போலீசின் ஏவல் நாய் ஹிப்ஹாப் ஆதி மூட்டிய தீயில் எரிந்து சாம்பலானது மீனவர்கள் வாழ்க்கை!

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி உலகே வியக்கும் வண்ணம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்துவந்த அறப்போராட்டம் போல் எதிர்காலத்தில் இனியொரு போராட்டம் நடந்துவிட கூடாது என கங்கணம் கட்டியது போலீஸ். இதற்காக போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாகவும், தடியடி நடத்தியும் கலைத்து கலவரத்தையும், ரத்தக்களறியும் ஏற்படுத்த முன்கூட்டியே அது திட்டமிட்டது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால், இப்போராட்டத்தை கொண்டாடும் பொதுமக்களின் மனநிலை மாற வேண்டும். போராட்டக்காரர்கள் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு வந்தால் தான், போலீஸ் நடத்த இருக்கும் வெறியாட்டத்தை “நியாயம்” என்று அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

இந்த வேலைக்கு தான் போலீசின் ஏவல் நாய்களான ஹிப்ஹாப் ஆதி அண்ட் கோ அமர்த்தப்பட்டார்கள். “போராட்டம் திசை மாறி செல்கிறது” என்றெல்லாம் போலீஸ் எழுதிக் கொடுத்த வசனங்களை அவர்கள் பேசி, பொதுமக்கள் மத்தியில் போராட்டக்காரர்களுக்கு எதிரான வெறுப்பு விதையை விதைத்தார்கள்.

0a1d

அதன் பின்னர் தான் போராட்டக்காரர்கள் மீது போலீசார் வன்முறையை பிரயோகித்தார்கள். அவர்களால் விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள, அருகில் உள்ள நடுக்குப்பம் பகுதிக்குள் நுழைந்தனர். அவர்களை துரத்திச் சென்ற போலீசார் கண்ணில் பட்ட போராட்டக்காரர்களையும், இரக்கப்பட்டு அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குப்பத்து மக்களையும், கண்மூடித்தனமாக தாக்கினார்கள். கற்களையும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினார்கள்.. அங்கிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினார்கள். அந்த மக்களின் வாழ்வாதாரமாக இருந்த நடுக்குப்பம் மீன் சந்தையை தீயிட்டு கொளுத்தி சாம்பலாக்கினார்கள். இதில், அங்கிருந்த கடைகள் அனைத்தும் எரிந்து நாசமாயின.இதனால். அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி பி.தேசராணி கூறியதாவது:

மெரினாவிலிருந்து போலீசாரால் விரட்டப்பட்ட மாணவர்கள் ‘எங்களை காப்பாற்றுங்கள்’ என்று கூறியவாறு நடுக்குப்பம் பகுதிக்குள் ஓடிவந்தனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். அப்போது, எரிச்சல் தாங்க முடியாமல் பொதுமக்களும் சிதறி ஓடினர். அவர்கள் அனைவரையும் போலீசார் தாக்கினர். நடுக்குப்பம் மீன் சந்தைக்கும் போலீசாரே தீ வைத்துவிட்டு, நாங்கள் வைத்ததாக கூறுகின்றனர். எங்கள் கடைக்கு நாங்களே எப்படி தீ வைத்துக் கொள்வோம்?

மீன் சந்தையில் சுமார் 200 கடைகள் முற்றிலும் எரிந்து போயுள்ளன. மீன் விற்பனையை நம்பித்தான் நாங்கள் குடும்பம் நடத்தி வந்தோம். மீன்களோடு சேர்ந்து கடைகளும் எரிந்து போனதால் எங்களின் வாழ்வாதாரம் முடங்கிப் போயுள்ளது. அங்கு கடை வைத்திருந்த ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி அரசு உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடுக்குப்பம் முதலாவது தெருவைச் சேர்ந்த சரோஜா கூறும்போது, “நடுக்குப்பத்துக்குள் நுழைந்த மாணவர்களுக்கு எங்கள் பகுதி மக்கள் அடைக்கலம் அளித்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்களை துரத்தி வந்த போலீசார், வீடுகளின் முன்பு நிறுத்தியிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். ஆட்டோ உள்ளிட்ட சில வாகனங்களுக்கு போலீசாரே தீ வைத்தனர். பெண்கள், முதியோர் என பாரபட்சம் பார்க்காமல் ஒவ்வொரு வீடாக சென்று தாக்கினர். இதில் பெண்கள் பலர் காயம் அடைந்தனர். பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து போலீஸார் அராஜகத்தில் ஈடுபட்டனர்” என்றார்.

குரலற்ற இம்மக்களின் அவலக்குரலை உலகெங்கும் ஒலிக்கச் செய்து, அவர்களுக்கு நீதியும், நிவாரணமும் பெற்றுத் தர வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தார்மீகக் கடமை.