“இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் வளர்த்தது திராவிட இயக்கம்!” – ’கலைமாமணி விருது’ விழாவில் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. அகில இந்திய விருது பெறும் கலை வித்தகர்களுக்கான பாரதியார் விருதை (இயல்) ந.முருகேச பாண்டியனுக்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை (இசை) கே.ஜே.யேசுதாஸுக்கும், பாலசரஸ்வதி விருதை (நாட்டியம்) முத்துகண்ணம்மாளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். யேசுதாஸ் சார்பில் அவரது மகன் விஜய் யேசுதாஸ், விருதை பெற்றுக் கொண்டார்.

சிறந்த கலை நிறுவனத்துக்கான கேடயம் சென்னையில் உள்ள தமிழ் இசைச் சங்கத்துக்கும் (ராஜா அண்ணாமலை மன்றம்), சிறந்த நாடகக் குழுவுக்கான சுழற்கேடயம் மதுரை மாவட்டம் பாலமேட்டில் உள்ள கலைமாமணி எம்.ஆர்.முத்துசாமி நினைவு நாடக மன்றத்துக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை ஆண்டுக்கு தலா 30 பேர் வீதம், மொத்தம் 90 கலைஞர்களுக்கு முதல்வர் வழங்கினார்.

அந்த வகையில், நாடக நடிகர் என்ற அடிப்படையில் பூச்சி எஸ்.முருகன், திரைப்பட நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா,விக்ரம்பிரபு, கே.மணிகண்டன், நடிகைகள் சாய் பல்லவி, ஜெயா வி.சி.குகநாதன், இயக்குநர் லிங்குசாமி, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், பாடலாசிரியர் விவேகா, பத்திரிகை தொடர்பாளர்கள் டைமண்ட் பாபு, நிகில் முருகன் உட்பட பல்வேறு கலைப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் விருது பெற்றனர். பாடகி ஸ்வேதா மோகன் சார்பில் அவரது தாய் சுஜாதா, விருதை பெற்றுக் கொண்டார். கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 பவுன் தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்பட்டது.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

இது கலைஞர்களைப் போற்றும் அரசாக உள்ளது. சிம்பொனி சிகரம் தொட்ட இசைஞானி இளையராஜாவுக்கு திமுக அரசு எடுத்த பாராட்டு விழாவே அதற்கு சான்று. இசைஞானி மேல் இருப்பது கலைப் பாசம், தமிழ்ப் பாசம், தமிழர் பாசம். அதே பாசத்தின் அடிப்படையில் விருதுகளை வழங்குகிறோம். இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் வளர்த்தது திராவிட இயக்கம்.

தமிழர் என்ற தகுதி, சுயமரியாதையை இழந்து வாழ்வதில் எந்த பயனும் இல்லை. அதனால், கலைகள், மொழி, இனம், அடையாளத்தை காப்போம். நமது கலைஞர்கள் இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் சென்று கலைகளை வளர்க்க வேண்டும். தமிழ்க் கலைகளை பரப்ப வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகள், உதவிகளை இயல் இசை நாடக மன்றம் செய்ய வேண்டும். இதற்கு அரசு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, இயல் இசை நாடக மன்றத் தலைவர் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.