முத்தலாக் முறையை 6 மாதத்துக்கு நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக், சட்டப்படி செல்லத்தக்கதா என்ற வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப்.நாரிமன், யு.யு.லலித், அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக, கடந்த மே 11-ம் தேதி தொடங்கி 6 நாட்கள் நடந்தது.

மனுதாரர் ஷாய்ரா பானு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் சத்தா, ‘முத்தலாக் விவாகரத்து நடைமுறை ஒரு பாவச்செயல்’ என்பதை அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பல்வேறு பெண் மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆனந்த் குரோவர், சல்மான் குர்ஷித், ஆரிப் முகமது கான், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் முத்தலாக் நடைமுறை சட்ட விரோதம் என்றும், அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் வாதிட்டனர்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘மிகவும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய, முத்தலாக் விவாகரத்து நடைமுறையை பயன்படுத்தக் கூடாது என்று முஸ்லிம் ஆண்களிடம் ‘நிக்காநாமா’வின்போது அறிவுரை வழங்கும்படி, அனைத்து காஸிக்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

முத்தலாக் நடைமுறை சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால் முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறைக்கு புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரத் தயார் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்பு கடந்த மே 18-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில், தலைமை நீதிபதி கேஹர் உள்ளிட்ட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று காலை 10:30 மணிக்கு இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கினார்கள்.

நீதிபதிகள் குரியன் ஜோசப், நாரிமன், யு.யு.லலித் ஆகிய மூவரும் முத்தலாக் முறை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என கருத்து தெரிவித்தனர். நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹார், அப்துல் நசீர் ஆகிய இருவரும் முத்தலாக் முறைக்கு 6 மாத காலம் தடை விதிக்க வேண்டும்; 6 மாதங்களுக்குள் மத்திய அரசு முத்தலாக் ஒழுங்குமுறை சட்டத்தை இயற்ற வேண்டும் எனக் கூறினர்.

இதன் அடிப்படையில், முஸ்லிம்கள் விவாகரத்து நடைமுறையான முத்தலாக்கை 6 மாத காலம் நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், முத்தலாக் முறையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக 6 மாதத்துக்குள் சட்டம் நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.