குடியரசு துணை தலைவர் தேர்தல்: சி.பி.ராதாகிருஷ்ணன் vs சுதர்சன் ரெட்டி!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனும், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகிறார்கள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுள்ளது.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர், திடீரென உடல்நிலையை காரணமாகக் கூறி பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.
மகாராஷ்டிரா ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் செயல்பட்டு வந்த நிலையில், அவரை வேட்பாளராக பாஜக அறிவித்தது பேசுபொருளானது. இந்த அறிவிப்புக்குப் பின்னால் பாஜகவின் தேர்தல் அரசியல் கணக்கு இருப்பதாகப் பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் இன்னும் 7 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதனால் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே அப்துல் கலாம் 2-வது முறையாகக் குடியரசுத் தலைவராக வருவதற்கு திமுக தடையாக இருந்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் திமுகவுக்கு செக் வைப்பதற்காக பாஜக சார்பாக எடுத்து வைக்கப்பட்ட நகர்வாகவே இது பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் பாஜக கூட்டணியில் இருந்தாலும், சுதர்சன் ரெட்டியை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி உருவாகும். இதே கணக்கு ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பிஆர்எஸ் கட்சிகளுக்கும் பொருந்தும். இது இந்தியா கூட்டணி சார்பாக பாஜகவுக்கு வைக்கப்பட்ட செக் என்று பார்க்கப்படுகிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மக்களவை மற்றும் மா நிலங்களவை ஆகிய இரு அவைகளில் மொத்தமாக 782 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் வெற்றி பெற வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 392 உறுப்பினர்களின் வாக்குகள் தேவையாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால், பாஜக கூட்டணியில் மொத்தமாக 423 எம்பி-க்கள் இருக்கின்றனர். அதாவது, அக்கூட்டணிக்கு மக்களவையில் 293 எம்பிக்களும், மாநிலங்களவையில் 130 எம்பிக்களும் இருக்கின்றனர். இதனால் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறவே அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்படுகிறது.