வில் – விமர்சனம்

நடிப்பு: விக்ராந்த், சோனியா அகர்வால், அலெக்யா, பிர்லா போஸ், பதம் வேணுகுமார், மோகன் ராமன், லொள்ளு சபா சுவாமிநாதன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: எஸ்.சிவராமன்

ஒளிப்பதிவு: டிஎஸ்.பிரசன்னா

படத்தொகுப்பு: ஜி. தினேஷ்

கலை: மணி

ஸ்டண்ட்: தீ கார்த்திக்

இசை: சௌரப் அகர்வால்

தயாரிப்பு: ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன்ஸ்

இணை தயாரிப்பு: கோத்தாரி மெட்ராஸ் இண்டர்நேஷனல் லிமிட்டெட்

பத்திரிகை தொடர்பு: வேலு

’WILL’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘உயில்’ என்பது பொருள். சர்ச்சைக்குரிய உயில் மற்றும் அதற்குள் பொதிந்திருக்கும் மர்மம் பற்றிய திரைப்படம் என்பதால் இப்படத்துக்கு ‘வில்’ என்ற பொருத்தமான தலைப்பை வைத்திருக்கிறார்கள்.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த மிகப் பெரிய ஃபைனான்சியர் விக்னேஷ் ரெட்டி (பதம் வேணுகுமார்). அவருக்கு இரண்டு மகன்கள். விக்னேஷ் ரெட்டி இறப்பதற்குமுன் ஓர் உயில் எழுதி வைக்கிறார். அவர் இறந்தபின் அந்த உயிலை இரண்டு மகன்களும் பிரித்து படித்துப் பார்க்கிறார்கள். சித்தூரில் உள்ள சொத்துக்களை விக்னேஷ் ரெட்டி தனது இரண்டு மகன்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் சரிசமமாகப் பிரித்து எழுதி வைத்திருக்கிறார். ஆனால், சென்னையில் இருக்கும் இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி வீட்டை மட்டும் ஷ்ரத்தா என்ற முன் பின் தெரியாத பெண்ணின் பெயருக்கு உயில் எழுதி வைத்திருக்கிறார். தாங்கள் இதுவரை அறிந்திராத யாரோ ஒரு ஷ்ரத்தாவுக்கு சென்னை வீடு சொந்தமாகப் போகிறது என்று கோபப்படும் மகன்கள், அப்படி போகவிடாமல் அபகரிக்க தந்திரமாக ஒரு திட்டம் போடுகிறார்கள்.

அதன்படி, சரண்யா என்ற பெண்ணை அழைத்து வந்து, ‘இவர் தான் ஷ்ரத்தா’ என்று நீதிபதி (சோனியா அகர்வால்) முன் ஆஜர் செய்கிறார்கள். நீதிபதியிடம் அந்த பெண், “உயிலில் உள்ள வீடு எனக்கு வேண்டாம். அதை விக்னேஷ் ரெட்டியின் மகன்களுக்கே கொடுத்துவிடுங்கள்” என்று ‘தாராள மனதுடன்’ பொய் வாக்குமூலம் கொடுக்கிறார். அந்த பெண் மீது சந்தேகம் கொள்ளும் நீதிபதி, வழக்கை ஒத்தி வைத்துவிட்டு, நீதிமன்ற சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் முருகனை (விராந்த்) அழைத்து, அந்த பெண் பற்றிய உண்மை விவரத்தைக் கண்டறிந்து வந்து கூறும்படி உத்தரவிடுகிறார்.

புலன் விசாரணையில் இறங்கும் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் முருகன், அந்த பெண்ணை கண்டுபிடித்து, அவர் ஷ்ரத்தா இல்லை; சரண்யா; ஆள்மாறாட்டம் நடந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வதோடு, அவரை அழைத்து வந்து நீதிபதி முன் நிறுத்துகிறார். “பணத்துக்காக ஷ்ரத்தாவாக நடிக்க சம்மதித்தேன்” என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறார் சரண்யா.

எனில், உண்மையான ஷ்ரத்தா யார் என்பதை கண்டுபிடித்து, அவரை கொண்டு வந்து தன் முன் ஆஜர் செய்யும்படி சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் முருகனுக்கு உத்தரவிடுகிறார் நீதிபதி.

உண்மையான ஷ்ரத்தாவை சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் முருகனால் கண்டுபிடிக்க முடிந்ததா? ஷ்ரத்தா யார்? அவரது பின்னணி என்ன? அவருக்கும் விக்னேஷ் ரெட்டிக்கும் என்ன தொடர்பு? விக்னேஷ் ரெட்டி இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை ஷ்ரத்தாவுக்கு கொடுக்க முன்வந்தது ஏன்? அதற்குள் மறைந்திருக்கும் மர்மம் என்ன? இறுதியில் அந்த வீடு யாருக்கு சொந்தம் ஆகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு எதிர்பாராத திருப்பங்களுடன் எமோஷனலாக விடை அளிக்கிறது ‘வில்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசும் பெண் நீதிபதியாக சோனியா அகர்வால் நடித்திருக்கிறார். கம்பீரமான தோற்றம், கறாரான பேச்சு மற்றும் உடல் மொழி என அனைத்தையும் நேர்த்தியான நடிப்பு மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

நேர்மையான நீதிமன்ற சப் இன்ஸ்பெக்டர் பழனிவேல் முருகனாக விக்ராந்த் நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கருமமே கண்ணாக சிறப்பாக செய்து இருக்கிறார்.

ஷ்ரத்தா என்ற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அலெக்யா நடித்திருக்கிறார். எளிமையான தோற்றத்தில் வரும் அவர், தன் கதாபாத்திரத்தை மையமாக வைத்துத் தான் மொத்த கதையே நகரும் என்பதை நன்கு உணர்ந்து, யதார்த்தமான, ஆனால் அழுத்தமான நடிப்பு மூலம் அக்கதாபாத்திரத்தை அருமையாக தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

ஷ்ரத்தாவின் அப்பாவாக வரும் பிர்லா போஸ், அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக வரும் லொள்ளு சபா சுவாமிநாதன், பெரிய ஃபைனான்சியர் விக்னேஷ் ரெட்டியாக வரும் பதம் வேணுகுமார், ஷ்ரத்தாவின் கல்லூரிக்கால தோழியாக வரும் பெண், மற்றும் மோகன் ராமன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.சிவராமன். ஓர் உண்மைக் கதையை அடிப்படையாக வைத்து, அடுத்து என்ன நடக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் வகையில் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் திரைக்கதை அமைத்து, போரடிக்காமல் படத்தை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்திச் சென்றுள்ளார். அவர் ஏற்கெனவே வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பதாலோ என்னவோ, நீதிமன்ற காட்சிகள் இதுவரை நாம் திரையில் பார்த்திராத வகையில் உண்மைத் தன்மையோடு இருப்பது இப்படத்திற்கு மிகப் பெரிய பலம். இயக்குநர் எஸ்.சிவராமன் வருங்காலத்திலும் இதுபோல் பல ‘கோர்ட் டிராமா’ கதைகளை சிறப்பாக கையாண்டு, படமாக்குவார் என எதிர்பார்க்கலாம்.

சோனியா அகர்வாலின் சகோதரர் செளரப் அகர்வால் இசையில், பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதையோடு பயணித்து, படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

டி.எஸ்.பிரசன்னாவின் ஒளிப்பதிவு, ஜி.தினேஷின் படத்தொகுப்பு, மணியின் கலை இயக்கம், தீ கார்த்திக்கின் சண்டை அமைப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்தின் தரத்துக்கும், நேர்த்திக்கும் உறுதுணையாக இருந்துள்ளன.

‘வில்’ – உள்ளத்தைத் தொடும் உணர்ச்சிப் போராட்டங்கள் நிறைந்த திரைப்படம்! பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3/5