ஹேக்கர் கைவரிசை: திரிஷா, ஹன்சிகா செல்போன் தகவல்கள் அழிப்பு! போலீசில் புகார்! அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்த நவீன தொழில் நுட்பப் புரட்சி யுகத்தில், கிரிமினல்களும் நவீனமயமாகி விட்டார்கள். அவர்கள் நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கிரிமினல் வேலை செய்து வருகிறார்கள். அத்தகைய நவீன கிரிமினல் வேலை ஒன்றினால் இன்று கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் நடிகை திரிஷாவும், நடிகை ஹன்சிகாவும்.

சமீப நாட்களாக நடிகர் – நடிகை போன்ற பிரபலங்களின் இ-மெயில், ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்குகளை ஹேக்கர்கள் ஹேக் செய்வதுதான் வழக்கம். இப்போது புதிதாக அத்தகைய பிரபலங்களின் செல்போன்களை ஹேக் செய்து, அவற்றில் அவர்கள் பதிவு செய்து சேமித்து வைத்திருந்த செல்போன் எண்கள் அனைத்தையும் முழுமையாக அழிக்கும் கிரிமினல் வேலையும் நடக்க ஆரம்பித்திருக்கிறது.

இதனால் பாதிக்கப்பட்டிருப்பதை முதலில் சொன்னவர் நடிகை திரிஷா. அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “நண்பர்களும் ட்விட்டர் ரசிகர்களும் தங்களுடைய தொலைபேசி எண்ணையும், பெயரையும் எனக்கு வாட்ஸ்அப் செய்யவும். ஏனெனில் வேலையில்லாத கோழை ஒருவர், என்னுடைய செல்போனில் உள்ள அனைத்து தகவல்களையும் அழித்துவிட்டார்” என்று ட்வீட் செய்தார்.

பின்னாலேயே நடிகை ஹன்சிகாவின் ட்வீட் வந்தது. “எனக்கும் இதுபோல நடைபெற்றுள்ளது. எனக்கும் உங்கள் தொலைபேசி எண்ணை பெயருடன் அனுப்புங்கள்” என்று ட்வீட் செய்தார் ஹன்சிகா.

இரு பிரபல நடிகைகளுக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் தமிழ்த் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விஷமிகள் இன்னும் எந்தெந்த பிரபலங்களின் செல்போன்களை ஹேக் செய்து நாசம் செய்வார்களோ என்ற அச்சத்தில் அது உறைந்து போயிருக்கிறது. செல்போனில் உள்ள தொலைபேசி எண்களை மட்டுமில்லாமல் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றையும் இப்படி அழித்தொழிக்க வாய்ப்புண்டா என்கிற குழப்பமும் பயமும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக த்ரிஷா, ஹன்சிகா ஆகிய இருவரும் சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்கள்.