“எம்.ஜி.ஆருக்கு ஒரு அர்ப்பணிப்பு தான் ‘வா வாத்தியார்’ திரைப்படம்!” – இயக்குநர் நலன் குமாரசாமி

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்”. இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..,

இயக்குநர் நலன் குமாரசாமி பேசியதாவது..,

9 வருடம் கழித்து படம் எடுக்கிறார் என பில்டப் போஸ்ட் எல்லாம் பார்த்தேன். ஆனால் நியாயமாய் நீங்கள் பயப்பட வேண்டும். இவ்வளவு வருடம் படமெடுக்காமல் படமெடுக்க வருகிறானே என யோசிக்க வேண்டும். சூது கவ்வும் படமெடுத்த போது, எஸ் ஆர் பிரபு ரொம்ப வருத்தப்பட்டார், சிவக்குமார் ஐயாவும் ரொம்பவும் வருத்தப்பட்டார். இப்படி தலைப்பு வைத்துப் படமெடுக்கலாமா? எனக் கேட்டார்கள், அது வெறும் கிண்டல் தான் என்றேன், இருந்தாலும் அப்போது ஒரு வாக்குறுதி தந்தோம். தர்மம் வெல்லும் என ஒரு படமெடுப்போம் என சொன்னேன். அது தான் இந்தப்படம். இந்தப்படம் எடுக்க வாய்ப்பு தந்த புரட்சித் தலைவர் எம் ஜி ஆருக்கு கோடான கோடி நன்றி. ஞானவேல் ராஜா, கார்த்தி இருவருக்கும் நன்றி. கார்த்தி மிக அழகாக கதாப்பாத்திரத்தில் பொருந்திப்போய்விட்டார். அத்தனை சிறப்பாகச் செய்துள்ளார். எம் ஜி ஆருக்கு ஒரு அர்ப்பணிப்பு தான் இந்தப்படம். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் R ரவிக்குமார் பேசியதாவது..,

நலன் சார் இயக்குநர் குழுவிலிருந்தவன் நான், சூது கவ்வும் படத்தில் வேலை பார்த்தேன். அவரிடம் இருந்து தன்மையாக எப்படி நடந்து கொள்வது எனக் கற்றுக்கொண்டேன். வா வாத்தியார் படம் நான் பார்த்து விட்டேன், நலன் சாரிடம் கார்த்தி சார், எம் ஜி ஆர் மாதிரியே தெரிகிறார் எனச் சொன்னேன். எம் ஜி ஆருக்கு வாழ்க்கை வரலாற்று படமெடுத்தால் அதற்குப் பொருத்தமானவர் கார்த்தி சார் தான். மிக அற்புதமான படமாக வந்துள்ளது. நலன் சாருக்கும் படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள்.