உசிரே – விமர்சனம்

நடிப்பு: டீஜே, ஜனனி, மந்த்ரா, கிரேன் மனோகர், செந்தி குமாரி, பாவல் நவகீதன், ஆதித்யா கதிர், தங்கதுரை, மெல்வின் ஜெயபிரகாஷ் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: நவீன் டி கோபால்
ஒளிப்பதிவு: மார்க்கி சாய்
படத்தொகுப்பு: மணிமாறன்
இசை: கிரன் ஜோஷ்
தயாரிப்பு: ‘ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ்’ மௌலி எம்,ராதாகிருஷ்ணா
பத்திரிகை தொடர்பு: சாவித்திரி
புதிதாய் திருமணமாகியிருக்கும் பாவல் நவகீதன், தன் மனைவியுடன் காரில் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருக்கிறார். அப்போது அவர் தன் மனைவியிடம், தனது நண்பன் டீஜேவின் தீவிர காதல் பற்றி சொல்லிக்கொண்டே வருவதுபோல் இப்படக்கதை முழுமையாக ஃபிளாஷ்பேக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஃபிளாஷ்பேக்கில், சொந்த ஊரில், கிரேன் மனோகர் – செந்தி குமாரி தம்பதியின் மகனும் இக்கதையின் நாயகனுமான டீஜே, கிரானைட் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது வீட்டின் எதிர்வீட்டில், கணவனால் கைவிடப்பட்ட மந்த்ரா, தனது மகளும் கதையின் நாயகியுமான ஜனனியுடன் குடியேறுகிறார். கோபக்கார பெண்மணியான மந்த்ரா, தன் மகளை யார் நிமிர்ந்து பார்த்தாலும் அவரை அடிக்கும் அளவுக்குச் சென்றுவிடும் இயல்பு கொண்டவர்.
இந்நிலையில், ஜனனியைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துப் போய்விட, அவரை டீஜே ஒருதலையாக தீவிரமாக காதலிக்கத் தொடங்கிவிடுகிறார். அம்மா மந்த்ராவுக்கு பயந்துகொண்டு அவரது காதலை முதலில் ஏற்க மறுக்கும் ஜன்னி, பின்னர் டீஜேவின் நற்பண்புகளையும், அவரது தீவிரக் காதலையும் உணர்ந்து, அவரின் காதலை ஏற்றுக்கொள்கிறார்.
எதிர்பார்த்தபடியே, இவர்களின் காதலுக்கு டீஜேவின் பெற்றோர் ஆதரவாக இருந்தபோதிலும், ஜன்னியின் கண்டிப்பான அம்மா மந்த்ரா ஆதரிக்கத் தயாராக இல்லை. அவர் டீஜேயிடம் இருந்து ஜன்னியைப் பிரித்து, வேலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி விடுகிறார்.
மந்த்ராவின் எதிர்ப்பு மற்றும் தடையை மீறி டீஜேவும், ஜன்னியும் ஒன்று சேர்ந்தார்களா? அல்லது நிரந்தரமாகப் பிரிந்தார்களா? என்ற கேள்விக்கு எதிர்பாராத திருப்பத்துடன் விடை அளிக்கிறது ‘உசுரே’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக டீஜே நடித்திருக்கிறார். வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் அதிரடி இளைஞராக கவனம் ஈர்த்த இவர், இதில் இளம் காதல் இளைஞராக கவனம் ஈர்த்திருக்கிறார். நாயகியை அவர் உசுருக்கு உசுராய் காதலிக்கும் காட்சிகளில் பார்வையாளர்களின் உள்ளம் உருகும் அளவுக்கு நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
கதையின் நாயகியாக ஜன்னி நடித்திருக்கிறார். ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே பெரிதும் கவனம் பெற்ற இவர், இப்படத்தில் காதல் யுவதியாக சிறப்பாக நடித்திருக்கிறார். நல்ல அழகு, வெள்ளந்தியான முகம், கபடமில்லா சிரிப்பு, பேசும் கண்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும் இவர், பெரிய பேனர் மற்றும் பெரிய இயக்குநர் மூலம் நாயகி வேடங்கள் கிடைக்கப் பெற்றால் தமிழ் திரையில் கொடி கட்டிப் பறக்க வாய்ப்பு உண்டு.
முன்னொரு காலத்தில் கவர்ச்சியால் இளைஞர்களை மயங்க வைத்த மந்த்ரா, இதில் நாயகியின் அம்மாவாக நடித்திருக்கிறார். சூது வாது மிகுந்த கோபக்கார அம்மணியாக அருமையாக நடித்து, தனது கதாபாத்திரத்துக்கு தான் பொருத்தமான தேர்வு தான் என்பதை நிரூபித்திருக்கிறார்.
நாயகனின் அப்பாவாக வரும் கிரேன் மனோகர், அம்மாவாக வரும் செந்தி குமாரி, நண்பர்களாக வரும் பாவல் நவகீதன், ஆதித்யா கதிர், தங்கதுரை, மெல்வின் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நவீன் டி கோபால். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து காதல் கதை பின்னி, அதில் குடும்பப் பின்னணியையும் நேர்த்தியாய் சேர்த்து திரைக்கதை அமைத்து, போரடிக்காமல், சுவாரஸ்யமாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர். கடைசி பத்து நிமிடங்கள் யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய காட்சிகளை வைத்து, இயக்குநர் பிரமிப்பூட்டியிருக்கிறார்.
கிரண் ஜோஷ் இசையின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, மார்க்கி சாயின் ஒளிப்பதிவு, மணிமாறனின் படத்தொகுப்பு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் படத்துக்கு பலம் சேர்த்துள்ளன.
‘உசிரே’ – உசிரை வருடும் அழகான காதல் கதை; கண்டு மகிழலாம்
ரேட்டிங்: 3/5.