சத்திய சோதனை – விமர்சனம்

நடிப்பு: பிரேம்ஜி அமரன், ஸ்வயம் சித்தா, ரேஷ்மா, சித்தன் மோகன், செல்வமுருகன், ஹரிதா, பாரதி, ராஜேந்திரன், கு.ஞானசம்பந்தம், முத்துபாண்டி, கர்ணராஜா மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: சுரேஷ் சங்கையா

ஒளிப்பதிவு: ஆர்.வி.சரண்

படத்தொகுப்பு: வெங்கட் ராஜன்

பாடலிசை: ரகு ராம்.எம்

பின்னணி இசை: தீபன் சக்கரவர்த்தி

தயாரிப்பு: ‘சூப்பர் டாக்கீஸ்’ சமீர் பரத் ராம்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ‘ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற கிராமியப் படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையாவின் அடுத்த கிராமியப் படம் ‘சத்திய சோதனை’ என்ற மெச்சத் தக்க படைப்பு.

அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில், கழுத்து நிறைய கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து, மோட்டார் சைக்கிளில் வலம் வரும் ஒரு மைனரை, ஊருக்கு வெளியே இருக்கும் வெட்டவெளியில் மடக்கும் சில இளைஞர்கள் அவரை வெட்டிச் சாய்க்கிறார்கள்.

எந்த குறிக்கோளும் இல்லாமல் ஒரு பெண்ணை காதலித்துக்கொண்டும், வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டும் திரியும் நாயகன் பிரதீப் (பிரேம்ஜி அமரன்), கொலையுண்ட மைனரின் சடலத்தைப் பார்க்கிறார். வெயிலில் கிடக்கும் அதை இழுத்து மரநிழலில் போடுகிறார். அதன் கழுத்தில் கிடக்கும் சிறிய ஒற்றை தங்கச்சங்கிலி, கையில் கட்டியிருக்கும் கைக்கடிகாரம், சட்டைப்பையில் இருக்கும் செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு போய் காவல் நிலையத்தில் ஒப்படைத்து தகவல் கொடுக்கிறார்.

அதே சமயம் காவல் நிலையத்தில் சரணடையும் கொலையாளிகள், கொலை செய்யப்பட்டவர் ஏகப்பட்ட தங்க நகைகளை அணிந்திருந்ததாக சொல்கிறார்கள். இதனால், அப்பாவியான பிரதீப்பை சந்தேகப்படும் காவல் துறையினர், மற்ற நகைகள் எங்கே என்று கேட்டு அவரை அடிக்கிறார்கள். அவர் மிச்ச நகைகளைக் கொடுத்தால், அதை தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ளலாம் என்ற பேராசையில் காவல்துறையினர் அவரை மிரட்டி, உதைத்து, துன்புறுத்துகிறார்கள்.

காவல் நிலைய சித்ரவதையை தாங்கிக்கொள்ள முடியாத பிரதீப், கடுப்பில் காவல் நிலைய வாக்கிடாக்கியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விடுகிறார். அவரிடமிருந்து வாக்கிடாக்கியை காவல்துறையினர் மீட்டார்களா? தன் மீது சுமத்தப்பட்ட திருட்டு குற்றச்சாட்டிலிருந்து பிரதீப் எப்படி மீண்டார்? கொலை செய்யப்பட்டவரின் தங்க நகைகளை திருடியது யார்? என்பது ‘சத்திய சோதனை’ திரைப்படத்தின் காமெடி கலந்த மீதிக்கதை.

அப்பாவி கதாநாயகன் பிரதீப்பாக வருகிறார் பிரேம்ஜி அமரன். அவருடைய நிஜ இயல்புக்கேற்ப அளவெடுத்து வடிவமைத்தது போன்ற அட்டகாசமான கதாபாத்திரம். அதை புரிந்துகொண்டு, அதற்குள் தன்னை பொருத்திக்கொண்டு, யதார்த்தமாக நடித்து சிரிக்கவும் ரசிக்கவும் வைத்திருக்கிறார்.

நாயகனின் காதலி பிரவீனாவாக வரும  ஸ்வயம் சித்தா, ஒரு பாடலிலும், மிகக் குறைவான காட்சிகளிலும் மட்டும் வந்து போகிறார். அவர் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த ஸ்கோப் இல்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

காவலர் குபேரனாக வரும் சித்தன் மோகனும், இன்னொரு காவலர் மகாதேவனாக வரும் செல்வமுருகனும் இணைந்து செமையாக நடித்து பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். பேராசையாலும், முட்டாள்தனத்தாலும் இவர்கள் செய்கிற செயல்கள் ஏற்படுத்தும் சிரிப்பலையில் திரையரங்கம் அவ்வப்போது அதிர்ந்த வண்ணம் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், தங்கள் இயல்பான நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும் இந்த இருவரும் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.

நீதிபதியாக சிறப்பாக நடித்திருக்கிறார் கு.ஞானசம்பந்தம், உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்காமல், அப்பாவிகளைப் பிடித்துக் கொண்டுவந்து நீதிமன்றத்தில் நிறுத்தும் காவல்துறையினரை தொடர்ந்து கலாய்க்கும் விதத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

ஆரம்பத்தில் சாதாரணமாக வரும் ஒரு பாட்டி, இரண்டாம் பாதியில் முக்கியத்துவம் பெற்று, அசால்டாக நடித்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார். என்ன ஒரு கேஷுவலான நடிப்பு என்று பிரமித்துப் போனோம்; மிகை இல்லை.

நாயகனின் அக்கா அன்னமாக வரும் ரேஷ்மா, அக்காவின் கணவர் செல்வராஜாக வரும் கர்ணராஜா, போலீஸ் இன்ஃபார்மர் ராமராக வரும் ராஜேந்திரன், பெண் காவலராக வரும் ஹரிதா, மற்றும் பாரதி, முத்துபாண்டி உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வழங்கி கவனம் பெறுகிறார்கள்.

ஒரு கொலையையும், நான்கு கொலைகாரர்கள். ஒரு அப்பாவி கதா நாயகன், ஒரு பாட்டி, இரண்டு காவலர்கள் ஆகியோரையும் உள்ளடக்கிய  இயல்பான கதை, சுவையான திரைக்கதை, ரசனையான வட்டார வழக்கு வசனங்கள், மிகைப்படுத்தாத நடிப்பு, சிறந்த இயக்கம் ஆகியவற்றைக் கொண்டு மிகப் பெரிய நகைச்சுவை விருந்து படைத்துள்ளார் இயக்குனர் சுரேஷ் சங்கையா.  சட்டத்திடம் இருந்தும், நீதித்துறையிடம் இருந்தும் குற்றவாளிகள் தப்பித்து விடுகிறார்கள், அப்பாவிகள் மட்டுமே சிக்கி சீரழிகிறார்கள் என்ற வலி மிகுந்த கருத்தை பிளாக் காமெடியாக அனைத்துத் தரப்பினரும் ரசித்து ஏற்கும் விதத்தில் சொல்லியுள்ள இயக்குனர் சுரேஷ் சங்கையா பாராட்டுக்குரியவர்.

ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு, வெங்கட்ராஜனின் படத்தொகுப்பு,  ரகுராம்.எம் இசையில் உருவான பாடல்கள், தீபன் சக்கரவர்த்தியின்

பின்னணி இசை ஆகியவை படத்தின் தரத்துக்கும், இயக்குனரின் வெற்றிக்கும் கைகொடுத்திருக்கின்றன.

’சத்திய சோதனை’ – குடும்பம் குடும்பமாக திரையரங்கம் வாங்க! விழுந்து விழுந்து சிரித்துவிட்டு போங்க!