போகி – விமர்சனம்

நடிப்பு: நபி நந்தி, சரத், ‘லப்பர் பந்து’ ஸ்வாசிகா, பூனம் கவுர், வேல ராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், சங்கிலி முருகன், எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சலி வரதராஜன் மற்றும் பலர்
இயக்கம்: விஜயசேகரன் எஸ்
வசனம்: எஸ்.டி.சுரேஷ்குமார்
ஒளிப்பதிவு: ராஜா சி சேகர்
படத்தொகுப்பு: சுரேஷ் அர்ஸ்
இசை: மரியா மனோகர்
தயாரிப்பு: Vi சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் & லைக் பிரசெண்ட்ஸ்
தமிழ்நாடு திரையரங்க வெளியீடு: ’பிஜிபி எண்டர்பிரைசஸ்’ பி.ஜி.பிச்சிமணி
பத்திரிகை தொடர்பு: புவன் செல்வராஜ் & சதிஷ் (எய்ம்)
அழகிய மலைகிராமம் ஒன்றில் நாயகன் நபி நந்தி தன் சகோதரி ‘லப்பர் பந்து’ ஸ்வாசிகாவுடன் வாழ்ந்து வருகிறார். அப்பா, அம்மா இலலாததால், தன் தங்கையை பாசத்துடன் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். அதுபோல ஸ்வாசிகாவும் தனது அண்ணன் மீது பேரன்பு கொண்டிருக்கிறார்.
ஸ்வாசிகா நன்றாகப் படித்து, பிளஸ்-2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெறுகிறார். அவரை பேட்டி எடுக்கக் குவியும் தொலைக்காட்சி கேமராக்கள் முன் அண்ணனைப் புகழ்வதோடு, மருத்துவம் படித்து மருத்துவராகி, மருத்துவ வசதி இல்லாத தன் கிராமத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்தையும் வெளிப்படுத்துகிறார்.
மலைகிராமச்சூழலில் அருகில் மருத்துவம் படிக்க வசதி இல்லாததால், ஸ்வாசிகா சென்னை வருகிறார். அவரை விட்டுப் பிரிந்திருக்க இயலாததால், அண்ணனும் தங்கை ஸ்வஸ்திகாவோடு சென்னை வந்துவிடுகிறார்.
சென்னையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார் ஸ்வாசிகா. அங்கு சரத்தைச் சந்திக்கிறார். இருவரும் காதலர்கள் ஆகிறார்கள்.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரியில் நடக்கும் ஒரு குற்றச் சம்பவத்தை கண்ணால் கண்டு அதிர்ச்சி அடைகிறார். அதற்கு எதிராக ஆவேசமாகப் பொங்குகிறார். அச்சம்பவம் ஸ்வஸ்திகா, அவரது அண்ணன் நபி நந்தி, காதலர் சரத் ஆகியோரின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடுகிறது.
எனில், அந்த குற்றச் சம்பவம் தான் என்ன? அது அவர்களது வாழ்க்கையில் ஏற்படுத்திய விளைவுகள் என்ன? ஸ்வஸ்திகாவின் மருத்துவக் கனவு என்ன ஆனது என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘போகி’ திரைப்படத்தின் மீதிக்கதை
’பாசமலர்’, ‘முள்ளும் மலரும்’, ‘கிழக்குச் சீமையிலே’ போன்ற திரைப்படங்களின் அண்ணன் – தங்கை போல, நபி நந்திக்கும், ஸ்வாசிகாவுக்கும் அவ்வளவு பாசம் காட்டும் கதாபாத்திரங்கள். இருவரும் இதை நன்றாகப் புரிந்துகொண்டு, ரசித்து நடித்திருக்கிறார்கள். அதனால் இவர்களின் நடிப்பு நம் மனதை கொள்ளை கொள்கிறது. இடையில், மருத்துவக் கல்லூரியில் நடக்கும் கொடுமை கண்டு கொதிக்கும் காட்சியில் ஸ்வஸ்திகா ஸ்கோர் செய்திருக்கிறார். அவரது பரிதாப முடிவுக்குப் பின் ஆவேசம் கொள்ளும் நபி நந்தியும், சரத்தும் நம் நரம்புகளையும் முறுக்கேறச் செய்துவிடுகிறார்கள்.
போலீஸ் அதிகாரியாக வரும் வேல ராம்மூர்த்தி, பள்ளிக்கூட தலைமை ஆசிரியராக வரும் சங்கிலி முருகன், கொடூர வில்லனாக வரும் நான் கடவுள் ராஜேந்திரன், மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், அஞ்சலி வரதராஜன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
ஒரு கிளாமர் பாடல் காட்சிக்கு பூனம் கவுருடன் சேர்ந்து ஆட்டம் போட்டிருக்கிறார் பாடலாசிரியர் சினேகன்.
இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.விஜயசேகரன். அவர் கடும் உழைப்பைக் கொட்டி, நடிப்புக் கலைஞர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். எனினும், பல படங்களில் ஏற்கெனவே பார்த்த கதை என்ற உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை.
மரியா மனோகரின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
மலையழகையும், கிரைம் காட்சிகளையும் யதார்த்தமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா சி.சேகர்.
பல வருடங்கள் கிடப்பில் கிடந்த படம் என்பதால், அதை சமாளிக்க படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் படாதபாடு பட்டிருப்பது தெரிகிறது.
போகி – அண்ணன், தங்கை பாசத்துக்காக பார்த்து மகிழலாம்.
ரேட்டிங்: 2.5/5.