கருத்துள்ள கமர்ஷியல் காமெடி படம் ‘என் காதலி சீன் போடுறா’

சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படம் ‘என்  காதலி சீன் போடுறா’. இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா, அம்பானிசங்கர்,  தியா, தென்னவன், வையாபுரி  ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.  முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ராம்சேவா. இவர் ராமகிருஷ்ணன் நடித்த ‘டீக்கடை பெஞ்ச்’ படத்தை இயக்கியவர்.

ஒளிப்பதிவு – வெங்கட்; இசை – அம்ரிஷ்; பாடல்கள் – ராம்சேவா, ஏகாதசி; கலை – சோலை அன்பு; நடனம் – சிவா லாரன்ஸ், சாண்டி; ஸ்டண்ட் – மிரட்டல் சிவா; எடிட்டிங் – மாரிஸ்; தயாரிப்பு மேற்பார்வை – தண்டபாணி; ஊடகத் தொடர்பு –மௌனம்ரவி.

‘என்  காதலி சீன் போடுறா’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர் கே.பாக்யராஜ் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களோடு படக்குழுவினரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

e8

படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது…

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு முழுக்க முழுக்க காமெடியாக உருவாக்கி உள்ளோம். நாம் எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும்…சந்தோஷமாக வாழ்கிற அதே நேரத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். அப்படி ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் ஏற்படுகிற பிரச்சனைகள் நம் வாழ்க்கையையே மாற்றிப்போட்டு விடும் என்கிற கருத்தை உள்ளடக்கிய படம் தான் இது.

இதை காமெடியாகவும் கமர்ஷியலாகவும் சொல்லி இருக்கிறோம். மனோபாலா  காமெடியில்  கலக்கி இருக்கிறார். நான்கு பாடல்களும் வெவ்வேறு விதமாக கொடுத்திருக்கிறார் இசைமைப்பாளர் அம்ரிஷ். “சின்ன மச்சான்” பாடலைத் தொடர்ந்து செந்தில் கணேஷ் –  ராஜலக்ஷ்மி இருவரும் இந்த படத்திலும் ஒரு பாடலை பாடி இருக்கிறார்கள்.  “ நிலா கல்லுல செதுக்கிய சிலையா “   என்று துவங்கும் அந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த  ஒரு ஐயமும் இல்லை.

வெறும் 23 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்துவிட்டோம். அதற்கு பக்கபலமாக இருந்த என்னுடைய ஒளிப்பதிவாளர் வெங்கட் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும் சென்னையில் நடைபெற்றது.  படம் விரைவில் திரைக்கு வர உள்ளது” என்றார் இயக்குனர் ராம்சேவா.