தண்டகாரண்யம் – விமர்சனம்

நடிப்பு: தினேஷ், கலையரசன், ரித்விகா, வின்சு ரேச்சல் சாம், சபீர் கல்லரக்கல், பாலசரவணன், யுவன் மயில்சாமி, அருள்தாஸ், முத்துக்குமார், சரண்யா ரவிச்சந்திரன், கவிதா பாரதி மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: அதியன் ஆதிரை
ஒளிப்பதிவு: பிரதீப் காளிராஜா
படத்தொகுப்பு: செல்வா ஆர்கே
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
கலை: டி.ராமலிங்கம்
ஆக்ஷன்: ஸ்டன்னர் சாம், ஏ.எஸ்.சுதீஷ்குமார், பிசி ஸ்டண்ட்ஸ்
பாடல்கள்: உமாதேவி, தனிக்கொடி
தயாரிப்பு: ‘லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் (பி) லிட்’ எஸ்.சாய் தேவானந்த், எஸ்.சாய் வெங்கடேஸ்வரன் & ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ பா.இரஞ்சித்
பத்திரிகை தொடர்பு: குணா
“நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை” என்பது போன்ற செய்திகள் நாளிதழ்களிலும், செய்திச் சேனல்களிலும் அடிக்கடி வெளியாவதை நீங்கள் அறிவீர்கள். இந்த சண்டைகள், மோதல்கள் பெரும்பாலும் நடக்கும் இடம் தான் ‘தண்டகாரண்யம்’.
’தண்டகாரண்யம்’ என்பது இந்தியாவின் மிகப் பெரிய இருளடர்ந்த காட்டுப்பகுதி. தற்காலத்தில் ஜார்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒரிசா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கிந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பரவிக் கிடக்கிறது இக்காடு. கடந்த காலங்களில் இது இன்னும் பெரிய காடாக இருந்திருக்கக் கூடும்.
‘தண்டகாரண்யம்’ (தண்டகா + ஆரண்யம்) என்ற சொல்லுக்கு ’தண்டனைக்குரியவர்கள் வசிக்கும் காடு’ என்பது பொருள். ஆரியப் பார்ப்பனிய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ஆதிக்குடிகள் இங்கு அதிகம் வசிப்பதால், அவர்கள் ‘ராட்சதர்கள்’ எனவும், ’தண்டனைக்குரியவர்கள்’ எனவும் கருதப்பட்டு, அவர்களது காட்டுக்கு மேலாதிக்கவாதிகளால் மேற்கண்ட பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ராமன் 14 ஆண்டு வனவாசத்தின்போது, சீதை மற்றும் இலட்சுமணனுடன் சில காலம் இந்த தண்டகாரண்யத்தில் வாழ்ந்ததாக இராமாயணத்தின் ஆரண்ய காண்டம் கூறுகிறது. தற்காலத்தில், இங்குள்ள நிலக்கரி, இரும்பு, பாக்ஸைட் போன்ற கனிம வளங்களைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் பாசிஸ்டுகள், அதற்கு வசதியாக, இக்காட்டைப் பூர்விகமாகக் கொண்ட ஆதிக்குடிகளை இங்கிருந்து விரட்டியடிக்க முயலுகிறார்கள். இம்முயற்சியை எதிர்த்து முறியடிக்கப் போராடும் ஆதிக்குடிகளுக்கு அரணாகவும் பக்கத்துணையாகவும் ‘ நக்சல்கள்’ எனப்படும் ’மாவோயிஸ்டுகள்’ ஆயுதமேந்தி வீரத்துடன் சமர் புரிந்து வருகிறார்கள். அவர்களை அழித்தால் தான் தண்டகாரண்ய கனிமவளங்களை கார்ப்பரேட் பாசிஸ்டுகள் சுரண்டி சூறையாட முடியும் என்பதால், ”நக்சல்களை 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஒழித்துக் கட்டியே தீருவோம்” என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரைத்திருக்கிறார்.
இந்நிலையில் தான், வேலை வாய்ப்புத் தேடும் அப்பாவி இளைஞர்களை ‘நக்சல்கள்’ என அதிகார வர்க்கம் முத்திரை குத்தி, போலி என்கவுண்ட்டர் செய்து, கொன்று குவித்த கொடூர உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இந்த ‘தண்டகாரண்யம்’ திரைப்படத்தைப் படைத்து, ஆதிக்க சக்திகளின் திமிரை துணிச்சலுடன் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ‘தொழுவப்பட்ட’ என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த ஊரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் அண்ணன் தினேஷ், தம்பி கலையரசன். கலையரசன் வனத்துறையில் தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார். அவரும் உள்ளூர் ஆசிரியையான வின்சு ரேச்சல் சாமும் (படத்தில் இவர் பெயர் பிரியா) காதலிக்கிறார்கள்.
வனத்துறை வேலை நிரந்தரமாகி விடும் என்ற கனவில் இருக்கிறார் கலையரசன். ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும் அந்த கனவு நனவாகாததோடு, அண்ணன் தினேஷால் ஒரு பிரச்சினை ஏற்பட்டு, அந்த வேலையையும் இழக்க நேரிடுகிறது.
சீருடைப் பணியில் சேர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கும் கலையரசனிடம், ராணுவத்தில் சேரலாம் என்று ஒருவர் வழிகாட்டுகிறார். நிலத்தை விற்று, சில லட்சங்கள் பணத்தைக் கட்டி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சென்று, ராணுவப் பயிற்சி மையத்தில் சேருகிறார் கலையரசன். அவரைப் போலவே பாலசரவணனும் அங்கு செல்கிறார். அங்கே பயிற்சிகள் கடுமையாக இருக்கின்றன. கொடுமையாகவும் இருக்கின்றன. அங்கே போன பிறகு தான் தெரிகிறது, தன்னுடன் பயிற்சி பெறுபவர்கள் முன்னாள் நச்சல்பாரிகள் என்று. ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுவிட்டுச் சரணடைந்த அவர்களுக்கு மறுவாழ்வு, ராணுவப் பயிற்சி, வேலைவாய்ப்பு என்று ஆசை வார்த்தை கூறி அங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். நச்சல்பாரிகள் என்று ஒப்புக்கொண்டால் தான் மேலே பயிற்சிக்குச் செல்லலாம் என்று ராணுவ அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்போது வேறு வழியில்லாமல் கலையரசனும் பால சரவணனும் ஒப்புக்கொள்கிறார்கள்.
அம்மாநில சட்டமன்றத் தேர்தல் வருகிறது. வனப்பகுதியில் நக்சல்பாரிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கிறது. பிரச்சினையைச் சமாளிக்க, சரணடைந்தவர்களை ராணுவ அதிகாரிகள் போலி என்கவுண்டர் செய்து பலி கொடுக்கத் திட்டமிடுகிறார்கள்
இதனிடையே, சரணடைந்த நக்சல்பாரிகள் பற்றிய செய்தி பத்திரிகையில் வருகிறது. இதைத் தெரிந்துகொண்ட உள்ளூர் போலீஸ்காரர்கள் கலையரசன் குடும்பத்தினரை சித்திரவதை செய்கிறார்கள்.
ராணுவ அதிகாரிகளின் பிடியிலிருந்து எப்படியாவது வெளியேற வேண்டும் என்று கலையரசன் முயற்சி செய்கிறார் . ஆனால் எந்த வழி சென்றாலும் அந்த வழியை அடைக்கிறார்கள். எப்படியும் தப்பித்து வெளியேற முயற்சி செய்யும் அவர், அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா? அவரது ஊரில் உள்ள மக்களுக்கு என்ன ஆகிறது? என்பவை தான் 129.59 நிமிடங்கள் கொண்ட ‘தண்டகாரண்யம்’ படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் தினேஷ் மற்றும் கலையரசன், பழங்குடியின மக்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களாக மக்கள் மனதில் நிற்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞராக அமைதியான முறையில் அநியாயங்களை எதிர்த்து குரல் கொடுக்கும் தினேஷ், பொங்கி எழுந்து தனது விஸ்வரூபத்தை வெளிக்காட்டும் இடங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. வட இந்தியாவில் பரவலாக அறியப்படும் நக்சலைட்டுகள் மக்களுக்கு எதிரானவர்கள் என்ற முத்திரையை அழித்தொழிக்கும் கதாபாத்திரத்தில் அளவாக நடித்து, பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
தவறு செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் எளியோர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கும் கலையரசன், தன் உயிர் போகப்போகிறது என்பதை தெரிந்து பதற்றம் அடையும்போதும், அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கும்போதும், நடிப்பின் மூலம் படம் பார்ப்பவர்களை பதற்றமடையச் செய்துவிடுகிறார்.
சபீர் கல்லரக்கல், பாலசரவணன், ரித்விகா, வின்சு ரேச்சல் சாம், அருள்தாஸ், முத்துகுமார், யுவன் மயில்சாமி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, கதாபாத்திர வடிவமைப்புக்கு ஏற்ற உடல் மொழி மற்றும் நடிப்பின் மூலம், அந்த கதாபாத்திரங்களாகவே பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு மிகப் பெரிய பலம் சேர்த்திருக்கிறது. டைடில் கார்டு போடும்போதே, பீஜியம் மூலம் கவனம் ஈர்க்கும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், “காவக்காடே…” பாடல் மூலம் கதைக்களம் மற்றும் கதை மாந்தர்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தி விடுகிறார். இளையராஜாவின் ”ஓ…ப்ரியா…ப்ரியா…” மற்றும் “மனிதா…மனிதா…” பாடல்களையும் மிக சரியாக பயன்படுத்தியிருக்கும் ஜஸ்டின் பிரபாகரன், பின்னணி இசையில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். நிச்சயம் அவருக்கு பல விருதுகள் காத்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் பிரதீப் கலைராஜா, அடர்ந்த வனப்பகுதிகளையும், அப்பகுதிகளை ஒட்டி வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலையும் அழகியலோடு மட்டும் இன்றி, அவர்கள் அனுபவிக்கும் வலியையும் பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
இரண்டு பாகங்களாக சொல்லும் அளவுக்கு விசயங்கள் இருந்தாலும், அதை 2 மணி நேரம், 10 நிமிடங்களில் சொல்லும் அளவுக்கு காட்சிகளை ஷார்ப்பாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் செல்வா.ஆர்.கே, இயக்குநர் சொல்ல நினைத்த மெசேஜையும், மக்களிடம் கடத்த முயன்ற உணர்வுகளையும் மிகச் சரியாக கையாண்டு பாராட்டுப் பெறுகிறார்.
எழுதி இயக்கியிருக்கும் அதியன் ஆதிரை, இதுவரை திரையில் சொல்லப்படாத ஒரு அர்த்தமுள்ள கதையை அழுத்தமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார்.
வலியோரால் வஞ்சிக்கப்படுகிறவர்கள் தட்டிக் கேட்டாலும், திருப்பி அடித்தாலும் அவர்களுக்கு தீவிரவாதி என்ற முத்திரைக் குத்தும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் போலியான முகத்திரையை கிழிக்கும் வகையில் மிகப்பெரிய உண்மையை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறார்.
கலையரசனின் பயணம் வலி மிகுந்ததாகவும், எளிய மக்களின் ஏமாற்றம் நிறைந்த பயணமாகவும் இருப்பது இதயத்தை கனக்கச் செய்யும் வகையில் இருந்தாலும், தினேஷின் பயணம், மற்றும் திடீர் விஸ்வரூபம் மூலம், வஞ்சிக்கப்படும் எளியவர்கள் தான் போராளிகளாக உருவெடுக்கிறார்கள் என்பதை மிக எளிமையாக சொல்லி, அந்த கதாபாத்திரத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதைக்கரு என்றாலும், நாட்டில் நடந்த ஒரு மிகப்பெரிய மோசடியை மிக துணிச்சலோடு சொல்வதோடு, அனைத்து தரப்பினரையும் தொடர்புபடுத்திக் கொள்ளும் ஒரு வலிமையான படைப்பாக கொடுத்திருக்கும் இயக்குநர் அதியன் ஆதிரைக்கு தமிழ் திரையுலகம் மட்டும் அல்ல, இந்திய திரையுலகமே ’சிவப்புக் கம்பளம்’ விரிப்பது உறுதி.
‘தண்டகாரண்யம்’ – இதுவரை திரையில் சொல்லப்படாத கதை! எவரும் சொல்லத் துணியாத கதை! அனைவரும் பார்த்து ஊக்குவிக்க வேண்டிய வெகுமக்களுக்கான படம்!
ரேட்டிங்: 4.5/5