“கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள்”: நடிகை ரம்பா நீதிமன்றத்தில் மனு!

பிரபு நடித்த ‘உழவன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி என்ற ரம்பா. சுந்தர்.சி இயக்கிய ‘உள்ளத்தை அள்ளித்தா’ வெற்றிப்படத்தில் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். பின்னர் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமாய் திகழ்ந்தவர். தமிழில் மட்டுமில்லாது, தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி, போஜ்பூரி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தவர்.

இவருக்கும், கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரும் தொழிலதிபருமான இந்திரகுமாருக்கும் 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை ரம்பா தவிர்த்துவிட்டார். கனடாவில் வசித்துவந்த இந்திரகுமார் – ரம்பா தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், சமீபகாலமாக சென்னையில் தங்கியிருக்கும் ரம்பா, சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தலை காட்ட ஆரம்பித்தார். அவருக்கும், கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவரைப் பிரிந்து அவர் வந்துவிட்டார் என்ற பேச்சு எழுந்தது.

தற்போது தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ரம்பா மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தன்னுடைய கணவர் சித்ரவதை செய்ததால் அவரைவிட்டு பிரிந்துவந்து வாழ்வதாகவும், இந்த நிலையில் குழந்தைகளை பார்த்துக் கொள்வது சிரமமாக இருப்பதாகவும், அதனால் தன்னுடன் சேர்ந்து வாழ கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் ரம்பா கோரியிருப்பதாக தெரிகிறது. இந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.