தி பெட் – விமர்சனம்

நடிப்பு: ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே, பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், திவ்யா, ஜான் விஜய், தேவிப்ரியா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: எஸ்.மணிபாரதி

ஒளிப்பதிவு: கோகுல்

இசை: தாஜ்நூர்

பாடல்கள்: யுகபாரதி

கலை: பழனிவேல்

சண்டை அமைப்பு: ஆக்சன் பிரகாஷ்

தயாரிப்பு: ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் & ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ்

தயாரிப்பாளர்கள்: கே.கந்தசாமி, கே.கணேசன், வி.விஜயகுமார், வி.லோகேஷ்வரி விஜயகுமார்

பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்

கதையின் நாயகனான வேலுவும் (ஸ்ரீகாந்த்), அவரது நண்பர்களும் (பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம்) சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்கள். வாரா வாரம் புதுச்சேரி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பார்களுக்குச் சென்று ’வீக் எண்ட் பார்ட்டி’யை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் இவர்கள், இது சலித்துப்போனதால், மாறுதலாக இருக்கட்டும் என்று ஒரு தடவை ஊட்டியில் ’வீக் எண்ட் பார்ட்டி’யை ஜாலியாக கொண்டாடி மகிழும் திட்டத்துடன், பாலியல் தொழிலாளியான நாயகி கிறிஸ்டியை (சிருஷ்டி டாங்கே) உடன் அழைத்துக்கொண்டு கிளம்பிப் போகிறார்கள். ஊட்டியில் ஒரு லாட்ஜில் தங்குகிறார்கள்.

இதனிடையே, கிறிஸ்டி மீது காதல் கொள்ளும் வேலு, அவர் மீது தன் நண்பர்களின் விரல்கூட படாதவாறு கவனமாக பார்த்துக் கொள்கிறார். என்றாலும், வேலுவின் நண்பர்கள் கிறிஸ்டியுடன் உல்லாசமாக இருக்க துடிக்கிறார்கள்.

இந்நிலையில், கிறிஸ்டி திடீரென மாயமாகிறார். அதன்பின் நான்கு நண்பர்களில் ஒருவரும் (விக்ரம்) காணாமல் போய்விடுகிறார். மாயமான இருவரையும் ஏனைய நண்பர்கள் ஊட்டி முழுவதும் தேடி அலைகிறார்கள்.

அதே நேரம், ஊட்டியின் சாலையோரம் நண்பர் (விக்ரம்) கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் பிணமாகக் கிடக்கிறார். இக்கொலையை விசாரிக்க போலீஸ் இன்ஸ்பெக்டரும் (ஜான் விஜய்), சப்-இன்ஸ்பெக்டரும் (தேவிப்ரியா) களத்தில் இறங்குகிறார்கள்.

நண்பரை கொன்றது யார்? ஏன்? அதை போலீசாரால் கண்டுபிடிக்க முடிந்ததா? மாயமான கிறிஸ்டியின் கதி என்ன? என்பன போன்ற கேள்விகளுக்கு ‘கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர்’ பாணியில் சுவாரஸ்யமாக விடை அளிக்கிறது ‘தி பெட்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் வேலுவாக, ஐ.டி நிறுவனப் பணியாளராக ஸ்ரீகாந்த் நடித்திருக்கிறார். நாயகி பாலியல் தொழிலாளி என்ற போதிலும், அவர் மீது காதல் கொண்டு அவரை பாதுகாக்கத் துடிப்பது, எதிர்பாராத சிக்கல்கள் மற்றும் அதன் விளைவுகளை துணிச்சலுடன் எதிர்கொள்வது என தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பாலியல் தொழிலாளி கிறிஸ்டியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். நல்ல அழகு, கொஞ்சம் கவர்ச்சி, அளவான நடிப்பு ஆகியவற்றுடன் வலம் வந்து பார்வையாளர்களைக் கவர்கிறார்.

நாயகனின் நண்பர்களாக வரும் பிளாக் பாண்டி, விஜே பப்பு, விக்ரம், நாயகியின் அம்மாவாக வரும் திவ்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஜான் விஜய், சப்-இன்ஸ்பெக்டராக வரும் தேவிப்ரியா உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திர வடிவமைப்புக்குத் தேவையான நடிப்பை குறைவின்றி நிறைவாக வழங்கியிருக்கிறார்கள்.

இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.மணிபாரதி. கதை மாந்தர்கள் கதை சொல்வது போல் இல்லாமல், ஒரு லாட்ஜின் படுக்கை இக்கதையை சொல்வது போல் அமைத்திருக்கும் உத்தி பாராட்டுக்கு உரியது. அதற்கு பொருத்தமாகவே இப்படத்துக்கு ‘தி பெட்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். ஒரு பாலியல் தொழிலாளியை நாயகியாக எடுத்துக்கொண்டு, அதை விரசம் இல்லாமல், நாகரிகமாகக் கையாண்டிருக்கிறார். உணர்வுப்பூர்வமான காதல் கதையை ‘கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர்’ ஜானரில், இரண்டு மணி நேரம் போனதே தெரியாத அளவுக்கு சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் எஸ். மணிபாரதி.

தாஜ்நூர் இசையில் பாடல், லயிப்புடன் முணுமுணுக்க வைக்கும் ரகம். பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கோகுல், சினிமாவில் அடிக்கடி காட்டப்படும் ஊட்டியின் பகுதிகளைத் தவிர்த்துவிட்டு, காதல் மற்றும் திரில்லர் ஜானருக்குப் பொருத்தமான புதிய இடங்களில் காட்சிகளை அழகாக படமாக்கி, படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

‘தி பெட்’ – பார்த்து ரசிக்கலாம்!

ரேட்டிங்: 3.5/5