மராட்டிய அரசு பணிந்தது: மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெற்றி!

மராத்தா இடஒதுக்கீடு தொடர்பாக மகாராஷ்டிர அரசின் தீர்மானம் வெளியிடப்பட்டவுடன், தனது தொடர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு ஆசாத் மைதானத்தை காலி செய்வதாக ஜராங்கே கூறினார்.
மகாராஷ்டிராவின் மூன்று அமைச்சர்கள் இன்று பிற்பகல் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தை அடைந்து, மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜரங்கே பேச்சுவார்த்தை நடத்தினர். ஜரங்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்குள் ஆசாத் மைதானத்தை காலி செய்ய வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி மனோஜ் ஜரங்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் ஆகஸ்டு 29 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிராவின் மூத்த அமைச்சர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் தலைமையிலான அரசு குழு இடஒதுக்கீடு பிரச்சினை குறித்து இன்று விவாதித்தது. மராத்தா ஒதுக்கீடு தொடர்பான அமைச்சரவை துணைக்குழுவின் தலைவரான விகே பாட்டீல், ஒரு வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு, சந்திப்பின்போது ஜராங்கேவிடம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, மராட்டிய மக்களுக்கு குன்பி சாதிச் சான்றிதழ்களை வழங்குவதற்கான ஹைதராபாத் வர்த்தமானியை செயல்படுத்துதல், முந்தைய சதாரா சமஸ்தானம் தொடர்பாக இதேபோன்ற முடிவை ஒரு மாதத்துக்குள் எடுத்தல், செப்டம்பர் இறுதிக்குள் மராட்டிய போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுதல், இடஒதுக்கீடு போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட அரசின் முக்கிய திட்டங்களை ஜராங்கே ஏற்றுக்கொண்டார்.
இதுகுறித்த முறையான அரசு தீர்மானம் வெளியிடப்பட்டவுடன், தனது தொடர்ச்சியான உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு ஆசாத் மைதானத்தை காலி செய்வதாக ஜராங்கே கூறினார். தகுதியான மராத்தாக்களுக்கு குன்பி சாதிச் சான்றிதழ்களை வழங்குவது உட்பட, மராத்தா ஒதுக்கீடு தொடர்பான மகாராஷ்டிர அமைச்சரவை துணைக் குழு தனது முக்கிய கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொண்டதை அடுத்து, போராட்டம் வெற்றி பெற்றதாக மனோஜ் ஜராங்கே அறிவித்தார். போராட்டக்காரர்களிடம் உரையாற்றிய ஜரங்கே, “நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்” என்று கூறினார்.
முன்னதாக, பிற்பகல் 3 மணிக்குள் முழுமையான இயல்புநிலை திரும்ப வேண்டும் என்றும், ஜராங்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் அந்த இடத்தை காலி செய்யாவிட்டால், இதற்கான செலவு மற்றும் அவமதிப்பு நடவடிக்கை உள்ளிட்டவை எடுக்கப்படும் என்று மும்பை உயர் நீதிமன்றம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.