உ.பி.யில் காவி அமைச்சரவை பதவி ஏற்றது!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியை ஈட்டியதையடுத்து இன்று (ஞாயிறு) யோகி ஆதித்யநாத் முதல்வராகவும், கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் துணை முதல்வர்களாகவும் பதவியேற்றனர்.

லக்னோவில் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அத்வானி, அமித் ஷா, ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, உமாபாரதி உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு துணை முதல்வர்கள் மற்றும் 47 அமைச்சர்கள் யோகி ஆதித்ய நாத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த அமைச்சரவையில் 6 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

லக்னோவைச் சேர்ந்த மோசின் ரஸா என்ற முஸ்லிம் கிரிக்கெட் வீரர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். இவர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். இவர் ரஞ்சி போட்டிகளில் ஆடியுள்ளார், டிவி விவாதங்களில் இவர் பாஜக சார்பில் பேசியுள்ளார்.

மாநில பா.ஜ.,தலைவர் கேசவ பிரசாத் மவுரியா, தினேஷ்சர்மா, தரம்பால்சிங், ஸ்ரீகாந்த்சர்மா. சித்தார்நாத்சிங், பிரிஜேஸ்பதக், பூபிந்தர்சிங்சவுத்திரி, ஷீட்டன்சவுகான், சுரேஷ்கண்ணா, எஸ்.பி.,சிங் பாகல், சந்தீப்சிங், ரீட்டாபகுகுணா, பூபிந்தர்சிங், சுவந்திராசிங் , முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மோசின் ரசா, சுவாமிபிரசாத் மவுரியா, உள்ளிட்டவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்ற முக்கிய பிரமுகர்கள் ஆவர்.