யசோதா – விமர்சனம்

நடிப்பு: சமந்தா, வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத்ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர்

இயக்கம்: ஹரி – ஹரிஷ்

இசை: மணி சர்மா

ஒளிப்பதிவு: எம்.சுகுமார்

தயாரிப்பு: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்

வெளியீடு: ’சக்தி பிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா & ரேகா

சமீபத்தில் சமூக வலைத்தளங்கள், ஊடகங்கள், தமிழ்நாடு அரசு என எட்டுத் திக்கும் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘வாடகைத் தாய்’ சமாச்சாரத்தை உட்கருவாகக் கொண்ட படம்.

நடிகை சமந்தா பெரிய நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வைத்துள்ள படம். இதன் வெளியீட்டுக்கு முன்பான விளம்பரப்படுத்துதல் நிகழ்வுகளில் அவர் பெரிய அளவில் பங்கேற்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம். ஆனால், உடல்நலக் குறைவு காரணமாக அவரால் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை: என்றாலும் அவரது இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? பார்க்கலாம்…

யசோதா (சமந்தா) ஒரு ஏழைப் பெண். அவர் தன் தங்கையின் பணத் தேவைக்காக வாடகைத் தாய் ஆக ஒப்புக்கொள்கிறார். அவர் மதுவுக்கு (வரலட்சுமி சரத்குமாருக்கு) சொந்தமான ’ஈவா’ என்ற வாடகைத் தாய் மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு அவரைப் போலவே நிறைய பெண்கள் இருக்கிறார்கள். இப்படி வாடகைத் தாயாக வரும் பெண்களை வைத்து அங்கு வேறு ஏதோ சதித்திட்டம் தீட்டி செயல்படுகிறார்கள் என்பது யசோதாவுக்கு தெரிய வருகிறது. அந்த சதித்திட்டத்தை யசோதா கண்டுபிடித்தாரா? அதனால் அவருக்கு ஏற்படும் சிக்கல்கள் என்ன? இப்பிரச்சனையை அவர் எப்படித் தீர்க்கிறார்? என்பது இப்படத்தின் மெயின் ஸ்டோரி.

0a1n

சமந்தா இப்படத்திற்காக தனது உழைப்பையும், நடிப்பாற்றலையும் முழுமையாகக் கொடுத்து யசோதாவாக அசத்தியிருக்கிறார். கர்ப்பிணி கோலத்தில் நடித்த விதம், அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டிய விதம் என எதுவாக இருந்தாலும், அனைத்திலும் சமந்தா சிறந்த ஃபார்மில் இருக்கிறார். முதல் பிரேமிலிருந்தே படத்தைத் தோளில் சுமந்து திடகாத்திரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வாடகைத் தாய் விவகாரத்தில் நடக்கும் மோசடியைத் தெரிந்துகொள்ளும்போது, அவர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் படத்திற்கு மிகப் பெரிய அளவில் பலம் சேர்க்கின்றன,

வரலட்சுமி சரத்குமார் ஒவ்வொரு படத்திலும் சிறப்பான பங்களிப்பைச் செய்து வருகிறார், அந்த வகையில், வாடகைத் தாய் மையத்தின் தலைவி மதுவாக அவர் இந்தப்படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். இரண்டாம் பாதியில் ராவ் ரமேஷுடனான அவரது ஃப்ளாஷ்பேக் சிறப்பாக உள்ளது.

மலையாள நடிகர் உன்னி முகுந்தன் தனது டாக்டர் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்துள்ளார். மந்திரியாக வரும் ராவ் ரமேஷ் , போலீஸ் பயிற்சி அதிகாரியாக வரும் சம்பத்ராஜ் , போலீஸ் அதிகாரியாக வரும் சத்ரு, போலீஸ் கமிஷனராக வரும் முரளி சர்மா, கர்ப்பிணிகளாக வரும் மதுரிமா, காவ்யா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபதா, பிரியங்கா சர்மா என அனைவருமே தத்தமது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர்கள் ஹரி – ஹரிஷ் என்ற இரட்டையர்கள் யசோதா கதாபாத்திரத்தை அழுத்தமாகப் படைத்து, அப்பாத்திரத்துக்கு சமந்தாவை தேர்வு செய்தபோதே பாதி வெற்றி பெற்றுவிட்டார்கள். வாடகைத் தாய் பற்றிய முழு விவரங்களையும், அது தொடர்பான அதிர்ச்சியூட்டும் குற்றச்செயல்களையும் திரட்டி, வலிமையான திருப்பங்களுடன் திரைக்கதை அமைத்து, நடிப்பு, ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் என அனைத்திலும் விறுவிறுப்பைக் கூட்டி, பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு கதை சொன்ன விதத்தால் மீதி வெற்றியையும் பெற்றுவிட்டார்கள்.

மணி சர்மாவின் பின்னணி இசை, கதைச் சம்பவங்களில் ஒரு திடமான தாக்கத்தை உருவாக்குகிறது. எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு மன நிறைவைத் தருகிறது. பாடல் வரிகளும், வசனங்களும் அருமை.

மொத்தத்தில், சமந்தாவின் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கக் கூடிய, குடும்பத்துடன் கண்டு களிக்கத் தக்க கண்ணியமான படம்!