டிரெண்டிங் – விமர்சனம்

நடிப்பு: கலையரசன், பிரியாலயா, பிரேம்குமார், பெசண்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: சிவராஜ்
ஒளிப்பதிவு: பிரவீன் பாலு
படத்தொகுப்பு: நாகூரான் ராமச்சந்திரன்
இசை: சாம் சிஎஸ்
தயாரிப்பு: ’ராம் ஃபிலிம் ஃபேக்டரி, ஆனந்த் ஜி பிரசென்ட்ஸ்’ மீனாட்சி ஆனந்த்
பத்திரிகை தொடர்பு: சதீஷ், சிவா (எய்ம்)
காதல் மணம் புரிந்த அர்ஜுன் (கலையரசன்) – மீரா (பிரியாலயா) தம்பதி, தங்களது சொந்தப் பெயரில் ‘அர்ஜுன்மீரா’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்கள். அதில் பரபரப்பான வீடியோக்களைப் பதிவேற்றம் செய்து, அவற்றை டிரெண்ட் ஆக்குகிறார்கள். சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடரும் தங்களது யூடியூப் சேனல் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டும், மேற்கொண்டு கடன் வாங்கியும் பெரிய பங்களா, கார் என வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.

திடீரென்று ஒரு நாள் ‘அர்ஜுன்மீரா’ யூடியூப் சேனல் டெலிட் ஆகிவிட, வருமானம் இன்றி தவிக்கிறார்கள். கடன்தவணை கட்ட முடியாமல் அவதிப்படுகிறார்கள். கடன் கொடுத்தவர் அடியாட்களுடன் வந்து அவமானப்படுத்துகிறார்.
அந்த சமயம், தொலைபேசி மூலம் அர்ஜுன் – மீரா தம்பதியைத் தொடர்பு கொள்ளும் ஒரு மர்மக்குரல், ஒரு வினோத விளையாட்டுக்கு அவர்களை அழைக்கிறது. தாங்கள் ஒரு ’ரியாலிட்டி ஷோ’ நடத்துவதாகவும், அதில் பங்கேற்றால் ஏகப்பட்ட டாஸ்குகள் தருவோம் என்றும், அவற்றை ஒவ்வொன்றாக வெற்றிகரமாக நீங்கள் முடிக்க முடிக்க, உங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்றும், இப்படி ஏழே நாட்களில் 2 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறுகிறது அந்த மர்மக்குரல். அதே சமயம், இந்த ரியாலிட்டி ஷோ பற்றி யாரிடமும் தெரிவிக்க கூடாது; இந்த விளையாட்டு நடக்கும் ஏழு நாட்களும் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது; கொடுக்கப்படும் டாஸ்க்குகளில் வெற்றி பெற்றால் பரிசுத் தொகை உயரும்; அதே வேளை தோற்றால், அதுவரை ஈட்டிய மொத்த பரிசுத்தொகையையும் இழக்க நேரிடும் என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளை மர்மக்குரல் விதிக்கிறது.
வீட்டுக்குள்ளேயே இருந்து விளையாடும் இந்த விளையாட்டில் பெரிய தொகை கிடைத்துவிட்டால் கடன்தவணை உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு கட்டி விடலாம் என்ற முடிவுக்கு வரும் அர்ஜுனும், மீராவும், அந்த மர்மக்குரல் சொன்ன விளையாட்டில் பங்கேற்க சம்மதித்து, டாஸ்க்கில் நுழைகிறார்கள்.
ஆரம்பத்தில் எளிமையான டாஸ்க்குகளில் வென்று சில லட்சங்களை வென்றாலும், அடுத்தடுத்த டாஸ்க்குகள் மூலம் எதிர்பாராத திருப்பங்களையும், சிக்கல்களையும், அதிர்ச்சிகளையும் எதிர்கொள்கிறார்கள். அவை என்ன? அவற்றால் அவர்களது குடும்ப வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் வெடிக்கின்றன? அவை அவர்களை எப்படியெல்லாம் அலைக்கழிக்கின்றன? என்பன போன்ற கேள்விகளுக்கு பரபரப்பாக விடை அளிக்கிறது ‘டிரெண்டிங்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் அர்ஜுனாக கலையரசன் நடித்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தனது நடிப்பு திறமையை முழுமையாக வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரத்தை மிகச் சரியாக பயன்படுத்தி, பாராட்டத் தக்க வகையில் நடித்திருக்கிறார். பல இடங்களில் வசனம் பேசாமல் தனது கண்களின் மூலமாகவே நடித்திருக்கும் கலையரசன், தனது கதாபாத்திர குணாதிசயங்கள் மாற்றம் அடையும் இடங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.
நாயகி மீராவாக பிரியாலயா நடித்திருக்கிறார். நடனம் மூலம் அறியப்பட்ட பிரியாலயா, இந்த படத்தில் சிறந்த நடிகையாக முத்திரை பதித்துள்ளார். நாயகனுக்கு இணையான வேடத்தில், போட்டி போட்டு நடித்திருப்பவர் தனது உணர்வுப்பூர்வமான நடிப்பு மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்து விடுகிறார்.
சிறிய வேடம் என்றாலும் பிரேம் குமாரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
பெசன்ட் நகர் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா ஆகியோரின் வருகை திரைக்கதையின் திருப்பத்திற்கு உதவியிருக்கிறது.
யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் பலர் அதற்காக பல்வேறு யுத்திகளை கையாள்கிறார்கள். குறிப்பாக தங்களது அன்றாட வாழ்வியல் சம்பவங்களை பகிர்ந்துகொள்வதோடு, சில அந்தரங்க விசயங்களையும் பகிர்ந்துகொள்ளும் அவலங்களும் நடந்து வருகின்றன. அத்தகைய மனிதர்களுக்கு அறிவுரையாக மட்டும் இன்றி எச்சரிக்கை மணி அடிக்கும் வகையிலும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவராஜ். இணையத்துக்கு அடிமையாகிப் போனவர்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார் இயக்குநர். மனிதர்களை பணம் எந்த எல்லை வரை கொண்டு செல்லும் என்பதற்கு சாட்சியாக கிளைமாக்ஸ் காட்சியை வைத்திருப்பது சிறப்பு.
ஒரே வீட்டில் நடக்கும் கதை என்றாலும், வெவ்வேறு கோணங்கள் மூலம் காட்சிகளில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு, கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. மர்ம நபரின் குரல் மற்றும் அவரது எண்ட்ரி பீஜியம்களை கவனம் ஈர்க்கும் வகையில் கொடுத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், சில இடங்களில் விறுவிறுப்பாகவும், பல இடங்களில் பார்வையாளர்களின் யூகங்களுக்கு ஏற்பவும் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
’டிரெண்டிங்’ – எலைட் பார்வையாளர்களுக்குப் பிடிக்கும்.
‘ரேட்டிங்’ – 3/5.