“யாரோ ஆடும் சூதாட்டத்திற்கு யாரையோ பணயம் வைக்கிறார்கள்!” – ‘விழித்திரு’ இயக்குனர்

தமிழ் மொழிப் படங்களுக்கு 10 சதவீத கேளிக்கை வரியும், மற்ற மொழிப் படங்களுக்கு 20 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், “வருகிற வெள்ளிக் கிழமை (அக்டோபர் 6ஆம் தேதி) முதல் புதிய தமிழ் படங்கள் வெளியிடப்பட மாட்டாது” என்று திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

இதனால், வருகிற வெள்ளிக் கிழமை திரைக்கு வருவதாக இருந்த ‘விழித்திரு’, திட்டிவாசல்’, ‘களத்தூர் கிராமம்’ போன்ற சிறு முதலீட்டுப் படங்களின் படக்குழுவினர் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளார்கள்.

‘விழித்திரு’ படத்தின் இயக்குனர் மீரா கதிரவன் இது குறித்து கூறியிருப்பதாவது:

திடீரென அறிவித்த ஸ்டிரைக் காரணமாக உருவாகும் பொருளாதார நஷ்டத்தைப் பற்றி பேச தயாரிப்பாளர் சங்க கூட்டத்திற்கு வந்திருக்கிறேன்… படத்தின் வியாபாரம் தொடர்பான பிரச்சினையின் பொருட்டு இங்கு வருவது இதோடு சேர்த்து எத்தனையாவது முறை என்று நினவில்லை. படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் தேடி கூட இத்தனை முறை அலைந்ததில்லை.

சினிமாவில் கூட்டாகச் சேர்ந்து இயங்குவது தான் பலம்; அது தான் ஆகப்பெரிய பலவீனமும். அறமற்ற சில மனிதர்களுடன் பழகுவதாலும் பணிபுரிவதாலும் மனம் மிகவும் களைப்படைகிறது. யாரோ ஆடுகிற சூதாட்டத்திற்கு யாரையோ பணயம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு மீரா கதிரவன் கூறியுள்ளார்.

‘திட்டிவாசல்’ படத்தின் இயக்குனர் மு.பிரதாப் முரளி கூறியிருப்பதாவது:

நினைச்சா ஸ்ட்ரைக்கா…? 6ஆம் தேதி இத்தனை படம் ரீலீஸு… ‘களத்தூர் கிராமம்’ படத் தயாரிப்பாளர் கிட்ட யாருமே கேட்கல… ‘விழித்திரு’ படத் தயாரிப்பாளர் விடியல் ராஜீ, ‘திட்டிவாசல்’ பட தயாரிப்பாளர் சீனிவாச ராவ் கிட்ட எதுமே கேட்கல  பின் எப்படி தயாரிப்பாளர் அனைவரும் எடுத்த முடிவாக இருக்கும்…?

இப்படி தன்னிச்சையாக செயல்படும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த தான்தோன்றித்தனம் வன்மையாக கண்டிக்கத்தக்க ஒன்று.

இவ்வாறு மு.பிரதாப் முரளி கூறியுள்ளார்.