ஆண்பாவம் பொல்லாதது – விமர்சனம்

நடிப்பு: ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், ஷீலா ராஜ்குமார், ஜென்சன் திவாகர், ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர்

எழுத்து: சிவகுமார் முருகேசன், கலையரசன் தங்கவேல்

இயக்கம்: கலையரசன் தங்கவேல்

ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

படத்தொகுப்பு: கேஜி வருண்

கலை: வினோத் ராஜ்குமார்

இசை: சித்து குமார்

தயாரிப்பு: ’டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ்’ வெடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல்

தமிழ்நாடு வெளியீடு: ஏஜிஎஸ் சினிமாஸ்

பத்திரிகை தொடர்பு: சதீஷ்குமார் (எஸ்2 மீடியா)

குடும்பத்தில் கணவன் பெரியவனா? அல்லது மனைவி பெரியவளா? என்ற தகராறு புராணக் கதைகளிலேயே உண்டு என்பது ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் – சாவித்திரி நடித்த ‘திருவிளையாடல்’ திரைப்படம் பார்த்தவர்கள் அறிவார்கள். அதில் சிவன் தான் பெரியவன் என்று சிவனாகிய சிவாஜி கணேசனும், சக்தி தான் பெரியவள் என்று சக்தியாகிய சாவித்திரியும் தீவிரமாக வாதாடுவார்கள். இந்த வாதம் முற்றி, ஒரு கட்டத்தில் ஒருவரை ஒருவர் அழிக்க முயலும் அளவுக்குப் போய்விடுவார்கள். இறுதியில் “சக்தி இல்லையேல் சிவன் இல்லை. சிவன் இல்லையேல் சக்தி இல்லை” என்ற சமரசத்தில் இந்த பஞ்சாயத்து முடிவடைவதாகக் காட்டியிருப்பார்கள்.

’ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படத்தின் துவக்கத்தில் மேற்படி ’திருவிளையாடல்’ திரைப்படக் காட்சியை கொஞ்சமாய் இணைத்து, “நாங்கள் சொல்லப்போகும் விவகாரமும் இது தான்” என்று சொல்லாமல் சொல்லி, படக்கதையை ஆரம்பிக்கிறார் ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படத்தின் அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல்.

மதுரையைச் சேர்ந்த நாயகன் சிவா (ரியோ ராஜ்), சென்னையில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். தனக்கு மனைவியாக வருபவரை சரிசமமாகப் பாவித்து மரியாதையுடன் நடத்த வேண்டும் என்ற கொள்கை உடையவர் சிவா.

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் சக்தி (மாளவிகா மனோஜ்). தனக்கு கணவராக வருபவர் தன்னை தன் விருப்பப்படி வாழ அனுமதிப்பவராகவும், தன்னுடைய எடுபிடியாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பவர்.

இத்தகைய முரண்பாடான எண்ணங்கள் கொண்ட சிவாவுக்கும், சக்திக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் ‘ஏற்பாட்டுத் திருமணம்’ நடைபெறுகிறது. மணமக்கள் இருவரும் சென்னையில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறுகிறார்கள்.

தொடக்கத்தில் காதல், ஊடல், செல்லச் சண்டை என நகரும் தாம்பத்திய வாழ்க்கை, சில நாட்களிலேயே கருத்து வேறுபாடுகள் காரணமாக ஈகோ மோதல்களாக வெடிக்கிறது. இனியும் பொறுப்பதற்கில்லை என்ற முடிவுக்கு வரும் சக்தி விவாகரத்து கோரி நீதிமன்றம் செல்லத் துணிகிறார்.

விவாகரத்து வேண்டாம் என்று சொல்லும் சிவாவுக்கு ஆதரவாக குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நாராயணன் (ஆர்ஜே விக்னேஷ்காந்த்) ஆஜராகிறார். நாராயணனை விவாகரத்து செய்த அவரது முன்னாள் மனைவி லட்சுமி (ஷீலா ராஜ்குமார்), விவாகரத்து வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சக்திக்கு ஆதரவாக வாதாடுகிறார்.

இதன்பின் என்ன நடந்தது? நீதிமன்றத்தில் விவாகரத்து கிடைத்ததா, இல்லையா? வழக்கிலும், வாழ்க்கையிலும் யார் வெற்றி பெற்றது? என்ற கேள்விகளுக்கான விடையை சிரிக்கச் சிரிக்கச் சொல்லுகிறது ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக, ஐ.டி நிறுவன ஊழியர் சிவாவாக ரியோ ராஜ் நடித்திருக்கிறார். கலாய்க்கத் தூண்டும் உடல்மொழியைக் கச்சிதமாகக் கொண்டுவந்து கலகலப்பூட்டும் ரியோ ராஜ், மனைவி மீதான காதல் வலி, ஆற்றாமையில் குமையும் தருணங்கள் போன்றவற்றை சிறப்பாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார். இதற்குப்பிறகு ரியோவுக்கு இன்னும் பெரிய பட வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நாயகனின் மனைவி சக்தியாக மாளவிகா மனோஜ் நடித்திருக்கிறார். பார்க்க அழகாக இருக்கிறார். அழகாக நடனம் ஆடுகிறார். காதல், வெகுளித்தனம், கோபம், ஆக்ரோஷம், அழுகை, குற்றவுணர்வு போன்ற ஏராளமான எமோஷன்களைக் கொண்ட சக்தி கதாபாத்திரத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

இரண்டாவது ஹீரோ என்று சொல்லுமளவுக்கு, நாயகனுக்கு இணையான முக்கியத்துவம் உள்ள வழக்கறிஞர் நாராயணனாக ஆர்ஜே விக்னேஷ்காந்த் நடித்திருக்கிறார். மனைவியின் ஈகோ காரணமாக விவாகரத்தாகி அவரையும் மகளையும் பிரிந்து வலி சுமந்து வாழும் கதாபாத்திரத்தில் கொஞ்சம் எமோஷனலாகவும், கொஞ்சம் காமெடியாகவும் நடித்து, பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்து விடுகிறார். அவரது முன்னாள் மனைவியாக, வழக்கறிஞர் லட்சுமியாக ஷீலா ராஜ்குமார் நடித்திருக்கிறார். வழக்கில் வெற்றி பெறுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஏகப்பட்ட பொய் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் அவிழ்த்துவிடும் கதாபாத்திரம் ஏற்று, பார்வையாளர்களுக்கு கோபம் வரும் அளவுக்கு அருமையாக நடித்திருக்கிறார்.

வழக்கறிஞர் நாராயணனின் ஜூனியர் வழக்கறிஞர் சித்துவாக ஜென்சன் திவாகர் நடித்திருக்கிறார். அவர் வரும் காட்சிகளை எல்லாம் தன் ஒன்லைனர்களால் கலகலப்பாக்கி இருக்கிறார். தங்களை உளவு பார்ப்பதற்காக எதிர்தரப்பு வழக்கறிஞரான லட்சுமி அனுப்பியிருக்கும் நபரை ஜென்சன் திவாகர் கலாய்த்துத் தள்ளியிருப்பது பிரமாதமான காமெடி.

சிவகுமார் முருகேசனும், கலையரசன் தங்கவேலும் சேர்ந்து எழுதியிருக்கும் இப்படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியிருக்கிறார். நாயகன், நாயகி ஆகிய இரு கதாபாத்திரங்களையும் சமநிலையோடு நேர்மையாகக் கட்டமைக்காமல், பெண் கதாபாத்திரத்தைத் தரம் தாழ்ந்தும், அதன் கண்ணியத்தைக் கொச்சைப்படுத்தியும் காட்டியிருப்பதோடு, ஆண் கதாபாத்திரத்தை முழுக்க முழுக்க நல்லவராகவும், அவர் செய்யும் தவறுகளுக்குக்கூட நியாயம் கற்பிக்கும் காட்சிகளுடனும் காட்டியிருப்பது இயக்குநரின் நேர்மையின்மையே காட்டுகிறது. மூளை முழுக்க ஆணாதிக்கத் திமிரும், கம்யூனிச வெறுப்பும் உள்ள ஜந்துவால் தான் இத்தனை தரம் தாழ்ந்து சிந்திக்க முடியும் என்பதால் இந்த இயக்குநருக்கும், அவரது எழுத்தாளர் சகாவுக்கும் நம் கடும் கண்டனங்கள்.

சித்து குமாரின் ரம்மியமான இசை, மாதேஷ் மாணிக்கத்தின் வண்ணமயமான ஒளிப்பதிவு, கேஜி.வருணின் ஷார்ப்பான படத்தொகுப்பு ஆகியவற்றோடு ஆங்காங்கே வரும் காமெடிக்காக ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தைப் பார்க்கலாம்!

ரேட்டிங்: 2.5/5