தாவுத் – விமர்சனம்

நடிப்பு: லிங்கா, சாரா ஆச்சர், திலீபன், ராதாரவி, சாய் தீனா, ஸாரா, வையாபுரி, சரத்ரவி, அர்ஜெய், அபிஷேக், ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன் மற்றும் பலர்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: பிரசாந்த் ராமன்

ஒளிப்பதிவு: சரத் வளையாபதி, பிரேண்டன் சுஷாந்த்

படத்தொகுப்பு: ஆர்.கே.ஸ்ரீநாத்

இசை: ராக்கேஷ் அம்பிகாபதி

பாடல்கள்: அருண் பாரதி

கலை: ஜெய் முருகன்

நடனம்: ஸ்ரீக்ரிஷ்

தயாரிப்பு: ’TURM புரொடக்ஷன் ஹவுஸ்’ எஸ்.உமா மகேஸ்வரி

பத்திரிகை தொடர்பு: புவன் செல்வராஜ்

சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலை மிகப் பெரிய அளவில் செய்யும் ‘கடத்தல் மன்னன்’ ஆக, ‘நிழலுலக தாதா’வாகத் திகழ்பவர் தாவுத். அவர் மும்பையில் இருந்துகொண்டு, தமிழ்நாட்டிலும் தனது ஆட்கள் மூலம் போதைப் பொருள் கடத்தல் தொழிலைத் திறம்பட நடத்தி வருகிறார். இருந்தும், தாவுத் எப்படி இருப்பார் என்பது வெளியுலகில் யாருக்கும் தெரியாது. அவரது போட்டோ, வீடியோ கூட கிடைக்காமல், அவரை அடையாளம் காண முடியாமல் திணறுகிறது போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறை.

இது ஒருபுறமிருக்க, சென்னையில் மூர்த்தி (சாய் தீனா), விசாகம் (அபிஷேக்) ஆகிய இருவரும் எதிரெதிர் துருவங்களாக போட்டி போட்டுக்கொண்டு கடத்தல் தொழில் செய்து வருகின்றனர். தாதா தாவுத்தின் கடத்தல் பொருட்களை, கடந்த இருபது வருடங்களாக, காவல்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு சாமர்த்தியமாகக் கைமாற்றிக் கொடுத்து, தாவுத்தின் நம்பகமான ஆளாக இருந்து வந்தார் மூர்த்தி. ஆனால், கடந்த முறை அவர் கைமாற்றிக் கொடுப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, இம்முறை அவ்வேலையை மூர்த்தியின் போட்டியாளரான விசாகத்திடம் ஒப்படைக்கிறது தாவுத் தரப்பு.

இதனால் கோபமடைந்து தன்முனைப்பு கொள்ளும் மூர்த்தி, விசாகத்துக்கு அனுப்பப்படும் கடத்தல் பொருளைக் கைப்பற்ற திட்டம் தீட்டுகிறார். அதே நேரத்தில், தாவுத்தின் கடத்தல் பொருளைக் கைப்பற்றும் முயற்சியில் காவல்துறை அதிகாரி அரவிந்த் (அர்ஜெய்) தலைமையிலான போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையும் தீவிரமாக இருக்கிறது. இப்படி தன்னைச் சுற்றி ஆபத்து நெருங்கிவருவதை உணரும் விசாகம், கடத்தல் பொருளைத் தனது வழக்கமான ஆட்கள் மூலம் அனுப்பினால் அகப்பட்டுக் கொள்ளும் என்பதால், காரியத்தை வெற்றிகரமாக செய்துமுடிக்க ஒரு நம்பகமான புது ஆள் தேவை என்று நினைக்கிறார்.

இதனிடையே, ’கால் டாக்ஸி’ வைத்து தனது அன்றாட பிழைப்பை நடத்தி வருகிறார் கதையின் நாயகன் தம்பிதுரை (லிங்கா). ’பயபக்தி’யுடன் மணி ஆட்டி சரக்கடிக்கும் காமெடி நண்பர் மணி (ஸாரா) தம்பிதுரைக்கு துணையாக இருக்கிறார். இருந்தும், வருமானம் போதாமல், கார்கடன் தவணை உள்ளிட்ட பணப் பிரச்சனையால் விழிபிதுங்கும் தம்பிதுரை, தற்செயலாக டேனி (சாரா ஆச்சர்) என்ற இளம்பெண்ணைச் சந்திக்கிறார். பேச்சுவாக்கில் தனது பணப் பிரச்சனையைச் சொல்லுகிறார். அவருக்கு உதவ நினைக்கும் டேனி, கடத்தல் கும்பல் தலைவரான விசாகத்தின் வலது கரமாக செயல்பட்டு வரும் தனது காதலரான ஜானியிடம் (சரத் ரவி) தம்பிதுரை பற்றி சொல்லி, அவருக்கு கூடுதல் வருமானத்துக்கு ஏதாவது ஏற்பாடு செய்து தரும்படி வேண்டுகிறார். ஜானி முதலில் மறுத்தாலும், பின்னர் தம்பிதுரையின் நல்லியல்புகள் கண்டு சம்மதித்து, தாவுத்தின் கடத்தல் பொருட்களைக் கைமாற்றிவிட புது ஆள் தேடும் விசாகத்திடம் சேர்த்துவிடுகிறார்.

பணத்தேவைக்காக நிழலுலகத்துக்குள் நுழைந்து, கடத்தல் கும்பலோடு சேரும் தம்பிதுரை, திட்டமிட்டபடி தாவுத்தின் போதைப் பொருளை வெற்றிகரமாக கைமாற்றி விட்டாரா? அதன்பிறகு என்ன நடந்தது? நிழலுலகில் வாழும் தாவூத் வெளிச்சத்துக்கு வந்தாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு பரபரப்புடன் விடை அளிக்கிறது ‘தாவுத்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, ‘கால் டாக்ஸி’ டிரைவராக லிங்கா நடித்திருக்கிறார். அவர் இதுவரை நடித்திராத வேடத்தில் இப்படத்தில் வருகிறார். முதலில் அப்பாவியாக வந்து நிறைவாக நடித்திருக்கிறார். பின்னர் இரண்டாம் பாதியின் பிற்பாதியில் முற்றிலும் வேறான அவதாரம் எடுத்து அதிர்ச்சி கொடுக்கிறார்.

நாயகனின் நண்பர் மணியாக ஸாரா நடித்திருக்கிறார். நெற்றியில் விபூதி, கையில் மணி சகிதம் சரக்கடிப்பவராக வரும் ஸாரா, படம் முழுக்க நாயகனுடன் சேர்ந்து வந்து செம ரகளை செய்து பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறார்.

தாதா தாவுத்தின் அடியாள் பாய்சனாக வரும் திலீபன், கடத்தல் கும்பல் ஒன்றின் தலைவர் மூர்த்தியாக வரும் சாய் தீனா, மற்றொரு கடத்தல் கும்பலின் தலைவர் விசாகமாக வரும் அபிஷேக், விசாகத்தின் வலது கரமாக, ஜானியாக வரும் சரத் ரவி, ஜானியின் காதலி டேனியாக வரும் சாரா ஆச்சர், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை அதிகாரி அரவிந்தாக வரும் அர்ஜெய், காவல்துறை உயர் அதிகாரியாக வரும் ராதாரவி, மற்றும் ஆனந்த் நாக், ஜெயகுமார், சேரன்ராஜ், சரவணன் சீலன், வையாபுரி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி வழங்கியிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரசாந்த் ராமன். முகம் வெளிப்படாத தாதா தாவுத் மற்றும் அவரது கடத்தல் பொருளை வைத்துக்கொண்டு, இரண்டு மணி நேரம் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் படத்தை பரபரப்பாக நகர்த்திச் சென்றுள்ளார். தாவுத் யார்? அவரது கடத்தல் பொருளைக் கைப்பற்றப் போவது யார்? என்ற இரண்டு கேள்விகளை மட்டும் பெரிதாக எழுப்பி, அவற்றுக்கு விடை தெரிந்து கொள்ளும் ஆவலை பார்வையாளர்களிடம் தூண்டிவிட்டு, அவர்களது கவனத்தை சிதறவிடாமல், அவர்களை சீட் நுனியில் அமர வைத்து இயக்குநர் கதை சொல்லியிருக்கும் பாங்கு பாராட்டுக்கு உரியது.

ராக்கேஷ் அம்பிகாவின் இசை, சரத் வளையாபதி, பிரேண்டன் சுஷாந்த் ஆகியோரின் ஒளிப்பதிவு, ஆர்.கே.ஸ்ரீநாத்தின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்தின் தரத்தை உயர்த்த உறுதுணையாக இருந்துள்ளன.

’தாவுத்’ – முற்றிலும் வித்தியாசமான கிரைம் ஆக்ஷன் திரில்லர்; பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3.25/5