ட்ரிப் – விமர்சனம்

நடிப்பு: பிரவீன் குமார், சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன்

இயக்கம்: டென்னிஸ் மஞ்சுநாத்

இசை: சித்து குமார்

ஒளிப்பதிவு: உதய் சங்கர்

தயாரிப்பு: ’சாய் பிலிம் ஸ்டூடியோஸ்’ ஏ.விஸ்வநாதன் & இ.பிரவீன் குமார்

#

‘ட்ரிப்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘சிற்றுலா’ என்பது பொருள். சிற்றுலா செல்லும் நண்பர்கள் சந்திக்கும் விபரீதங்களைப் பற்றிய கதை இது என்பதால், இப்படத்துக்கு ‘ட்ரிப்’ என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

ஒரு காட்டுக்குள் காரில் செல்லும் ஓர் இளஞ்ஜோடியை மர்ம மனிதர்கள் இடைமறித்து படுகொலை செய்கிறார்கள். அதே காட்டுக்குள் நாயகன் பிரவீன் குமார், நாயகி சுனைனா உள்ளிட்ட நண்பர்கள் குழு சிற்றுலா செல்கிறது. வழியில் ரத்தக்கறையுடன் இருக்கும் யோகிபாபுவையும் கருணாகரனையும் பார்த்து நண்பர்கள் குழு அச்சமடைகிறது. அன்று இரவு யோகிபாபு, கருணாகரன் ஆகியோரிடம் சுனைனா சிக்கிக்கொள்ள, அவரை அவர்கள் காட்டு பங்களாவுக்குத் தூக்கிச் சென்றுவிடுகிறார்கள். சுனைனாவை தேடிச் செல்லும் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக படுகொலை செய்யப்படுகிறார்கள். இந்த நண்பர்களை கொலை செய்த்து யார்? சுனைனா காப்பாற்றப்பட்டாரா? என்பது மீதிக்கதை.

0a1a

அறிமுக நாயகன் பிரவீன் குமார், புதுமுகம் என தெரியாத அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார். நாயகி சுனைனாவை காப்பாற்ற முயலும்போதும், நண்பர்களை பறிகொடுக்கும்போதும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியாக வரும் சுனைனா, இளசுகளை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உடையில் வந்து, சேற்றில் புரண்டு, கரடுமுரடான பாதையில் ஓடி, கடுமையாக உழைத்து நடித்திருக்கிறார்.

படத்திற்கு பெரிய பலம் யோகிபாபு. இவரது டைமிங் காமெடி பல இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறது. சீரியசான நேரங்களில் கூட கலகலப்பை கொடுத்திருக்கிறார். இவருடன் பயணிக்கும் கருணாகரன் தனக்கே உரிய பாணியில் காமெடிக்கு கைக்கொடுத்து இருக்கிறார். போலீசாக இரண்டு காட்சிகளில் மட்டும் வந்து சென்றிருக்கிறார் மொட்டை ராஜேந்திரன்

நண்பர்களாக வரும் கல்லூரி வினோத், விஜே சித்து, ராகேஷ், லக்‌ஷ்மி பிரியா, ஜெனிபர் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அறிவியலையும், ஆதிவாசிகளையும் இணைக்கும் கருவை மையமாக வைத்து இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் எழுதியிருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. மர்மமான முறையில் நிகழும் மரணங்களுக்கான பின்னணியை சொல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள் பல ஏற்கெனவே வந்திருந்தாலும், த்ரில்லருடன் நகைச்சுவையையும் சரிசமமாக கலந்து சொல்லியிருப்பதால், மற்ற படங்களில் இருந்து இப்படம் சற்று வித்தியாசப்படுகிறது.

முழு படப்பிடிப்பும் காட்டுக்குள்ளேயே நடந்தாலும், ஒவ்வொரு பிரேமிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் உதயஷங்கர். சித்துகுமாரின் இசையில் இரண்டு பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது.

‘ட்ரிப்’ – ரசிக்கத் தக்க சிற்றுலா!