சல்லியர்கள் – விமர்சனம்
நடிப்பு: சத்யாதேவி, எஸ்.கருணாஸ், திருமுருகன், ஜானகி, மகேந்திரன் கந்தையா, நாகராஜ், பிரியாலயா, ஆனந்த் சௌந்தரராஜன், மோகன், சந்தோஷ் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: தி.கிட்டு
ஒளிப்பதிவு: சிபி சதாசிவம்
படத்தொகுப்பு: சி.எம்.இளங்கோவன்
இசை: கென் & ஈஸ்வர்
பாடல்கள்: கவிஞர் வைரமுத்து & தி..கிட்டு
கலை: முஜிபூர் ரஹ்மான்
சண்டை அமைப்பு: சரவெடி சரவணன் & பிரபாகரன் வீரராஜ்
ஒப்பனை: அப்துல்
தயாரிப்பு: இந்தியன் சினிவே
தயாரிப்பாளர்: எஸ்.கருணாஸ் & பி.கரிகாலன்
இணை தயாரிப்பாளர்: சாத்தனூர் சிவா, நேசமணி ராஜேந்திரன் & ராவணன் குமார்
வெளியீடு: ’வி ஹவுஸ் புரொடக்சன்’ சுரேஷ் காமாட்சி
ஓடிடி தளம்: ஓடிடி ப்ளஸ் (OTT PLUS)
பத்திரிகை தொடர்பு: ஏ.ஜான்
இலங்கையின் பூர்வக்குடிகளான ஈழத்தமிழர்களின் உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பறித்து, அவர்களது சொந்த மண்ணிலேயே அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக இழிவாக நடத்தியதோடு, அவர்களுக்கு எதிராக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில ஆக்கிரமிப்பு, மொழித் திணிப்பு போன்ற கொடூரங்களையும் ஏவி சொல்லொண்ணா கொடுமைகள் செய்து வெறியாட்டம் நடத்தி வந்தது சிங்களப் பேரினவாத அரசு. ‘இனியும் பொறுக்கலாகாது’ என்று அந்த வெறியாட்டத்துக்கு எதிராக, ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’ என்ற போராளி அமைப்பைத் தொடங்கி, கையில் ஆயுதத்தையும், புறநானூறு படைத்த தமிழர் வீரத்தை நெஞ்சிலும் ஏந்தி ‘சுதந்திர தமிழீழம்’ என்ற கோரிக்கையுடன் போர்க்களம் கண்டார், ஈழத்தமிழர்களின் தேசியத் தலைவரான மாவீரன் பிரபாகரன். அவரது இயக்கத்தில் சேர்ந்து அறம் வழுவாமல், தியாக உணர்வுடன் மருத்துவ சேவை செய்த மருத்துவர்கள் தான் ‘சல்லியர்கள்’. அவர்களது பெருமையையும், உன்னதத்தையும் பேசும் படம் இது என்பதால், இப்படத்துக்கு ‘சல்லியர்கள்’ என்று பொருத்தமாக பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
ஈழ மண்ணில் சிங்கள பேரினவாத ராணுவத்தினருக்கும், வீரம் செறிந்த விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகளுக்கும் இடையே போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. இப்போரில் விடுதலைப்புலிகள் காயமடைந்தால், அவர்களைக் காப்பாற்றுவதற்காக, ‘பதுங்குக்குழி மருத்துவமனை’கள் அமைக்கப்படுகிறது. அத்தகைய ‘பதுங்குக்குழி மருத்துவமனை’ ஒன்றில் மருத்துவராகப் பணியாற்றுகிறார் நாயகி நந்தினி (சத்யா தேவி). சரியான உணவு, உறக்கம் இல்லாமல் கடமையாற்றும் அவர், காயமடைந்த போராளிகளுக்கு மட்டுமல்ல, சிங்கள ராணுவ வீரர்கள் காயமடைந்து வந்தால், அவர்களுக்கும் மருத்துவ அறத்துடன், பாரபட்சமின்றி, சிகிச்சை அளிக்கிறார். அவருக்கு உதவி செய்வதற்காக தலைமை மருத்துவமனையிலிருந்து மருத்துவர் செம்பியன் (மகேந்திரன் கந்தையா) அனுப்பப்படுகிறார்.
இந்நிலையில், புலிகள் அமைப்பின் மருத்துவப் பிரிவை அழித்தால், புலிகளை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று முடிவு செய்கிறது சிங்கள ராணுவம். அது ’பதுங்குக்குழி மருத்துவமனை’கள் மீது வெடிகுண்டுகளை வீசி கொடூரத் தாக்குதல் நடத்துகிறது. இதில் மருத்துவர்கள் நந்தினி, செம்பியன் போன்றோர் உயிர் தப்பினார்களா, இல்லையா? அதன்பிறகு என்ன நடந்தது? என்பன போன்ற கேள்விகளுக்கு உணர்ச்சிகள் ததும்ப விடை அளிக்கிறது ‘சல்லியர்கள்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகி மருத்துவர் நந்தினியாக சத்யாதேவி நடித்திருக்கிறார். இப்படியும் நடிக்க முடியுமா என்று வியக்கும் அளவுக்கு, கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து, போர்க்கள மருத்துவராகவே அச்சு அசலாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். அளவான உரையாடல், தெளிவான முடிவு, விவேகமான செயல்பாடு என்று தமிழீழ மருத்துவப் போராளியை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார். பாராட்டுகள் சத்யாதேவி
மருத்துவர் செம்பியனாக மகேந்திரன் கந்தையா நடித்திருக்கிறார். தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் வித்தியாசம் காட்டி கவனம் ஈர்க்கிறார்.
நாயகியின் தந்தை மதியழகனாக எஸ்.கருணாஸ் நடித்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும், ஈழத்தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அவர் பேசும் வசனங்களும், நடிப்பும் அற்புதம்.
சிங்கள ராணுவ அதிகாரிகளாக வரும் திருமுருகன், சந்தோஷ், மோகன் உள்ளிட்டோர் கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான தேர்வு.
ரசிப்புக்குரிய காதலர்களாக அறிமுகமாகி, பிறகு போராளிகளாக மாறி, பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடித்து விடுகிறது நாகராஜ் – பிரியலயா ஜோடி.
எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் தி.கிட்டு. இவர் ஏற்கெனவே தேசியத்தலைவர் பிராபகரனின் சிறுவயது வாழ்க்கை மற்றும் இளம் வயதில் அவர் ஆயுதப் போரைத் துவங்கியது ஆகியவற்றை உள்ளடக்கிய ‘மேதகு’ என்ற அற்புதமான படத்தை எடுத்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘சல்லியர்கள்’ படத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி இதுவரை சொல்லப்படாத அருமையான விசயங்களை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதோடு, இனப் பாகுபாடின்றி உயிரைக் காப்பாற்றும் உயரிய நோக்குடன் செயல்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மருத்துவப் போராளிகளின் போர்க்கள வாழ்வியலை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
”போராளிகளுக்கு உயிரைவிட பிறந்த மண்ணே உன்னதமானது” என்பதை வசனங்கள் மூலமாக மட்டும் இன்றி, காட்சிகள் மூலமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் தி.கிட்டு, “நம் உயிரை நாம் விதையாக விதைக்கிறோம். ஒரு நாள் அது வெடித்து சுதந்திரமாக நிற்கும்” என்பது உள்ளிட்ட பல கூர்மையான மற்றும் உணர்வுப்பூர்வமான வசனங்கள் மூலம் பார்வையாளர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார். பாராட்டுகள் இயக்குநர் தி.கிட்டு!
கென் மற்றும் ஈஸ்வரின் இசை, சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு, சி.எம்.இளங்கோவனின் படத்தொகுப்பு, முஜுபூர் ரஹ்மானின் கலை இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இயக்குநருக்கு பக்கபலமாக இருந்து, படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளன.
‘சல்லியர்கள்’ – தமிழன் என்ற உணர்வு உள்ள ஒவ்வொருவரும் அவசியம் பார்த்து கொண்டாட வேண்டிய வீரவரலாற்று பெட்டகம்!
ரேட்டிங்: 4.5/5
(குறிப்பு: இப்படத்தை ’ஓடிடி ப்ளஸ்’ (OTT PLUS) என்ற ஓடிடி தளத்தில் பார்த்து ரசிக்கலாம்!)
