சக்தித் திருமகன் – விமர்சனம்

நடிப்பு: விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர், சுனில் கிர்பலானி, திருப்தி ரவீந்தரா, செல் முருகன், கிரண் குமார், ஷோபா விஸ்வநாத், மாஸ்டர் கேசவ் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: அருண் பிரபு
ஒளிப்பதிவு: ஷெல்லி ஆர்.காலிஸ்ட்
படத்தொகுப்பு: ரேமண்ட் டெரிக் கிரஸ்டா & தின்ஸா
ஆக்ஷன்: ராஜசேகர்
கலை இயக்கம்: ஸ்ரீராமன்
இசை: விஜய் ஆண்டனி
தயாரிப்பு: ’விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ பாத்திமா விஜய் ஆண்டனி
பத்திரிகை தொடர்பு: ரேகா
2005ஆம் ஆண்டு வெளியான ‘சுக்ரன்’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, புகழடைந்து, 2012ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ வெற்றித் திரைப்படம் மூலம் நாயக நடிகராக அறிமுகமாகி, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘மார்கன்’ போன்ற கமர்ஷியல் வெற்றிப்படங்களால் ‘முன்னணி நாயக நடிகராக’ தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உயர்ந்தோங்கித் திகழும் விஜய் ஆண்டனி நடித்துள்ள 25-வது திரைப்படம் ‘சக்தித் திருமகன்’. தனது 25-வது படம் தரமான வெற்றிப்படமாகக் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் கவனமாக காய் நகர்த்தியிருக்கும் அவர், அதற்காகவே ‘அருவி’, ‘வாழ்’ ஆகிய வெற்றிப் படங்களைப் படைத்து தமிழ் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் அருண் பிரபுவுடன் கைகோர்த்திருக்கிறார். விஜய் ஆண்டனி – அருண் பிரபு கூட்டணியின் வித்தியாசமான ‘பொலிட்டிக்கல் ஆக்ஷன் திரில்லர்’ திரைப்படமான ‘சக்தித் திருமகன்’ எப்படி இருக்கிறது? பார்க்கலாம்…
இப்படக்கதை 1989ஆம் ஆண்டில் துவங்குகிறது. மாயவரத்தில் கைக்குழந்தையோடு வேலைக்கு வரும் ஒரு பழங்குடி இளம்பெண், கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு, ‘இது தற்கொலை’ என்று பொய்யாய் காட்டும் விதமாக தூக்கில் தொங்க விடப்படுகிறார். இது குறித்து விசாரிக்கத் தொடங்கும் போலீஸ் அதிகாரிக்கு, மேலிடத்திலிருந்து மிகப் பெரிய அளவில் அரசியல் அழுத்தம் வருகிறது. “இந்த பெண் அங்கு வந்ததாகவோ, இறந்ததாகவோ எந்த விஷயமும் வெளியே வரக்கூடாது. கேஸையும், கைக்குழந்தையையும் பக்குவமாக குளோஸ் பண்ணி விடு” என்று உத்தரவு வருகிறது. அதன்படியே அந்த போலீஸ் அதிகாரியும் அப்பெண்ணின் உடலை யாருக்கும் தெரியாமல் ’டிஸ்போஸ்’ செய்வதோடு, கைக்குழந்தையையும் ஒரு குப்பைமேட்டின் அருகே வைத்துவிட்டுப் போய்விடுகிறார். அந்த குழந்தை என்ன ஆனது? என்ற கேள்வி ஒரு பக்கம் குடைந்தெடுக்க…
கதை, நொடியில் 36 ஆண்டுகள் உருண்டோடி, சமகாலத்துக்கு (அதாவது 2025ஆம் ஆண்டுக்கு) வருகிறது. தமிழக அரசின் தலைமைச் செயலகத்திலும், அரசு அலுவலங்களிலும் யாருக்கு என்ன காரியம் ஆக வேண்டுமோ, அவர்களுக்கு அந்த காரியத்தை கமிஷன் வாங்கிக் கொண்டு கச்சிதமாக முடித்துக் கொடுக்கும் அரசியல் புரோக்கராக இருக்கிறார் நாயகன் கிட்டு (விஜய் ஆண்டனி). அவர் தனது சிறு வயதில் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் எடுபடி வேலை செய்பவராகவும், விடலைப் பருவத்தில், பிரபல தொழிலதிபர் மற்றும் அரசியல் ஆலோசகரான ‘அரசியல் சாணக்கியர்’ அபயங்கர் ஸ்ரீனிவாச ஸ்வாமி (’காதல் ஓவியம்’ புகழ் கண்ணன் (எ) சுனில் கிர்பலானி) இல்லத்தில் வேலைக்காரராகவும் இருந்த அனுபவத்தில் அவருக்கும் அரசியல் சூழ்ச்சியும், சாணக்கியத்தனமும் அத்துபடி. அதனால் அமைச்சர்கள், அதிகாரிகள் தொடங்கி, அரசு அலுவலகங்களின் கடைநிலை ஊழியர்கள் வரை, ஒட்டுமொத்த அரசு எந்திரத்தையும் தன் கைக்குள் வைத்துக்கொண்டு, பல்வேறு வடிவங்களில் இருக்கும் லஞ்சம், கமிஷன் போன்றவற்றை பெற்றுக்கொண்டு, தேவையானவர்களுக்கு தேவையானதை செய்துகொடுக்கிறார். இப்படியே சுமார் ரூ.6000 கோடிக்கு மேல் சம்பாதித்துவிடுகிறார். அதே நேரத்தில் ஏழை எளிய மக்களிடம் லஞ்சம், கமிஷன் வாங்காமல் உதவிகள் செய்வதோடு, தன் சொந்தப் பணத்திலிருந்து அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ‘ராபின் ஹூட்’ ஆகவும் இருக்கிறார்.

ஒரு சமயம், 200 கோடி ரூபாய் கமிஷன் பணம் வரும் என்பதற்காக, மிகப் பெரிய அரசியல் சித்துவிளையாட்டில் ஈடுபடுகிறார் கிட்டு. இதில் பாதிக்கப்படுகிறார் அபயங்கர். இதனால் தேசிய, மாநில அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என மொத்த அதிகாரமும் கிட்டுவைத் திரும்பிப் பார்க்கிறது. அபயங்கருக்கும் அவர் எதிரியாகிறார்.
இப்பகை நெருக்கடியிலிருந்து கிட்டு மீண்டாரா? உண்மையில் அவர் யார்? அவரின் பின்னணி என்ன? இந்த அரசியல் புரோக்கர் வேலையை எதற்காக செய்கிறார்? என்பன போன்ற கேள்விகளுக்கு பரபரவென விறுவிறுப்புடன் பதில் சொல்லுகிறது ‘சக்தித் திருமகன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகன் கிட்டுவாக விஜய் ஆண்டனி நடித்திருக்கிறார். உடல் வலிமையைக் காட்டிலும் அறிவுத்திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அரசியல் சிஸ்டத்தையே ஆட்டம் காண வைக்கும் அசாதாரணமான இந்த கதாபாத்திரத்தில் அபாரமாக நடித்து, முழு படத்தையும் தன் தோளில் வெற்றிகரமாக சுமந்திருக்கிறார். அவரது நிதானமான நடிப்பு வித்தியாசமாகவும், ரசிப்புக்குரியதாகவும் இருக்கிறது. பாராட்டுகள் விஜய் ஆண்டனி.
பிரபல தொழிலதிபர் மற்றும் அரசியல் சாணக்கியர் அபயங்கர் ஸ்ரீனிவாச ஸ்வாமியாக ’காதல் ஓவியம்’ புகழ் கண்ணன் (என்ற) சுனில் கிர்பலானி நடித்திருக்கிறார். கம்பீரத்தை விடாத அரசியல் நரித்தனம், அதற்கேற்ற உடல்மொழி, ஆங்கில உச்சரிப்பு என அபயங்கர் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வில்லனிஸத்தை பிரமாதமாகக் கொடுத்திருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் அவரை வரவேற்கிறோம்.

நாயகனை குழந்தைப் பருவத்தில் எடுத்து வளர்க்கும் சுவரெழுத்து சுப்பையா என்ற ஜீவனுள்ள கதாபாத்திரத்தில் வாகை சந்திரசேகர் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். நிஜத்தில் வாழ்ந்த பெரியாரிஸ்டான சுவரெழுத்து சுப்பையா கதாபாத்திரத்தை வாகை சந்திரசேகர் பெருமைப்படுத்தியிருப்பதோடு, கெட்டப்பிலும், முன்வைக்கும் பொன்மொழிகளிலும் தந்தை பெரியாரையே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியதற்காக அவருக்கு நன்றிகள்.
நாயகனின் மனைவி வேம்புவாக திருப்தி ரவீந்திரா நடித்திருக்கிறார். அவருக்கு படத்தில் அதிக வேலை இல்லை என்றாலும், கொடுக்கப்பட்ட வேலையை குறைவின்றி செய்திருக்கிறார்.
நாயகனின் உதவியாளர் மற்றும் ஆலோசகர் மாறனாக படம் முழுவதும் வரும் செல் முருகன் கவனம் ஈர்க்கிறார். விசாரணை அதிகாரி ராம் பாண்டேவாக வரும் கிரண் குமார், அதிகாரமிக்க பெண்மணி லதாங்கியாக வரும் ஷோபா விஸ்வநாத், ஆறு வயது கிட்டுவாக வரும் மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட ஏனைய நடிப்புக் கலைஞர்கள் அனைவருமே தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு. எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல், இந்த அற்புதமான பொலிட்டிக்கல் ஆக்ஷன் திரில்லரில் ஒரு தீவிர பெரியாரியத் தொண்டரால் அறிவூட்டி வளர்க்கப்படும் கிட்டுவை நாயகனாகவும், தங்களை உயர்ந்த சாதியினர் என கருதிக் கொள்வோரின் பிரதிநிதியான அபயங்கர் ஸ்ரீனிவாச ஸ்வாமியை வில்லனாகவும் படைத்துக் காட்டி தன் அரசியல் சார்பைத் துணிச்சலாக பிரகடனம் செய்திருக்கிறார் இயக்குநர். பல நூறு ஆண்டுகளாக நம் மண்ணில் நடந்து வரும் ‘ஆரிய – திராவிட போர்’ என்ற தொடர் சங்கிலியின் ஒரு கண்ணியாக இத்திரைப்படத்தை அழகுற ஆக்கியிருக்கிறார் இயக்குநர். அவரது அரசியல் நையாண்டிகள் அனைத்தும் ரசிக்கத் தக்க பிரகாசமான தீப்பொறிகள். இயக்குநர் அருண் பிரபுவுக்கு நம் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. காட்சிகளுக்கு பின்னணி இசை பலம் சேர்த்திருக்கிறது.
கொஞ்சம்கூட யோசிக்கவிடாமல் பரபரவென சிட்டாய் பறக்கும் திரைக்கதைக்கு, ஷெல்லி ஆர்.காலிஸ்ட்டின் கச்சிதமான ஒளிப்பதிவும், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா – தின்ஸா கூட்டணியின் படு ஷார்ப்பான படத்தொகுப்பும் உறுதுணையாக இருந்து இயக்குநர் மற்றும் இப்படத்தின் வெற்றிக்கு கடுமையாக உழைத்திருக்கின்றன.
’சக்தித் திருமகன்’ – திராவிட வெற்றித் திருமகன்!
ரேட்டிங்: 4/5.