“பெரியாரின் இதயத்தில் தைத்த முள்”ளை அகற்றினார் கேரள முதல்வர்: தமிழக தலைவர்கள் பாராட்டு!

இந்து கோவில்களில் பார்ப்பன வருண சாதியினர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம், ஏனையோருக்கு அதற்கான தகுதி இல்லை என்ற வருணாசிரம / மநு அநீதி கோட்பாடு தனது இதயத்தில் தைத்துள்ள முள் என்று வேதனையுடன் தெரிவித்தவர் பெரியார். அந்த முள்ளை அகற்றி சமூக நீதியை நிலை நாட்டும் வகையில், பட்டியலின சாதியினர், பட்டியலின தொல்குடியினர் உள்ளிட்ட பார்ப்பனரல்லாதோரை கேரள கோவில்களில் அர்ச்சகர் ஆக்க வழிவகை செய்துள்ள முதல்வர் பினராயி விஜயனுக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

—————-
மு.க. ஸ்டாலின்:

ஆலய வழிபாட்டு முறையில் புரட்சியை ஏற்படுத்துவதில் தென்னிந்தியா எப்போதுமே முன்னோடியாக இருந்து வருகிறது என்பதன் அடையாளமாக கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்குட்பட்ட கோவில்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமுதாயத்தினரையும் அர்ச்சகராக நியமிக்க கேரள தேவசம் ஆள் நியமன அமைப்பு உத்தரவிட்டிருப்பதன் மூலம் அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராக முடியும் என்ற புதிய விதி எழுதப்பட்டுள்ளது.

‘தந்தை பெரியாரின் இதயத்தில் தைத்த முள்ளை’ எடுக்கும் வகையில் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் 1971 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் அனைத்து சமுதாயத்தினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆகமப் பயிற்சியும் அளிக்கப்பட்ட நிலையில், ஆதிக்க சக்திகளின் தூண்டுதலால் உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடுத்து விட்டனர். அந்த வழக்கை திறம்பட நடத்தவோ, அனைத்து சமுதாயத்தினரையும் அர்ச்சகராக்கவோ அ.தி.மு.க. அரசு முன்வரவில்லை.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற வள்ளுவரின் வாக்கு நிலைநிறுத்தப்பட்டு கருவறைக்குள் அனைத்து சாதியினரும் நுழைய வேண்டும் என்று திராவிட இயக்கம் தமிழகத்தில் துவங்கிய புரட்சி, இன்று கேரளாவில் நிலை நாட்டப்பட்டுள்ளது. இதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியைத் தமிழகமும் விரைந்து பெறுவதற்கும், கடவுளின் சன்னதியில் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்வதற்கும் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து போராடும்.

————–
தொல். திருமாவளவன்:

1924ஆம் ஆண்டு தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அதன் தொடர்ச்சியாகவே 1936ல் கோயில் நுழைவு சட்டம் இயற்றப்பட்டது. வைக்கத்தில் கோயில் இருந்த வீதி வழியாக நடப்பதற்கே போராட்டம் நடத்தப்பட்ட கேரளாவில், இப்போது இந்தியாவிலேயே முதல் முறையாக தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்துள்ள கேரள இடதுசாரி அரசாங்கத்தை மனமாரப் பாராட்டுகிறோம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றி சமூக நீதியில் இந்தியாவுக்கே வழிகாட்டிய தமிழக அரசு, கேரள முன்மாதிரியைப் பின்பற்றி இங்கும் அர்ச்சகர்கள் நியமனங்களில் தலித்துகளுக்கு உரிய இடமளிக்க வேண்டும்.

பழமைவாதிகள் இன்றளவும் செல்வாக்கு செலுத்திவரும் கேரளக் கோவில்களில் தலித்துகள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சமூகப் புரட்சி. இதை சாதித்துக் காட்டியிருக்கும் கேரள முதல்வர் திரு. பினராயி விஜயன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 2006ஆம் ஆண்டு திமுக அரசு இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 2007ல் அரசு நடத்திய பயிற்சிப் பள்ளிகளில் தலித்துகள் உள்ளிட்ட பிராமணரல்லாத சாதிகளைச் சேர்ந்த 206 பேர் அர்ச்சகர் பயிற்சி பெற்றனர். அவர்களில் எவருக்கும் இதுவரை தமிழக அரசு பணிநியமன ஆணையை வழங்கவில்லை என்பது வேதனைக்குரியது.

உச்சநீதிமன்றம் தகுதி அடிப்படையில் அர்ச்சகர் பணி நியமனம் செய்யலாம் என ஒத்துக்கொண்டுள்ள நிலையில், தமிழக அரசு மவுனம் சாதிப்பது சமூகநீதிக்கு உகந்தது அல்ல. உடனடியாக கேரள அரசைப் பின்பற்றி தமிழக அரசும் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு முன்வர வேண்டும்.
—————–
இரா. முத்தரசன்:

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது, போற்றத்தக்கது. மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டியது.

தமிழகத்தில் ஏற்கெனவே சட்டம் வந்ததன் பின்னணியில், அரசாங்கமே இதற்கெனத் தொடங்கிய பள்ளிகளில் முறைப்படி பயின்று அர்ச்சகருக்கான தகுதிச் சான்றிதழ் பெற்ற, பிராமணரல்லாத பிற சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இருக்கிறார்கள். முறைப்படி அவர்களுக்குக் கோவில்களில் அர்ச்சனை செய்யும் பணி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதை ஏற்கத் தயாராக இல்லாதவர்கள் முட்டுக்கட்டை போட்டதால் நடைமுறையில், பயிற்சி பெற்றிருந்தாலும் நியமனம் பெற முடியாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசும் இதில் எவ்வித முன்முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில், பினராயி விஜயன் அரசின் இந்த நடவடிக்கை முற்போக்கானது. தமிழகமும் இதர மாநிலங்களும் இதே போல் செயல்பட வேண்டும்.

—————-
கி. வீரமணி:

தந்தை பெரியார் தொடங்கிய போராட்டத்தின் விளைவாக தற்போது கேரள மாநில அரசு எளிமையான நியமனங்கள் மூலம் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக்கியுள்ளது. தமிழக அரசும் 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில், பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை உடனே நியமனம் செய்ய வேண்டும்.

திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தில் 1949 முதல், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து அர்ச்சகராகும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற போராட்டம் வலுவானது. பல ஆண்டுகளாகவே இக்கோரிக்கை அங்கே சமூக நீதி அமைப்புகளால் வற்புறுத்தப்பட்டு வந்தது. வருங்காலத்திலும் கொச்சியிலும், மலபாரிலும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நியமனங்கள், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பாராட்டி வரவேற்கப்பட வேண்டும். முற்போக்கு அரசு என்று கேரள அரசு காட்டியுள்ளது.

தமிழ்நாடுபோல சட்டமன்றத்தில் தனியே சட்டமாக இயற்றப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத் தகுந்தது. அதனை எதிர்த்து யாரும் தமிழ் நாட்டில் நடந்தது போல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவில்லை. இதனால் மிக எளிமையாக, முறையாக அதனை அங்குள்ள அரசு செயல்படுத்திட ஏதுவாக அமைந்தது.

ஏற்கெனவே எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் கொடுத்த வாக்குறுதி, தமிழக அரசு சார்பில் என்பதால் அது இன்றைய எடப்பாடி அரசையும் கட்டுப்படுத்தக் கூடிய உறுதிமொழியே ஆகும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறபோது எம்.ஜி.ஆர். அரசு அளித்த வாக்குறுதியையும், ஜெயலலிதா சட்டப்பேரவைக்குள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் நியமனம் 69 சதவிகித அடிப்படையில் செய்வோம் என்று கூறிய உறுதிமொழியையும் செயல்படுத்தப்படுவது இவ்வரசுக்குக் கூட பெருமையாக முடியுமே. சட்டத் தடைகளோ, தீர்ப்பு இடைகளோ குறுக்கே நிற்காதபோது செயல்படுத்த அலட்சியம் காட்டலாமா?

———————