ஒரு வருடம் தள்ளிப்போனது சமந்தா – நாகசைதன்யா திருமணம்!

தெலுங்கு நடிகர் நாகர் ஜூனாவின் மகனும் இளம் ஹீரோவுமான நாகசைதன்யாவும்– சமந்தாவும் காதலில் விழுந்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரண்டு குடும்பத்தினரும் ஒப்புதல் அளித்து விட்டனர். வரும் டிசம்பரில் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது.

இதையடுத்து சமந்தா புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ‘வடசென்னை’ உள்ளிட்ட படங்களில் இருந்தும் விலகினார். இந்த நிலையில் இந்த வருட இறுதியில் நடக்க இருந்த சமந்தா– நாகசைதன்யா திருமணத்தை 2018–ம் ஆண்டுக்கு தள்ளிவைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தெலுங்கில் சமந்தா– நாகசைதன்யா இணைந்து நடிக்கும் புதிய படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதை கல்யாண் கிருஷ்ணா இயக்குகிறார். இதுதவிர தமிழில் 2 படங்களில் நடிக்கவும் சமந்தா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதுபோல் நாகசைதன்யா மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த படங்களை எல்லாம் நடித்து முடித்து விட்டு சமந்தாவும்– நாகசைதன்யாவும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த படங்களை எல்லாம் முடிக்கவேண்டும் என்றால் இன்னும் ஒரு வருடத்தை தள்ளிவைக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே 2017–ஐ விட்டு விட்டு 2018–ல் இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக தெலுங்கு பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.