ஊடகத் துறையினருக்கு மணமக்கள் சகிதம் ஐசரி கணேஷ் நன்றி!

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் – ஆர்த்தி கணேஷ் தம்பதியின் மூத்த மகள் டாக்டர் பிரீத்தா கணேஷுக்கும், தொழிலதிபர் உமா சங்கர் – சித்ரா தம்பதியின் மகன் லஷ்வின் குமாருக்கும் சமீபத்தில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.
இவ்விழாவில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பெருவணிகர்கள், கல்வித் தந்தைகள், ஊடகத்துறையினர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல தரப்புகளைச் சேர்ந்த சுமார் 25ஆயிரம் பேர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இத்திருமணம் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்புடன் வைரலானது.
இந்நிலையில், ஐசரி கணேஷ் மற்றும் மணமக்கள் பிரீத்தா கணேஷ் – லஷ்வின் குமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அப்போது பேசிய ஐசரி கணேஷ், “எனது கல்விப் பணியாக இருக்கட்டும், விளையாட்டுப் பணியாக இருக்கட்டும், திரைத்துறைப் பணியாக இருக்கட்டும், அனைத்திலும் ஊடகத்தினர் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருக்கிறீர்கள். இனியும் அப்படியே இருக்க வேண்டும்.
என் இல்ல திருமண விழாச் செய்தியை ஊடகவியலாளர்களாகிய நீங்கள் எடுத்துச் சென்று நாடு முழுவதும் பரப்பி அனைவரும் அறியச் செய்தீர்கள். அதற்கு எங்கள் நன்றி.
திருமணத்திற்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி” என்றார்.