நாளை நமதே – விமர்சனம்

நடிப்பு: மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா மற்றும் கிராமத்து மக்கள்
எழுத்து & இயக்கம்: வெண்பா கதிரேசன்
ஒளிப்பதிவு: பிரவீன்
படத்தொகுப்பு: ஆனந்த் லிங்ககுமார்
கலை: தாமோதரன்
இசை: ஹரிகிருஷ்ணன்
தயாரிப்பு: ’ஸ்ரீதுர்கா கிரியேஷன்ஸ்’ வி.ரவிச்சந்திரன்
வழங்கல்: ’அம்மா கிரியேஷன்ஸ்’ டி சிவா
பத்திரிகை தொடர்பு: குணா
ஆண்டைகள் / அரசர்கள் / நிலக்கிழார்கள் / முதலாளிகள் கைகளில் குவிந்திருந்த ஆட்சியதிகாரம், குடியுரிமை பெற்ற வெகுமக்கள் அனைவரது கைகளுக்கும் பரவலாக சென்று சேருவதைத் தான் ’மக்களாட்சி (ஜனநாயகம்)’ என்று கூறுகிறோம். அத்தகைய மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை, உரிமையை உறுதி செய்யவும், பாதுகாக்கவும் தங்களிலிருந்தே பிரதிநிதிகளை தேர்வு செய்துகொள்வதற்குப் பெயர் தான் ’தேர்தல்’ என்கிறோம். சாதி பாகுபாட்டால் ஏற்றத்தாழ்வாக பிளவுண்டு கிடக்கும் நம் சாதியச் சமூகத்தில், ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி மக்களிலிருந்தும் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதை சாத்தியமாக்குவதற்காகவே ‘தனி (ரிசர்வ்) தொகுதி’ என்னும் ஒதுக்கீட்டு முறையை சட்டபூர்வமாக உருவாக்கியிருக்கிறோம். இருந்தும் என்ன… சட்டத்தை மதிக்கத் தெரியாத சாதிவெறி பிடித்த ஆதிக்க சாதியினரின் மூர்க்கத்தனங்களால், இப்போதும் பல தனித் தொகுதிகளில் பட்டியலின மக்கள் சுதந்திரமாக தேர்தல்களில் போட்டியிட முடியாத அவலநிலை நீடித்துக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், அதற்கு எதிராக முற்போக்குவாதிகள் சளைக்காமல் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள். இன்றைய கிராமப்புறங்களில் நிகழும் ரத்தமும் சதையுமான இந்த நிகழ்வுகளை, உண்மையும் புனைவும் கலந்து, வெண்திரையில் உயிரோட்டத்துடன் படைத்தளித்திருக்கிறார் அறிமுக இயக்குநரும் புரட்சிகர படைப்பாளியுமான வெண்பா கதிரேசன்.

சிவகங்கை மாவட்டம் சிவதாணுபுரம் கிராமத்தில், மேலத்தெருவில் ஆதிக்க சாதியினரும், கீழத்தெருவில் பட்டியலின மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். ஆண்டாண்டு காலமாக இவ்வூரின் ஊராட்சித் தலைவர் பதவியை ஆதிக்க சாதியினர் தம் வசப்படுத்தி ஆண்டு வருகிறார்கள். எனினும், ஊரில் எந்த வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த லட்சணத்தில் அவர்களுக்குள்ளே பதவிப் போட்டியும், பங்காளிச் சண்டையும் வேறு நிலவுகிறது.
இந்நிலையில், சிவதாணுபுரம் ஊராட்சியை, பட்டியலினத்தவர் மட்டும் போட்டியிடும் ரிசர்வ் தொகுதியாக தமிழக அரசு அறிவிக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாத ஆதிக்க சாதிவெறியர்கள் ஆத்திரம் அடைகிறார்கள். ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் பட்டியலினத்தவர் யாரும் போட்டியிடக் கூடாது என பஞ்சாயத்தைக் கூட்டி பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். இருந்தும், மாவட்ட ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள், கம்யூனிஸ்ட் தோழர்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, அமுதா என்ற பட்டியலினச் சிறுமியின் தாத்தாவான சுதந்திரப் போராட்ட தியாகி, தேர்தலில் போட்டியிட முன்வருகிறார். அவர் வேட்புமனு தாக்கல் செய்யச் செல்லும்போது வழிமறிக்கும் ஆதிக்க சாதிவெறியர்கள், அமுதாவின் கண்முன்னே அவரது தாத்தா, அப்பா மற்றும் அவர்களுடன் வந்த வேறு சிலரையும் கொடூரமாக வெட்டி படுகொலை செய்கிறார்கள். மேலும், தங்கள் சாதியைச் சேர்ந்த சிலரையும் தாங்களே கொன்று, அதை சாதிக்கலவரமாக திரித்து சித்தரிக்கிறார்கள். விளைவாக, தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.
சிவதாணுபுரம் மீண்டும் பொதுத் தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. நினைத்ததை சாதித்துவிட்ட மகிழ்ச்சியில் ஆதிக்க சாதியினர் குதூகலிக்கிறார்கள். மீண்டும் ஆதிக்க சாதி வெறியர் ஒருவரே ஊராட்சித் தலைவர் பதவியை ஏலத்தில் எடுத்து, தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்து வருகிறார். இக்காலகட்டத்தில் சிறுமி அமுதா வளர்ந்து, (மதுமிதா ஆகிறார்.) கொலையுண்ட தன் தாத்தாவின் உன்னத லட்சியத்தை மனதில் ஏந்தி, நர்ஸ் ஆகி, ஊர் மக்களுக்கு தன்னால் இயன்ற மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறார்.
இப்போது சிவதாணுபுரம் மீண்டும் ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. ஆதிக்க சாதிவெறியர்கள், அமுதாவின் மாமாவான பெருமாள் என்ற அப்பாவியை தேர்தலில் போட்டியிடவும் வெற்றி பெறவும் செய்து, அவரை ‘பொம்மைத் தலைவர்’ ஆக்கி, அதிகாரத்தை தங்கள் கைகளில் தொடர்ந்து வைத்துக்கொள்ள சூழ்ச்சி செய்கிறார்கள். ஆதிக்க சாதிவெறியர்களின் “ஆசி” பெற்ற பெருமாளை எதிர்த்து போட்டியிட வேறு பட்டியலினத்தவர் யாரும் முன்வரவில்லை. இந்த சூழலில் தான் தன் மாமா பெருமாளை எதிர்த்து துணிச்சலுடன் தேர்தல் களத்தில் குதிக்கிறார் நர்ஸ் அமுதா. ஊராட்சித் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதனால் கொந்தளிக்கும் ஆதிக்க சாதிவெறியர்கள், தங்களது கைக்கு அடக்கமான பெருமாள் தேர்வு செய்யப்படுவதில் எந்த சிக்கலும் வரக் கூடாது என்பதற்காக அமுதாவிடம் வேட்புமனுவை வாபஸ் பெறச் சொல்லுகிறார்கள்; கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்; கொடூரமாய் தாக்குகிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சாத அமுதாவை அவரது அம்மாவும், உற்றார் உறவினர்களும் போட்டியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கெஞ்சுகிறார்கள்; வற்புறுத்துகிறார்கள்.

இறுதியில் அமுதா தன் வேட்புமனுவை வாபஸ் பெற்றாரா? அல்லது அத்தனை எதிர்ப்புகளையும் துணிச்சலுடன் சமாளித்து தேர்தலில் போட்டி என்பதில் உறுதியாக இருந்தாரா? தேர்தல் முடிவு என்ன? அமுதா ’சிவதாணுபுரத்தின் முதல் பட்டியலின ஊராட்சித் தலைவர்’ என்ற பெருமையைப் பெற்றாரா? என்பன போன்ற கேள்விகளுக்கு பரபரப்பாகவும், இயல்பு மீறாமலும் நல்ல விடை அளிக்கிறது ‘நாளை நமதே’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகியாக, நர்ஸ் அமுதாவாக மதுமிதா நடித்திருக்கிறார். கிராமிய அழகு ததும்பும் ஆர்ப்பாட்டம் இல்லாத லட்சணமான முகம், கொண்ட கொள்கையில் உறுதி மிளிரும் கம்பீரமான உடல்மொழி ஆகியவற்றுடன் அற்புதமாக நடித்து மதுமிதா சபாஷ் பெறுகிறார். கமர்ஷியல் மசாலாக்களுக்கு இடம் இல்லாத கருத்துச் செறிவுள்ள ஒரு திரைப்படத்தை ஒற்றை ஆளாக தன் தோளில் வெற்றிகரமாக சுமந்து கரையேறி இருக்கிறார். பாராட்டுகள். ஷப்னா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல், நந்திதா தாஸ் போன்ற அபூர்வமான நடிகைகளுக்கு இணையாக சமூகப் பொறுப்புடன் சிறப்பாக நடித்திருக்கும் மதுமிதாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதினை அரசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.
ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா மற்றும் கிராமத்து மக்கள் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான யதார்த்தமான நடிப்பை, சிவகங்கை வட்டாரத் தமிழ் உச்சரிப்புடன் நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
நகைச்சுவை என்ற பெயரில் வேல்முருகன் அடிக்கும் லூட்டிகளைத் தவிர்த்திருக்கலாம்.
எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் வெண்பா கதிரேசன். இப்படத்தின் கதைக்கருவும், சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நந்தன்’ திரைப்படத்தின் கதைக்கருவும் ஒன்று தான்; என்ற போதிலும், உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் புரையோடிக் கிடக்கும் சாதியரசியலை, கலையம்சம் குறையாமல், இயல்பான கதாபாத்திரங்களைக் கொண்டு, யதார்த்தத்துக்கு நெருக்கமாக வலிமையுடன் சித்தரிப்பதில் பல மடங்கு உயர்ந்து நிற்கிறார் இயக்குநர் வெண்பா கதிரேசன். “எனக்கு சாமியும் இல்ல, சாதியும் இல்ல” என்று நாயகி பிரகடனம் செய்வது; “நான் தேர்தலில் நிக்கிறது ஜெயிக்கிறதுக்காக இல்ல, என் ஒரு ஓட்டைப் போட்டாவது தேர்தலை நடத்திக் காட்டுவேன்” என்று சூளுரைப்பது; “நான் தேர்தல்ல நிக்கிறது உங்களுக்குப் பிரச்சனை இல்ல; நானெல்லாம் தேர்தல்ல நிக்கலாமாங்கறது தான் பிரச்சனை” என்று ஆதிக்க சாதிவெறியர்களின் ஆணவத்தைத் தோலுரிப்பது போன்ற கூர்மையான வசனங்கள் படம் முழுக்க நிரவியிருப்பது படத்துக்கு பலம் சேர்க்கிறது.
மதப்பிரசங்கம் செய்யும் கிறிஸ்தவப் பாதிரியாரின் நெற்றியில், சாமியாடும் இந்துப்பெண் விபூதி பூசுவதாக முதலில் காட்டி பகீர் கிளப்பும் இயக்குநர், பின்னர் அந்த பாதிரியாரே மேடை போட்டு “காவாலையா…” பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு, கூட்டத்தைக் கூட்டி, அவர்களுக்கு ஓடந்துறை சண்முகத்தின் முயற்சியால் முன்மாதிரி கிராமமாக உருவாகியிருக்கும் ஓடந்துறை கிராமம் பற்றிய ஆவணப்படத்தை போட்டுக் காட்டி, “இது போல் உங்கள் ஊரும் முன்னேற்றம் அடைய அமுதாவுக்கு வாக்களியுங்கள்” என்று தேர்தல் பிரச்சாரம் செய்ய வைத்திருப்பது ரசிப்புக்குரியது.
மனநோயால் பாதிக்கப்பட்டு, நாயகியால் அன்புடன் ஆதரிக்கப்படும் ஆதிக்கசாதிப் பெண், மனநோய் குணமானபின் நடந்துகொள்ளும் விதம் எதிர்பாராதது; திடுக்கிட வைக்கிறது. இதுபோல் ஏராளமான சுவாரஸ்யமான அம்சங்களுடன் படத்தை போரடிக்காமல் விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் வெண்பா கதிரேசன். பாராட்டுகள். அவர் இத்தகைய சிறந்த படங்களை எதிர்காலத்திலும் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
ஹரிகிருஷ்ணனின் பின்னணி இசை, பிரவீனின் ஒளிப்பதிவு, ஆனந்த் லிங்ககுமாரின் படத்தொகுப்பு, தாமோதரனின் கலை இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்தின் நேர்த்திக்கும், இயக்குநரின் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.
‘நாளை நமதே’ – அனைவரும் அவசியம் பார்த்து, ரசித்து, ஆதரிக்க வேண்டிய படம்!
ரேட்டிங்: 4/5.