’ராமாயணா’ ’உண்மை’ என்பதும், ’வரலாறு’ என்பதும் ஆரிய மேன்மை அரசியலுக்கான இரண்டு பொய்கள்!

கலைக்கு அரசியல் உண்டு என நாம் தொடர்ந்து சொல்லி வருவதற்கான இன்னொரு உதாரணம்!

நாம் அனைவரும் கொண்டாடும் இரு முக்கியமான இசைக் கலைஞர்கள் ஒன்றாக பணிபுரியும் ஓர் உன்னதமான சாத்தியம் உருவாகி இருக்கிறது. ஆனால் அது உருவாகியிருப்பது ராமாயணா என்கிற படத்தில்!

இந்தியாவே கொண்டாடும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஹாலிவுட் ரசிகர்கள் கொண்டாடும் ஹான்ஸிம்மரும் இணைந்து பணியாற்றும் இப்படத்துக்கான அறிமுகக் காணொளி வெளியாகி இருக்கிறது. இசை அத்தனை அற்புதம்!

படத்தின் கலைஞர்களை அறிமுகப்படுத்தும் இந்த காணொளியில் ராமாயணா படம், ‘உண்மை’ என்றும் ‘வரலாறு’ என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் ராமன் ஐந்தாயிரம் வருடங்களாக கடவுளாக வணங்கப்படுவதற்கான காரணம் என ‘ராமாயணா’வை காணொளி அறிமுகப்படுத்துகிறது. இரண்டுமே பெரும் பொய்கள்.
இந்திய பார்ப்பனியம் முன்னிறுத்தும் ஆரிய மேன்மை அரசியலுக்கு ஏதுவான இரண்டு பொய்கள்!

ஆரியன் இந்தியப் பரப்புக்குள் வந்ததே கிமு 1500-க்கு பின்தான். அதாவது இன்றிலிருந்து 3500 வருடங்களுக்கு முன். முதல் பார்ப்பனன் அதிகாரம் பற்றியதே கிமு 1-ல்தான். அதாவது இன்றிலிருந்து 2100ம் வருடங்களில். வரலாற்றாய்வாளர் ரொமிலா தாப்பர், ராமாயணப் பிரதி கிமு 400 தொடங்கி கிபி 400 வரை பல மாற்றங்களை உட்கொண்டு எழுதப்பட்டிருக்கலாம். அதாவது இன்றிலிருந்து 2400 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி, 1600 ஆண்டுகளுக்கு முன் வரை.

அதற்கு முன், வாய்மொழியாக இக்கதை சொல்லப்பட்டது என வைத்தாலும் அது கிமு 6 வரை மட்டுமே செல்ல முடியும். அதாவது இன்றிலிருந்து 2600 வருடங்கள். அதற்கும் காரணம், அதுதான் புத்தர் இருந்த காலம். புத்தர் ஜாதக கதையில் ராமப்பண்டித கதை ஒன்று உண்டு. அதிலிருந்துதான் ராமாயணம் பின்னப்பட்டிருக்கலாம். ஏனெனில் பூர்வக்குடிகளுக்கு பிறகு ஆரியத்தின் முக்கிய எதிரியாக இருந்தது பெளத்தம்தான். ஆரியம் தழைக்க பெளத்தத்தை தன்வயப்படுத்தியது.

பிறகு எப்படி ராமன் 5,000 வருடங்களாக கடவுளாக இருக்க முடியும்?
மேலும் ராமாயணம் எப்படி வரலாறாக இருக்க முடியும்?
ஆனால் உலக பிரபலமான கலைஞர்களை முன்னிறுத்தி, நவீன கலைத்தன்மைகளை கொண்டு, இப்போது ராமாயணம் தன் அடுத்தக் கட்ட திரிபை உருவாக்கி இப்படத்தின் மூலம் உட்செறித்துக் கொள்ளவிருக்கிறது.

பண்பாட்டு மேலாதிக்கமும் பொருளாதார ஆதாயமும் கலக்கும் இந்தப் புள்ளியில்தான் கலை என்பது ஆதிக்கத்துக்கான அரசியலாக மாறுகிறது.

அன்று வால்மீகி, காளிதாசன், பிறகு கம்பன், இப்போது இவர்கள் எல்லாம்!

-RAJASANGEETHAN