி, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துவிடும் இயக்குநர் ஹரி மகாதேவன், இறுக்கமான மனங்களை இலகுவாக்கும் ஒரு புத்துணர்ச்சி பயணத்தை வெற்றிகரமாக சொல்லி முடித்து கைதட்டல் பெறுகிறார்.

கதை மற்றும் நாயகி பயணிக்கும் ஒவ்வொரு லொக்கேஷனையும் கண்களுக்கு விருந்தாக அட்டகாசமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபி ஆத்விக். குறிப்பாக கேரளா, கோவா காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. பாராட்டுகள் அபி ஆத்விக்.

பாடல்களுக்கு இசையமைத்துள்ள கிளிஃபி கிறிஸ், பின்னணி இசை அமைத்துள்ள ஆனந்த் காசிநாத் ஆகிய இருவரின் பணியும் கதையோடு பயணிப்பது படத்திற்கு பலம்.

’யெல்லோ’ – ரொம்ப புதுசாகவும் இருக்கு; கிளாஸாகவும் இருக்கு. பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3.5/5