‘விசாரணை’ படத்துக்கு ரஜினிகாந்த், சகாயம் ஐ.ஏ.எஸ். பாராட்டு!

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ‘அட்டகத்தி’ தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருக்கும் படம் ‘விசாரணை’. வெளியீட்டுக்கு முன்பே சர்வேதச அளவில் பல அங்கீகாரங்களை பெற்ற இப்படம் நாளை (பிப்ரவரி 5-ம் தேதி) உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை பார்த்த மணிரத்னம், கமல்ஹாசன், பிரியதர்ஷன் உள்ளிட்ட பல தமிழ் திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளையும், இயக்குநர் வெற்றிமாறனுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்தவண்ணம் இருக்கிறார்கள்.

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவருக்கும் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

‘விசாரணை’ படம் குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இதுவரை பார்த்ததில்லை. உலகப் படவரிசையில் ஒரு தமிழ்ப் படம். வாழ்த்துக்கள் வெற்றிமாறன் – தனுஷ்” என்று தெரிவித்திருக்கிறார்.

‘விசாரணை’யை பார்த்துவிட்டு பாராட்டும் பிரபலங்களின் பட்டியலில் தற்போது ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்  இணைந்துள்ளார். இப்படத்தை பாராட்டி அவர் கூறிய வாசகம் தற்போது விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.