3 பி.ஹெச்.கே – விமர்சனம்

நடிப்பு: சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீத்தா ரகுநாத், சைத்ரா, ரமேஷ் வைத்யா மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: ஸ்ரீகணேஷ்
ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன் & ஜித்தின் ஸ்தனிஸ்லாஸ்
படத்தொகுப்பு: கணேஷ் சிவா
இசை: அம்ரித் ராம்நாத்
தயாரிப்பு: ‘சாந்தி டாக்கீஸ்’ அருண் விஸ்வா
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்
‘3 Bed rooms, 1 Hall, 1 Kitchen (3 படுக்கை அறைகள், 1 ஹால், 1 சமையலறை) கொண்ட வீடு’ என்பதன் சுருக்கமே ‘3 பி.ஹெச்.கே’ என்ற இப்படத்தின் தலைப்பு. இத்தலைப்பே படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதைச் சொல்லிவிடுகிறது. ஆம்… சொந்த வீடு வாங்குவது என்பதும், அதற்கான போராட்டமும் தான் இந்த படத்தின் மையக்கரு.
சொந்த வீடு என்பது நடுத்தர வர்க்கத்துக் குடும்பங்களின் பெருங்கனவு. இப்பெருங்கனவை நனவாக்க, நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் பலரும் சிறுகச் சிறுக சேமிக்கிறார்கள்; வட்டிக்கு பெருந்தொகையை கடன் வாங்குகிறார்கள். அந்த கடனை வட்டியோடு திருப்பிச் செலுத்துவதற்காக ஆயுள் முழுக்க கடினமாகவும், கூடுதலாகவும் உழைத்து மாய்கிறார்கள். அனைத்துத் தரப்பு மக்களையும் எளிதில் ஈர்க்கக் கூடிய இப்பிரச்சனையை மையமாகக் கொண்ட இத்திரைப்படம், அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்துள்ளதா? பார்ப்போம்…
நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தைச் சேர்ந்த வாசுதேவன் (சரத்குமார்), தனியார் தொழிற்சாலை ஒன்றில் கணக்காளராகப் பணியாற்றுகிறார். அவரது மனைவி சாந்தி (தேவயானி), ஹவுஸ் ஒய்ஃப். மகன் பிரபு (சித்தார்த்), பிளஸ்-2 படிக்கிறார். மகள் ஆர்த்தி (மீத்தா ரகுநாத்), 9ஆம் வகுப்பு படிக்கிறார்.
வாசுதேவன் பதினேழு வயது விடலைச் சிறுவனாக இருந்தபோது, தன் தம்பியையும், தங்கையையும் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக தன் படிப்பை நிறுத்திவிட்டு, சம்பாதிப்பதற்காக வேலைக்குச் செல்லத் தொடங்கியவர். அவர் விரும்பியபடியே உடன்பிறப்புகளைப் படிக்க வைத்து ஆளாக்கி நல்ல நிலைக்குக் கொண்டு வந்துவிடுகிறார். அதன்பின் நன்றி மறந்த தங்கையோ, “உனக்கு சொந்த வீடு இல்லை. உன்னால் சொந்த வீடு வாங்க முடியாது” என்று வாசுதேவனை ஏளனம் செய்து, அவமானப்படுத்தி விடுகிறார். அது வாசுதேவனின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. இது வரை வாடகை வீடுகளில் வசித்து வரும் அவர், தனக்கும் தன் மனைவிக்கும் ஒன்று, மகனுக்கு ஒன்று, மகளுக்கு ஒன்று என மூன்று படுக்கையறைகள், ஒரு ஹால், ஒரு சமையலறை கொண்ட சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற லட்சியத்தை, கனவை, ஒரு வைராக்கியமாகவே வளர்த்துக்கொள்கிறார்.
சொந்த வீடு வாங்குவதற்காக, வாசுதேவன் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை சேமிக்கிறார். அவரது மனைவி சாந்தி முறுக்கு சுட்டு விற்று, கணவருக்கு உதவுகிறார். சுமாராகப் படித்து, தட்டுத்தடுமாறி கல்லூரிப் படிப்பை முடிக்கும் மகன் பிரபு, ஓர் ஆலை வேலையில் சேர்ந்து சம்பாதித்து, அப்பாவுக்கு ஒத்தாசையாக இருக்கிறார். மகள் ஆர்த்தி, பெற்றோருக்குப் பெரிய செலவு வைக்கக் கூடாது என்பதற்காக, தனியார் பள்ளியில் சேராமல் அரசுப் பள்ளியில் சேர்ந்து படிக்கிறார். இப்படி கடினமாக உழைத்தும், சிக்கனமாக இருந்தும் சேமிக்கும் பணம், சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாக ஏற்படும் செலவீனங்களால் அடிக்கடி கரைந்து போகிறது.
இத்தகைய வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் திணறும் வாசுதேவனின் நடுத்தர வர்க்கத்துக் குடும்பம், சொந்த வீடு என்னும் தனது கனவை நனவாக்கியதா, இல்லையா? என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது ’3 பி.ஹெச்.கே’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நடுத்தர வர்க்கத்துக் குடும்பத் தலைவர் வாசுதேவனாக சரத்குமார் நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாத இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, சாமானியராக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அவர் வசனம் பேசும் விதத்தைக் கூட மாற்றியிருப்பது அவரது கதாபாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
குடும்பத் தலைவி சாந்தியாக தேவயானி நடித்திருக்கிறார். கணவரையும், பிள்ளைகளையும் பொறுப்புடன் கவனித்துக்கொண்டு, முறுக்கு சுட்டு சம்பாதிக்கும் கதாபாத்திரத்தை அவர் குறைவின்றி நிறைவாக செய்திருக்கிறார்.
மகன் பிரபுவாக சித்தார்த் நடித்திருக்கிறார். பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், பணிபுரியும் பருவம் என மூன்று பருவங்களிலும் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமான கெட்டப்களில் வருவதோடு, நடிப்பிலும் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார்.
மகள் ஆர்த்தியாக மீத்தா ரகுநாத் நடித்திருக்கிறார். ‘குட்நைட்’ படத்துக்குப் பிறகு அவருக்கு இது முக்கியமான வேடம். கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.
பிரபுவின் பள்ளித் தோழியாக முதலிலும், காதல் மனைவியாக பின்னரும் வருகிறார் சைத்ரா. எளிமையான அழகுடன் யதார்த்தமாக நடித்து உள்ளங்களை கொள்ளை கொள்கிறார்.
ஹவுஸ் ஓனராக வரும் ரமேஷ் வைத்யாவும், ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் யோகி பாபுவும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்ரீகணேஷ். ஏற்கெனவே ‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கும் இவருக்கு இது மூன்றாவது படம். லேசாகப் பிசகினாலும் தொலைக்காட்சி சீரியல் ஆகிவிடக் கூடிய கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு கச்சிதமாக திரைக்கதை அமைத்து, போரடிக்காமல் சுவாரஸ்யமாகக் கொடுத்திருக்கிறார். சொந்த வீடு எனும் கனவில் வாழும் நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்தினரின் வலிகளையும், வேதனைகளையும், உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி, அவற்றை பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர்.
அம்ரித் ரகுநாத் இசை, தினேஷ் கிருஷ்ணன் – ஜித்தன் ஸ்தனிஸ்லாஸ் ஒளிப்பதிவு, கணேஷ் சிவா படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
’3 பி.ஹெச்.கே’ – நிஜத்துக்கு நெருக்கமான படம்; குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்!
ரேட்டிங்: 3.25/5.