இரவுக்கு ஆயிரம் கண்கள் –  விமர்சனம்

திரைத்துறையோடு தொடர்பு இல்லாதவர்களில் சிலருக்கு தெரிந்திருக்கும், பலருக்கு தெரிந்திருக்காது என்பதால், ‘கிரைம் திரில்லர்’ ஜானரில் உள்ள இரண்டு வகைகளை முதலில் விளக்கிவிடுவோம்.

ஒரு படத்தின் ஆரம்பத்தில், அல்லது படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் ஒரு குற்றச்செயல் நடக்கிறது. அந்த குற்றச்செயலை செய்யும் குற்றவாளி யார் என்பது படத்திலுள்ள இதர முக்கிய கதாபாத்திரங்களுக்குத் தெரியாது. ஆனால், இன்னார் தான் குற்றவாளி என்பதை முதலிலேயே ஆடியன்ஸூக்கு மட்டும் காட்டி விடுவார்கள். இந்த வகை படங்களை Open Puzzle Crime Thriller என்பார்கள். இதில், இந்த குற்றவாளியை மற்றவர்கள் எப்போது, எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதில் ஆடியன்ஸூக்கு ஆர்வம் இருக்கும்.

இதற்கு மாறாக, இன்னொரு வகை உண்டு. அது Closed Puzzle Crime Thriller. இதில், குற்றவாளி யார் என்பதை ஆடியன்ஸூக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக, சஸ்பென்ஸாக வைத்திருப்பார்கள். இந்த வகை கதைகளில் குற்றவாளி யார் என்பதை தெரிந்துகொள்ள ஆடியன்ஸ் ஆர்வமாக இருப்பார்கள். இந்த ஆர்வத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் கதாசிரியர்கள், நிறைய mislead செய்து, வெவ்வேறு நபர்கள் மீது சந்தேகம் கொள்ளச் செய்து ஆடியன்ஸூக்கு சுவாரஸ்யம் ஏற்படுத்துவார்கள். தமிழ்வாணன் முதல் ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் வகையறா வரையிலான மர்மக்கதை ஆசிரியர்களுக்கு இது கைவந்த கலை.

தற்போது திரைக்கு வந்திருக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படம், Closed Puzzle Crime Thriller என்ற இரண்டாம் வகையைச் சேர்ந்தது. அதனாலேயே சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்தது.

மழை கொட்டும் நள்ளிரவு. சென்னை பங்களா ஒன்றில் சுஜா வருணி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இது குறித்து விசாரிக்கும் போலீசாரிடம், “கொலை நடந்த பங்களாவில் இருந்து ஒரு நபர் வெளியேறிப் போனதை நான் பார்த்தேன்” என்கிறார் எதிர்வீட்டுக்காரர். அப்போது நாயகன் அருள்நிதி அங்கே வர, “இவன் தான் அந்த நபர்” என்று எதிர்வீட்டுக்காரர் சொல்ல, உடனே அங்கிருந்து தப்பிச் செல்கிறார் அருள்நிதி.

கதை பின்னோக்கி நகர்கிறது. கால் டாக்ஸி டிரைவர் நாயகன் அருள்நிதி. நர்ஸ் வேலை பார்ப்பவர் நாயகி  மஹிமா. இருவரும் காதலர்கள். ஓர் இரவு. மஹிமாவை சிலர் ஈவ் டீஸிங் செய்ய, அவர்களிடமிருந்து அவரைக் காப்பாற்றி அனுப்புகிறார் அஜ்மல். பின்னர் நன்றி சொல்ல வரும் மஹிமாவை அஜ்மல் அடையத் துடிக்கிறார். தொடர்ந்து தொந்தரவு கொடுக்கிறார். இது குறித்து காதலர் அருள்நிதியிடம் புகார் கூறுகிறார் மஹிமா.

அப்போது கடலில் விழுந்து தற்கொலை செய்ய முயலுகிறார் சாயா சிங். அவரை காப்பாற்றுகிறார் அருள்நிதி. தன்னிடம் அஜ்மல் தவறாக நடக்க முற்படுவதாகவும், ஒரு வீடியோவை வைத்து மிரட்டுவதாகவும் சாயா சிங் கூறுகிறார்.

மஹிமா, சாயா சிங் ஆகிய இருவருக்கும் தொல்லை கொடுக்கும் அஜ்மலை தட்டிக்கேட்க அவருடைய பங்களாவுக்குப் போகிறார் அருள்நிதி. அங்கே சுஜா வருணி மர்மமான முறையில் கொலையுண்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறார். உடனே வெளியேறுகிறார். அதன்பின் தான் போலீஸ் அவரை கைது செய்ய முயலுவது, அவர் போலீசிடமிருந்து தப்பிப்பது எல்லாம்.

சுஜா வருணியை கொலை செய்தது யார்? சுஜா வருணிக்கும், அஜ்மலுக்கும் என்ன சம்பந்தம்? அந்த கொலையில் இருக்கும் மர்மம் என்ன? போலீஸிடம் இருந்து தப்பித்த அருள்நிதி கொலையாளியை கண்டுபிடித்தாரா? என்ற கேள்விகளுக்கான விடையை, இதயத்தை எகிறச் செய்யும் பல திருப்பங்களுடன் கூறுகிறது மீதிக்கதை.

0a1c

படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து தனக்குப் பொருத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவரும் அருள்நிதி, இந்த படத்திலும் அதே கவனத்துடன் செயல்பட்டு வெற்றி பெற்றிருக்கிறார். கால் டாக்ஸி டிரைவர் வேடத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். காதல், கோபம், எரிச்சல், குழப்பம், தயக்கம், பதற்றம் என அத்தனை உணர்வுகளையும் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். சிக்கலான தருணங்களில் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து புத்திக் கூர்மையுடன் செயல்படுவது அவரது கதாபாத்திரத்துக்கு சிறப்பு சேர்க்கிறது..

எப்போதும் சிரித்த முகமாய் வரும் நாயகி மஹிமா, நாயகனை சந்திக்கும் முதல் காட்சியிலேயே அசத்திவிடுகிறார். காதலில் குழைவது, பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்ற சமூகப் பிரச்சனையை துல்லியமாக முன்னிலைப்படுத்துவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

அஜ்மல், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஆடுகளம் நரேன், ஜான் விஜய், லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் தத்தமது பாத்திரம் உணர்ந்து இயல்பாக நடித்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் மு.மாறன் ஒரு மர்ம நாவல் எழுத்தாளருக்கு உரிய அத்தனை லாவகத்துடனும் நிறைய திருப்பங்கள் வைத்து திரைக்கதை அமைத்து, இந்த கிரைம் திரில்லரை காட்சிப்படுத்தி ஆடியன்ஸை சீட் நுனிக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

அரவிந்த் சிங் ஒளிப்பதிவு, சாம் சி.எஸ். பின்னணி இசை, சான் லோகேஷ் படத்தொகுப்பு ஆகியவை இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ – மர்மக்கதை விரும்பிகளுக்கு செம விருந்து!